நகரும் புல்வெளி : 043
அழகாக இருக்கிறது அந்த ஏரி – ஆம். ஆனால் … இரவு 11 மணிக்கு மேல் காலை 07 மணிக்குள் ! மற்ற நேரங்களில் ? சொல்ல விரும்பவில்லை. மனிதர்கள் படையெடுப்பில் ஏரி தன்னை இழப்பதை வார்த்தைகளில் சொல்வது இரண்டாம் வலி !
பதினோரு மணிக்கு மேல் ஏரியை நோக்கி நடந்த போது … வித்தியாசமாக பார்த்த மனிதர்களில் ஆரம்பமாகிறது இயற்கையின் வாழ்க்கை. ஆம். இயற்கை எப்போதும் அழகு. நாம் தாம் அருகே சென்றுவிட்டு, அதன் சமநிலை அழகை அழித்துவிட்டு … மீண்டும் நம் இடத்திற்கு வந்துவிட்டு இயற்கைக்கு Rating செய்கிறோம் ! உண்மையாக நாம் Rating போட வேண்டியது .. நமக்கு ! இயற்கைக்கு அருகில் சென்று வந்த பின் என்னை நான் மீண்டும் பெற்று விட்டேனா ? என்பதே Rating இன் அளவு !
இரவில் ஏரி நீரின் அமைதியை நீங்கள் ரசித்தது உண்டா ? இரவு / நீர் / இருள் மூன்றும் மோக மௌனம் உடையவை. எல்லைக்குள் அடைபட்ட நீர் எங்கும் நகராமல் தனக்குள் பிரசவிக்கும் தருணம் அது ! அந்த நீரை தனக்குள் வைத்து இரவு செய்யும் தியானத்திற்கு தடை வராது காக்கும் திரை தான் இருள் ! இதையெல்லாம் ரசிக்காமல் மதுவில், xxxx இல் தன்னை இழக்கும் மனிதனை என்னவென்று சொல்வது ! செலவற்ற போதை இயற்கை. செலவு சார் போதை செயற்கை. மனிதன் எப்போதும் அப்படித்தான் ! எது சரியில்லையோ அதைத் தான் முதலில் விரும்புவான். உடல் மனம் ஆன்மா கெட்ட பின் இயற்கையிடம் ஓடிவந்து அழுவான். அவனையும் வைத்து தியானம் செய்ய இதே இரவு / இருள் / நீர் அப்போது தயாராகும் !
அதிகாலையில் ஏரி இன்னமும் மௌனமாக நின்று கொண்டு இருந்தது. மெதுவாக ஓடிக்கொண்டே ரசித்த போது தான் புரிந்தது .. 7 Kms ஓடியும் சொட்டு வியர்க்கவில்லை. ஆனால் உற்சாகம் உள்ளே இருந்து வியர்த்து கொண்டே இருந்தது. ஓரிடத்தில் அமர்ந்த போது என்னை கடந்த வெளிநாட்டுப் பெண் கேட்டார் ..
” Done ? ”
ஆம் என்று தலையசைத்தேன்.
” With this Climate and Visual, I will never say Done. Yes. Starting Again. ”
என்று ஓடிக்கொண்டே சொன்னார்.
உள்ளே என்னவோ செய்தது.
ஆம்.
இந்த ஏரி, இந்த அழகு, இந்த இயற்கை, இந்த மென் பனி, இந்த குளிரில் … முடிந்தது என்று சொல்ல முடியுமா என்ன ?
ஆகவே .. மீண்டும் ஆரம்பிக்கிறேன்.
நல்லவைகளுக்கு ” Done ” என்று இல்லவே இல்லை என்று யதார்த்தமாக புரியவைத்த அந்த யாரோ பெண்மணிக்கு எம் நன்றிகள். ” யாரோ ” மனிதர்கள் தான் நம் வாழ்வின் பெரும் அழகு !