நாளைய வெளிச்சம் : 001
#நாளையவெளிச்சம் ; 001
இன்றில் இருந்து அடுத்த சில வருடங்களில் மிகச்சிறப்பாக வரப்போகும் ஆளுமைகளை முன்னமே தெரிவிக்கிறேன். இவர்களை கவனியுங்கள். இவர்களின் திறமைகள் நாளைய வெளிச்சமாக மாற்றம் அடையும்போது, நாளைய இருள் விலக ஆரம்பிக்கும். அப்போது இங்கே சொல்லப்படும் விடயங்கள், அங்கே பேசப்படும் ! 100 ஆளுமைகளை இப்படி பட்டியல் இட விழைகிறேன். இந்த பட்டியல் எம் ஆழ்மன அலைவரிசையில் இருந்து வருவது என்பதை உளமார மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
பயணிப்போம்.
💐💐💐💐
மணிமாறன் ;
——————-
பலம் ;
———
💐 எளிய மனிதர்.
💐 நகைச்சுவை ததும்ப தன்னை விமர்சிக்கும் ஆளுமை.
💐 கற்றலின் மூலம் தன்னை திருத்தி கொள்ள முனையும் முனைப்பு.
💐 சந்தேகங்களை தெளிவாக கேட்டு புரிதல். தெளிதல். பயன்படுத்தி மீண்டும் அதை எழுத்துக்களால் பலரிடம் பகிர்தல்.
💐 தன் உடல்நிலையை மேம்படுத்த எடுத்த Diet முயற்சிகளில் இருக்கும் உறுதி.
நாளைய வெளிச்சமாக மாறக் காத்திருக்கும் திறமை :
———–————————————
💐 இவரின் எழுத்து எனக்கு பெரும் ஆச்சர்யம். எஸ். ராமகிருஷ்ணன் எழுத்தை போல மனதுக்கு மிக நெருக்கமாக செல்லும் இவரின் எழுத்து – படிக்கும் பலரை யதார்த்த நிலையில் யோசிக்க வைக்கிறது. கிராமத்து வழக்க வார்த்தைகளுக்கு பல எழுத்தாளர்களை உதாரணம் சொல்ல முடியும்.
அவரின் எழுத்தின் சில உதாரணங்களை இங்கே பகிர்கிறேன்.
💐💐💐
” …. இதில் மிளா என்பது ஒரு மிருகம். மலைப்பகுதியில் வாழும். இதை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த மிருகத்திற்கு என்று சில சிறப்பியல்புகள் உண்டு. இதற்கு கொஞ்சம் மந்த புத்தியும் முரட்டு சுபாவமும் உண்டு.
எந்த அளவுக்கு மந்த புத்தி என்றால் அது வழக்கமாக நடந்து செல்கின்ற பாதையில் ஏதேனும் புதர்களோ இல்லை தடைகளோ ஏற்பட்டால் அதை விட்டு விலகிச் செல்லாமல் அந்த பாதையில் செல்வதற்காக தன் சக்தியை எல்லாம் செலவழித்து அதை தகர்த்து எறிவதற்குத்தான் முயற்சி செய்து கொண்டிருக்குமாம்.
அதே குணத்தை அப்படியே பிரதி எடுத்ததுபோல சில குணாளக் குன்றுகள் மனிதர்களில் எங்கே இருக்கின்றார்கள் என்று ஒரு நிமிடம் நம்மையும், நம்மை சுற்றியும் பார்த்தால் கண்ணிற்கு நிரம்ப தட்டுப்படக்கூடும். ”
💐💐💐💐
” …. அந்த ஹோட்டலில் புரோட்டாவும் ஆம்லெட்டும் மட்டுமே கிடைக்கும். காலையில் அவனை எழுப்பி ஓடுவதற்கு தயார் செய்வேன். அவனோடு நானும் ஓடுவேன். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ஓய்வெடுத்துக் கொண்டு கையோடு கொண்டு வந்திருக்கும் மாதுளையை நான் பார்க்க பார்க்க உரித்து உள்ளே தள்ளுவான்.
ஓடுவதற்கு அவன் மட்டும் வராமல் அவனோடு ஒரு மஞ்சள் பையும் அதனுள்ளே பழ வகைகளும் சேர்ந்தே வரும். ”
💐💐💐💐
” … இப்படி இருக்கையில் இரண்டு மாதத்தில் அதில் ஏதாவது ஒருநாள் நாங்கள் பதினைந்து பேர் கொண்ட ஒரு குழுவாக காட்டிற்கு சென்று சமையல் செய்து சாப்பிடுவோம். அந்த சமையலில் பெரும்பாலும் இடம் பெறுவது முட்டைக் குழம்பு.. அரிதாக நாட்டுக்கோழி குழம்பு.
விறகு எல்லாம் அங்கேதான். பாத்திரம், மளிகைப் பொருட்களை மட்டும் வீட்டில் இருந்து தெரியாமல் எடுத்துச் செல்வோம்.
ஒருநாள் காசி அறிவித்தான்.
” ஏலேய் இன்னக்கி நாம கோழி சாப்பிட்டே தீரனும்ல”
“காசு எங்க இருக்கு.. பேசாம கிடல”
” நீ சும்மா இரி.. நாம யாருக்கும் தெரியாம ஒரு கோழிய களவாம்போம்” ”
💐💐💐💐
” …..கோழி எப்படி புடிக்கனும்னு தெரியுமால”
சொல்லித் தொலை
“மொதல்ல ஈர சாக்கு ஒண்ணு வச்சிகிடனும்”
“சரி”
“பிறவு கோழி எங்க கிடக்குன்னு ஒரு ஐடியா பண்ணிக்கிடனும்”
“சரி”
“நீ என்ன பண்ணுதன்னா நான் கோழிக்கு கெளக்க நிக்கேன்”
“சரி”
“நீ மேக்க நின்னு நான் இருக்குற தெசைக்கி பத்தி வுடு”
“சரி”
“நான் டப்புன்னு ஈர சாக்க வச்சி கிளாக் பண்ணிருதேன்”
அதை லாக் என்று புரிந்து கொள்ள நான் அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. ”
💐💐💐💐
சவால் :
———–
இவருக்கு முன் இருக்கும் ஒரே சவால் – தன் எழுத்து திறமையை உணர்ந்து அதை முழு ஈடுபாட்டுடன் அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது.
அப்படி கொண்டு சென்றால் ?
நாளைய வெளிச்சம் ;
——————————–
அநேகமாக தமிழ் வாசிப்பாளர்கள் கொண்டாடும் பெரும் எழுத்தாளராக இவர் மாறுவார். மேற்சொன்ன சவாலை மணிமாறன் செய்ய ஆரம்பித்தால், 2025 இல் குறிப்பிடத்தக்க எழுத்து ஆளுமையை .. இவர் அடையக்கூடும் !
💐💐💐💐