நான் எனப்படும் நான் : 041
#WhoisJay : 016
💐💐💐
அவ்வளவு எளிதாக வாழ்க்கை வசப்படவில்லை.
இன்னும் ஞாபகம் இருக்கிறது. மழை பெய்தால் ஒழுகும் கூரை வீடு தான் எங்களுடையுது. தூங்கிக்கொண்டு இருக்கும்போது அம்மா ” டேய் உள்ளே வாடா. மழை பெய்யும்போல இருக்கு ” என்று சொன்ன கணங்கள் இன்னும் நினைவில் ! இன்று மழையை புகைப்படம் எடுக்கும் அதே நான் தான் மழையில் நனையா இடமாக பார்த்து படுத்து உறங்கினேன். ஆனாலும் இன்னும் மணமாக மனதில் இருக்கிறது அந்த கூரை வீடு !
வாசல்படிக்கு இடது கைப்பக்கம் சமையல் அறை. வலது கைப்பக்கம் காலி இடம். அடுத்ததாக ஒரு சிறிய அறை. அதற்குள் இன்னொரு அறை. அந்த அறை தான் உடை மாற்றிக்கொள்ள. வீட்டின் பின்புறம் பெரிய வெற்றிடம். அங்கே இரண்டு மாடுகள். வீட்டு வாசற்படிக்கு முன் நகராட்சியில் இருந்து வரும் நல்ல தண்ணீர் குழாய். நீண்ட தெரு. TV கிடையாது. Cellphone கிடையாது. பகலில் சூரிய ஒளி வரும் அதே ஓட்டை வழிதான் மழை பெய்யும் போது நீர் வரும்.
Radio வும் Tape Recorder ம் தான் அப்போதைய பெரும் பொழுதுபோக்கு. காலை ஆஹாசவாணி செய்தி வாசித்த சரோஜ் நாராயன்ஸ்வாமி இன்னும் ஞாபகத்தில்.! இரவு BBC தமிழோசை. அப்பா உலக நடப்பை அழகாக தெரிந்து கொள்வார். பேசுவார்.
அப்பா அம்மா நான் தங்கை எல்லோரும் அந்த அறையில் தான் உறங்குவோம். Power போய்விட்டால் எனக்கும் தங்கைக்கும் அம்மா எழுந்து விசிறி விட்டது இன்னும் ஈர நினைவில். கொசுக்கடிக்கு பயந்து போர்வை போர்த்துவதா அல்லது வியர்வைக்கு பயந்து போர்வை விலக்குவதா என்று சிரித்து பேசியது இன்னும் அருகாமையில் !
இரவு உணவை பொதுவாக அனைவரும் அமர்ந்தே உண்டிருக்கிறோம். அன்று நடந்தவற்றை பேசிக்கொண்டே உண்ட நாட்கள் எல்லாம் .. தேன் நாட்கள். வெளியே விளையாடி கையில் காலில் காயம் பட்டு அதற்கு அப்பாவிடம் திட்டு வாங்கிய நாட்களும் உண்டு. அப்போதெல்லாம் தோசை வார்த்து பழகி இருக்கிறேன். Coffee போட்டு பழகி இருக்கிறேன். நீண்ட நாளைக்கு பின் ஷங்கர் வீட்டில் தோசை வார்த்த போது பழைய நினைவுகள். கண்ணுக்குள்ளே நீரை அடக்கிக்கொண்டேன். காய்ச்சலில் இருந்த அம்மாவுக்கு தோசை வார்த்தது இன்னும் பொக்கிஷமாக உள்ளே வேகிறது – தீய்ந்து விடாமல் – பதமாக !
பணிரெண்டாம் வகுப்பு வரை என் பிறந்த நாளுக்கு கேக் எல்லாம் வெட்டியது இல்லை. அம்மா அப்பாவிடம் ஆசீர்வாதம் மட்டும்தான் என்னின் நிஜ கேக். அம்மா இடும் திரு நீறு இன்னும் நெற்றியின் நினைவில்.
அவ்வளவு எளிதாக வாழ்க்கை வசப்படவில்லை.