நான் எனப்படும் நான் : 042
#WhoisJay ; 017
பயிற்சி வகுப்புகள் மற்ற வேலைகளை போல Just செய்துவிட்டு வீட்டுக்கு வந்து சேரும் வேலை அல்ல. பலரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட இது முதலில் வேலையே அல்ல. தவம் !
ஒரு பயிற்சி வகுப்புக்கு மனம் தயாராவது என்பது – கிட்டத்தட்ட முதல் நாள் மாலையில் இருந்தே ஆரம்பிக்கும். யாருக்கு இந்த வகுப்பு ? அவர்களின் சராசரி வாழ்க்கை பிரச்சினை என்னவாக இருக்க கூடும் ? எதை செய்ய முடிந்த மகிழ்வில் அவர்கள் இருக்கக்கூடும் ? எதை செய்யவில்லை என்று அவர்கள் வருந்தக்கூடும் ? அலுவலக பிரச்சினை என்னவாக இருக்கக்கூடும் ? இப்படி எல்லாம் நான் யோசிப்பேன் என்றா நினைக்கிறீர்கள் ? இல்லை. இல்லவே இல்லை.
பயிற்சி வகுப்புக்கு தயாராவது என்பது – எம் மனதினை நான் தயார் செய்வது. அமைதியின் உச்சம் நோக்கி அதை கொண்டு செல்வது. தெளிவான நீர்நிலையாய் அதை இருக்க வைப்பது. எம் மனநிலை தெளிவான நீர்நிலையாய் இருந்தால், வருபவர்களால் அவர்களின் உண்மையான முகத்தினை பார்த்து திரும்பி செல்ல முடியும். தெளிவான நீர்நிலை ? ஆம். இயற்கையின் கண்ணாடி தான் தெளிவான நீர்நிலை. அதில் தெரியும் பிம்பங்கள் தான் வாழ்க்கை பாடங்கள் !
நிறைய பயிற்சியாளர்கள் பயிற்சி வகுப்புகள் போது – வேறு சிந்தனைகளில் உழல்வதை கவனிக்கும்போது எனக்கு சிரிப்பாக இருக்கும். ” இப்போது இது முதல் பிரச்சினையா இவர்களுக்கு ? ” என்றும் தோன்றும். ஒரு மனம் தன் பிரச்சினையை சரி செய்ய நினைக்கும் தருணம் தான் பயிற்சி வகுப்பு ! எவ்வளவு பெரிய தருணம் அது ! அந்த நேரத்தில் ” தேநீரில் ஏன் சர்க்கரை அதிகம் ? ” என்றெல்லாம் எப்படி இவர்களால் யோசிக்க முடிகிறது ? என்று எனக்குள் சிரிக்க தோன்றும் !
பயிற்சி வகுப்புகளுக்குள் சென்று விட்டால் .. எனக்கு நேரம் போவது தெரிவதில்லை. கிட்டத்தட்ட ஒரு பிரசவ மனநிலை அது ! தனக்குள் வைத்திருக்கும் சேயை பத்திரமாக வெளிக்கொணர்ந்து – தேவைப்படுபவருக்கு அதை ஒப்படைத்து, பின் மௌனமாக வெளி நடப்பது தான் பயிற்சி வகுப்பின் பிரதான நிலை ! என்னிடம் இருந்து அவர்கள் பெற்றுக்கொண்ட குழந்தை அவரை / அவர்களை கேட்கும் கேள்விகளில், கவனித்துக்கொள்ளும் அக்கறைப் பாங்கினில், அவர்களை அவர்களின் எதிர்காலம் பற்றி யோசிக்க வைக்கும் விதத்தில் … எம் பயிற்சி வகுப்பு அங்கே வாழ்ந்து கொண்டே இருக்கும். ஏதோ ஒரு கட்டத்தில் நான் மறைவது உறுதி. ஆனால் …எம் பயிற்சி வகுப்புகள் காலம் முழுக்க வாழப்போவதும் உறுதி !
அப்படி ஒரு பயிற்சி வகுப்புக்கு தயாராகும்போது … இந்த உலகில் நடக்கும் எந்த ஒரு விடயத்திற்கும் நான் முக்கியம் கொடுப்பதில்லை. ” தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதே தெரியாத அல்லது தெரிந்த ஒரு மனதுடன் அல்லது மனங்களுடன் உறவாட தயாராகும்போது ” இந்த உலகில் நடக்கும் மற்ற விடயங்களை பற்றி நான் கவலை கொள்ள அவசியம் வேண்டியது இல்லை. ஏன் எனில் …தன்னை அறியும் மனம் உலகை மாற்றக் கூடியது – உலகம் எப்படி இருந்தாலும் !
பயணிப்போம்.