Slogging Songs : 24
#20K ;
ஞாயிறு என்பது தூங்கி எழ அல்ல. இந்த வாரம் முழுக்க செய்ய வேண்டியதில், செய்யாமல் விட்டவற்றை செய்வதற்கான நாள் அது. பயிற்சி வகுப்புகள் இருந்ததால் .. 20000 ஐ தொடுவதை மட்டுமே கவனம் செலுத்தி இருந்தேன். இப்போது 25. எப்போது வேலை இல்லை என்றாலும் உடனே ” நடக்க / ஓட / மெதுவாக ஓட / வேண்டியது தான். பின்னே ? TV பார்த்துக்கொண்டு உணவை ஒரு கை பார்க்கவா சொல்கிறீர்கள் ?
💐💐💐
இன்று உடன் பயணித்த பாடல் …
“தீ மூட்டியதே குளிர் காற்று
என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று ”
வெட்கத்தின் நிறம் பார்த்தது உண்டா நீங்கள் ? யாரும் பார்த்திருக்கவே வாய்ப்பில்லை. ஆம். வெளிச்சமற்ற இரவின் செல்லக் கொஞ்சல் அது. அதை உணர மட்டுமே முடியும். பார்க்க வாய்ப்பே இல்லை !
” உன் விரல் ஸ்பரிசத்தில் மின்னலும் எழுமே
அடடா என்ன சுகமே ? ”
வெளி மின்னல்கள் இருக்கட்டும். அவை எல்லாம் எல்லோருக்கும் பொதுவானவை. அக மின்னல் என்று ஒன்று இருக்கிறது. விரல் ஸ்பரிசத்தில் மட்டுமே வெளிவரும் அது … எல்லோருக்குமானது அல்ல. புரிதலில் உயரம் தொட்டவர்கள் மட்டுமே அதை உணர முடியும். அவர்களுக்கு மட்டுமே எழுதி கொடுக்கப்பட்ட ஒன்று இந்த அக மின்னல் !
” புல் நுனியினில் பனித்துளி போலே
உன் உயிருக்குள் நனைந்திட வந்தேன் ”
உயிருக்குள் நனைதல் தான் மனிதம். மற்றவைக்கு எல்லாம் வேறு பெயர். இன்று இருக்கும் உலகம் நனைதலை உணர்வதில்லை. எல்லாவற்றிலும் இந்த உலகத்திற்கு அவசரம் -காக்கை குளியல் போல ! புல் நுனியில் பனித்துளி வந்த தடம் தெரியாது காய்ந்து மறைய அவசரம் காட்டுவதில்லை. நிதான உலகின் உச்சம் என்று ஒன்று இருக்குமானால் அது புல் நுனி வாழ் பனித்துளியின் stillness தான் !
” மயங்குகிறேன் அதில்
உணர்வுகள் ஓய்வது ஏனோ ? ”
உணர்வுகள் ஓய்வது தான் இந்த உலகின் மயக்க நிலை. உணர்வுகளுடன் போராடுவது தன்னிலை. உணர்வுகளை மயக்க நிலைக்கு கொண்டு செல்வதே … இரு நிலை இணையும் ஓர் நிலை !
என்ன ? பாடலை கண்டுபிடித்தாயிற்றா ?
💐💐💐