நான் எனப்படும் நான் : 38
#WhoisJay ; 013
ஆங்கிலத்தில் பேசும்போது, ஆங்கில வாசியை போல பேச வேண்டுமா ? நேற்று யாரோ ஒருவரிடம் இருந்து ஒரு கேள்வி. அப்படி பேசாதவரை பற்றிய கிண்டலும் !. மனம் கொஞ்சம் பின்னோக்கி பயணித்தது. மனிதர்கள் தான் எவ்வளவு வித்தியாசமானவர்கள் ?
💐💐💐
நான் தமிழ் வகுப்பில் படித்தவன். முதல் முறை ஒரு நாள் முழுக்க ஆங்கில வகுப்பே கல்லூரி காலத்தில் தான் நான் பார்க்க முடிந்தது. கொஞ்சம் கடினமாகவும், பெரும் அதிர்ச்சியாகவும் இருந்த தருணம் அது. என்னுடன் அருகில் இருந்த மாணவனும் அதிர்ச்சியாக இருப்பதை பார்த்தபோது கொஞ்சம் ஆறுதல் ! ” தமிழா ? ” என்று நான் கேட்க அவன் ” ஆங்கில medium ” என்று சொன்னான். இப்போது எனக்கு இரு அதிர்ச்சி. ” பிறகு ஏன் இப்படி shocking ஆக இருக்கிறாய் ? ” என்று நான் கேட்க அவன் சொன்ன பதில் … ” அவர் பேசும் கொச்சையான ஆங்கிலம் பார்த்து தான் shock ஆகி நிற்கிறேன். ” என்றான். இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அப்போது தான் சில விஷயங்கள் புரிந்தது.
💐 நமக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனில் ஆங்கிலம் பேசுபவரை சரியாக பேசுகிறார் என்று பார்க்கிறோம்
💐 நமக்கு ஆங்கிலம் தெரிந்தால் பேசுபவரின் ஆங்கில பிழைகளை கவனிக்கிறோம்.
💐 ஆங்கிலத்தில் பேசினால் அவர் உயர்ந்தவர் என்ற மனநிலை இன்றும் இருக்கிறது.
💐 ஆங்கிலத்தில் தவறாக பேசினால் அவர் தாழ்ந்தவர் என்ற மனநிலையும் இருக்கிறது.
💐💐💐
கல்லூரி காலம் முடித்து, பயிற்சியாளராக என்னை நான் அறிமுகப்படுத்தியபோது … இந்த ஆங்கிலமா நானா என்று பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தபோது ஒன்று புரிந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் வரை தமிழ் தான் பேசுவோம். ஆகவே முதலில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, ஆங்கிலம் மட்டுமே பேசி, பின் தமிழ்நாட்டிற்கு வருவோம் – என்று முடிவெடுத்து … நான் ஆங்கிலம் பேச ஆரம்பித்து சில வருடங்களில் அது வசப்பட ஆரம்பித்தது ! அப்போது எடுத்த ஒரு முடிவு .. எதிர்காலத்தில் புத்தகம் எழுதினால் முதலில் ஆங்கிலம் – அதன் பின்பே தமிழ் – என்ற முடிவினை எடுத்து SOW – Soul of a Wanderer – மூலம் அதை செய்தேன். அடுத்தது உடனே தமிழ் புத்தகம். இது ” முடியும் ” என்று எனக்குள் நான் சொல்லிக்கொள்ளவே.
இந்த காலகட்டத்தில் ஆங்கிலம் – தேவையான இடங்களில் தேவையான தொனிகளில் மட்டுமே பேசினேன். என் UK நண்பர்களுடன் பேசும்போது இப்போதும் அந்த ” Hi Fi ” தொனி அழகாக வரும். ஆனால் அப்போதே மறையும். அந்த தொனியை வைத்து நான் யாரையும் அளப்பதில்லை. ஆங்கிலவாசி பேசும் style எங்கு தேவையோ அங்கே தான் எம்மிடம் இருந்து வரும். Simple ஆக பேசும் மனிதர்களிடம் ஆங்கில வாசி பேசும் style எம்மிடம் வராது. அறிவின் முதல் கட்டம் மனிதர்களை அவர்களாகவே மதிப்பது. அவர்கள் பேசும் விதத்தை வைத்து அல்ல !
💐💐💐
இப்போது முதல் Paragraph கிற்கு வருகிறேன். ” ஆங்கிலத்தை தமிழ் போல பேசுவதாக ” கிண்டல் செய்தவரிடம் கேட்டேன்.
” நீங்கள் ஆங்கிலம் பேசுவது உண்டா ? ”
” Yeah ” என்றார் style ஆக !
” சச்சின் ஆங்கிலம் பேசி பார்த்தது உண்டா ? ”
” பார்த்திருக்கிறேன் ” என்றார் தமிழில்.
” மராட்டிய மொழி வாசியை போல அவர் ஆங்கிலம் பேசுவதால் … அவர் என்ன குறைந்து போனார் ? ”
கிண்டல் செய்தவர் அமைதியாக இருந்தார்.
” Mary Kom பேச்சை கேட்டது உண்டா ? ”
இப்போதும் அவர் அமைதியாக இருந்தார்.
சிரித்து சொன்னேன்.
” மனிதர்களை கவனிப்போம். அவர்கள் பேசும் விதத்தினை அல்ல. பேச்சின் content ஐ கவனிப்போம். மொழியை அல்ல ! ” என்று மென் சிரிப்புடன் சொல்லினேன்.
” sorry ” என்று ஆங்கிலத்தில் சொன்னார். இப்போது அந்த ஆங்கில வாசி style காணாமல் போயிருந்தது.
யோசிப்போம் மக்களே. உடை, மொழி, பேச்சு, வைத்திருக்கும் பொருட்கள் .. எல்லாவற்றையும் கடந்து மனிதன் என்று ஒருவன் உள்ளே இருக்கிறான் அல்லது இருக்கிறாள். அங்கே கவனம் செல்லட்டும்.
💐💐💐





