நான் எனப்படும் நான் : 030
#WhoisJay ; 005
உங்களால் எப்படி இப்படி பொறுமையாக கேட்க முடிகிறது / பேச முடிகிறது / இருக்க முடிகிறது ?
இந்த உலகின் மிகப்பெரிய சவால் பேசுவது அல்ல. பேசுவதை கேட்பது. அப்படி என்ன தான் பேசுகிறார்கள் மக்கள். அவற்றை சில வகைகளாக பகிர்கிறேன்.
முதல் வகை ;
💐 நிறைய நேரங்களில் நம் மக்கள் ” என்ன பேசுகிறோம் ” என்று தெரியாமலேயே பேசுவார்கள். பேசுவதை பேசிவிட்டு அதன் வலி கேட்பவர்களுக்கு என்னவென்று இருக்கும் என்றும் தெரியாமல் சிரிப்பார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இது எப்படி இவர்களால் முடிகிறது ? இதே கேள்வியை நாம் கேட்டால் ஒத்துக்கொள்வார்களா ? என்று எனக்கு அப்போது தோன்றும்.
ஒருமுறை என்னை மதிய விருந்துக்கு அழைத்த பெண் சொன்னார்.
” பொதுவாக பிச்சைக்காரர்களுக்கு உணவு வைத்துவிட்டு தான் விருந்தளிப்பேன். இன்று அவர்கள் யாரும் வரவில்லை. நீங்கள் வந்து விட்டீர்கள். வாங்க சாப்பிடலாம் ”
இதுதான் ” என்ன பேசுகிறோம் ” என்று தெரியாமலேயே பேசுவது. நகைச்சுவையாக தோன்றினாலும் வலி மிகு வார்த்தை அது – பலருக்கு. நான் சிரித்து கொண்டே சொன்னேன் ..
” அதுதான் நான் வந்திட்டேன் ல ”
அவருக்கு தான் தவறாக பேசியதின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது. உடன் மன்னிப்பு கேட்டார். ” நான் அப்படி சொல்லவில்லை ” என்று வருந்தினார். ஆனாலும் அப்படி பேசியிருக்க கூடாது என்று மீண்டும் மன்னிப்பு கேட்டார்.
பேசிவிட்டு மன்னிப்பு கேட்பது இருக்கட்டும். பேசும்முன் யோசித்து பேசினால் என்ன ?
ஆணி அடித்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு ஆணியை எடுத்துவிடலாம். ஆனால் ஆணி அடித்த இடத்தின் வலி ?
*******
இரண்டாம் வகை ;
💐 ” எல்லை தாண்டி ” பேசுவது – இப்படி இருக்கும் மனிதர்களை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பொதுவாக நமக்கு எல்லைகள் உண்டு. வார்த்தைகளில் அது நமக்கு இல்லை என்பது போல நடந்து கொள்வோம்.
” முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் ஏன் அவ்வளவு இடைவெளி ? ”
” நீங்கள் ஏன் வேலைக்கு செல்லவில்லை ? ”
” உங்கள் வீட்டில் ஏன் பெரிய tv இல்லை ? ”
” உங்களின் முதல் மனைவி எப்படி இறந்தார் ? ”
” உங்களின் கணவருடன் நீங்கள் இப்போது இல்லையா ? ”
” தனியாக வாழ்வது சிரமமாக இல்லையா ? ”
” கடைசியாக எப்போது இடம் வாங்கினீர்கள் ? ”
” ஏன் இன்னும் வீடு கட்டவில்லை ? ”
” இரண்டாவது பெண்ணுக்கு நகை வாங்க ஆரம்பித்துவிட்டீர்களா ? ”
” ஏன் அந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்தீர்கள் ? ”
மனிதர்களின் கேள்விகளை போல ஒரு எல்லை தாண்டும் பயங்கரவாத செயல் இல்லை.
இந்த கேள்விகள் எதுவும் இல்லாமல் ஒரு மனிதனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது எனில் நமக்கு எதற்கு பகுத்தறிவு ?
இன்னொருவரின் படுக்கை அறையை நாம் ஏன் பார்க்க முனைகிறோம் ?
இன்னொருவரின் வரவு செலவினை நாம் ஏன் ஓரக்கண்ணால் கவனிக்கிறோம் ?
இன்னொருவரின் Shoe அவருக்கு சரி வருமா ? அது அவருக்கு எத்தனையாவது Shoe ? …
என்றெல்லாம் எப்படி நம்மால் யோசிக்க முடிகிறது. ?
பொறுமையை சோதிக்கும் நிறைய வகை மனிதர்கள் இன்னும் உண்டு. ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
பயணிப்போம்.