நான் எனப்படும் நான் : 039
#WhoisJay ; 014
💐💐💐
நானாகவே சிலருக்கு, நல்ல எண்ணத்துடன் .. சில விஷயங்களை சொல்ல முயற்சிப்பது உண்டு. அப்போது அதற்கு வேறு பெயர் கொடுக்க முயற்சிக்கும்போது … நானாகவே பேசியதுதான் தவறு என்று புரிந்து .. அமைதியாக ஒதுங்குவது உண்டு. அங்கே தான் ” கேட்டால் கொடுப்போம். இல்லை எனில் கேட்கும் வரை காத்திருப்போம் ” என்கிற ஓர் குணம் வருகிறது.
💐💐💐
எண்ணங்களில் உதவுதல் – மிக முக்கியமான ஒன்று. அதை மனிதர்கள் தவறாக எடுக்க முனையும்போது எண்ணங்களில் உதவுதல் கிடைக்காமல் போகும். ஆச்சர்யம் என்னவெனில் … எண்ணங்களில் உதவியை மறுத்துவிட்டு, நினைத்தபடி செயல்கள் செய்து, கடைசியில் .. அதே எண்ணங்களை புரிய நினைப்பது தான் ! எண்ணம் தான் செயலின் வேர். செயல் எண்ணமாக மாற வாய்ப்பில்லை !
💐💐💐
ஒருவர் தவறாக நடப்பது தெரிகிறது. அதை சொல்ல முயற்சிக்கிறோம். ஒருவர் சரியாக நடப்பது தெரிகிறது. அவரை பாராட்டுகிறோம். இதை முதலில் செய்வதால் நாம் தவறானவாராக மாறுகிறோம் எனில் .. தவறு எங்கே வருகிறது ? சொல்வதிலா ? Receive செய்வதிலா ? அல்லது கேட்காத போது சொன்னதிலா ? என்னை பொறுத்தவரை மூன்றாவதே. பசி இல்லாத போது அளிக்கப்படும் உணவிற்கு மரியாதை இருக்கப்போவதில்லை. மேலும் அது வீணான ஒன்றாகவே மாறும். இப்போதெல்லாம் கேட்டால் சொல்கிறேன் .. இல்லை எனில் சிரித்து நகர்கிறேன். ” அவரின் வாழ்க்கை. அவரின் எண்ணம். அவரின் எதிர்காலம். ” என்று எண்ணங்கள் அழகாக வருகிறது. தாயும் சேயும் ஒன்று எனினும், வாயும் வயிறும் வேறு – என்பது என்ன ஓர் அழகான பார்வை ! ?
💐💐💐
எதிரே தெரிந்த மலையில் ஏறப்போகும் ஒருவனுக்கு .. அங்கே இருந்த ஒரு யோகி ஒரு வரி சொன்னார் ..
” மெதுவாக சென்றால் ஒரு நாளில் மேலே ஏறி விடலாம் “.
சிரித்த அந்த ஒருவன் சொன்னான் .. ” நான் வேகமாக ஏறுவேன் “. யோகி பதில் ஒன்றும் சொல்லவில்லை.
மூன்று நாட்களுக்கு பின் மேலே ஏறிய அந்த ஒருவன் மனதுக்குள் சொன்னான்
” யோகி சொன்னது சரிதான். மெதுவாக வந்திருந்தால் ஓர் நாளில் வந்திருக்கலாம். வேகமாக வந்து, உடல் அசதியாகி, ஓய்வெடுத்து ….மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ”
அப்போது அவனுக்கு முன்னதாகவே மேலே வந்திருந்த அதே யோகி சொன்னார் …
” இரு நாட்களாக இங்கே இதமான வெப்பநிலை. நாளை மழை வரக்கூடும். நான் இப்போதே கீழே கிளம்புகிறேன் ”
💐💐💐