நான் எனப்படும் நான் : 36
#WhoisJay ;
011
💐💐💐
யாரோ சொல்லும் எதையோ நம்பிக்கொண்டு, என்ன நடக்குமோ, எப்போது நடக்குமோ, யார் என்ன சொல்வார்களோ … என்று பயந்து வாழும் மனிதர்களை கவனிக்கிறேன். என்ன வகையான மனிதர்கள் இவர்கள் ?
💐💐💐
பொதுவாகவே மனிதர்களால் சொல்லப்படும் நிறைய விஷயங்களில் சில விஷயங்களை நான் கவனிப்பதுண்டு.
💐 இது அவருக்கான உண்மையா அல்லது உண்மையா ?
💐 இது எனக்கு நன்மை பயக்குமா ?
💐 இதை நான் என்னுடன் வைத்துக்கொள்ளும் அளவிற்கு முக்கியமான ஒன்றா ?
💐 சொல்பவர் இதற்கு முன் என் வாழ்க்கையில் என்ன விதமான நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறார் ?
💐 சொல்பவர் புதியவர் எனினும் சொல்லும் விடயத்தில் எனக்கு நன்மை உண்டா ?
இவற்றிற்கு சரியான பதில் இல்லை என்றால் .. என் காதுகளில் அந்த வார்த்தைகள் விழுந்து அப்படியே வெளியேறிவிடும். (ஒரு காதில் நுழைந்து இன்னொரு காது வழி அல்ல. வந்த வழியேயே காதுக்குள் வராமலேயே வெளியேறிவிடும் )
💐💐💐
எதையாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் மனிதர்களுக்கு. ஒரு சிறு சோதனை ஒன்றை செய்து பார்ப்போம். நாம் தினசரி படிக்கும் கேட்கும் உணரும் நிகழ்வுகளில் எவ்வளவு நிகழ்வுகள் … நன்மை பயப்பவை !? மிகக்குறைவு ? அப்படி எனில் மிகக்குறைவான நன்மை பயக்கும் மனிதனைத்தான் நாம் உருவாக்கிகொண்டு இருக்கிறோம். யோசிக்க வேண்டிய விடயம் இது.
💐💐💐
சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஓர் நிகழ்வில் ” Content ” இல்லாத ஒன்றை பேசி ஒரு பேச்சாளர் ஒப்பேற்றி கொண்டு இருப்பதை கவனித்தேன். ” இன்னும் கொஞ்சம் கவனிப்போம் ஏதாவது நல்லது இருக்கும் ” வகையான ஆள் நான் இல்லை. விஷம் என்றால் விஷம் தான். மருந்து என்றால் மருந்து தான். விஷத்தை மருந்தாக இருக்குமோ என்றெல்லாம் யோசிக்க முடியாது – என்கிற வகை ஆள் நான். மெதுவாக எழுந்து வெளியேறி எனக்கான வேலைகளை கவனித்தேன். பேச்சு எப்படி இருந்தது என்ற கேள்வி வந்தபோது .. ” நீங்கள் இன்னும் வளர வேண்டி இருக்கிறது. பார்த்துக்கொள்ளுங்கள் ” என்று சொன்னேன். அவர் அதை காதில் வாங்கியதாக தெரியவில்லை. ” மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் ” என்பதற்காக பேசப்படும் பேச்செல்லாம் ஒரு பேச்சா என்ன ?
என்னை பொறுத்தவரை பேச்சு என்றால் அது நமக்குள் ஓர் அசௌகர்யத்தை ஏற்படுத்த வேண்டும். நம் ” Comfort zone ” வளையத்தை உடைத்து நம்மை வெளியே எடுக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் .. நாம் அணிந்திருக்கும் முகமூடியை வார்த்தைகளால் கிழித்து எறிய வேண்டும். அப்படி இல்லாத ” ஹி ஹி ஹா ஹா “பேச்சு எல்லாம் ஒரு பேச்சா என்ன ?
💐💐💐
சரி .. இதை எல்லாம் அடுத்த நாளைக்கு கொண்டு செல்வேன் என்றா நினைக்கிறீர்கள் ?. வாய்ப்பே இல்லை. என்னை பொறுத்தவரை 24 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டியதை செய்து விட்டு மறுநாள் காலையில் அடுத்த 24 மணி நேர உலகத்திற்கு தயாராகும் மனிதன் நான். ஆம். விழிப்பு என்ற ஒரு இன்னொரு 24 மணி நேர வாய்ப்பு எனக்கு கிட்டினால் !
💐💐💐