நான் எனப்படும் நான் : 051
#WhoisJay ; 026
குடும்பம் ஓர் அழகு. அதிலும் சிரிக்கும் குடும்பம் இன்னமும் அழகு. இந்த குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்காதா ? இந்த குடும்பத்தில் ஏக்கங்கள் இருக்காதா ? இந்த குடும்பத்தில் பகைமை இருக்காதா ?
இதே குடும்பத்தில் பிறப்பு / இறப்பு இருந்திருக்காதா ? சோகம் / மகிழ்ச்சி இருக்காதா ? அனைத்தும் உண்டு. ஆனாலும் காலம் தான் முன்னே நிற்கும் மருந்து. காலம் எல்லாவற்றையும் கவனித்து கொண்டே இருக்கும். மனம் மாறினால் மனிதர்களை இணைக்கும். மாறவில்லை எனில் மனிதர்களை விலக்கும்.
💐💐💐
சின்ன சித்தப்பா ( நீல வண்ண சட்டை ) தான் என் சிறு வயது Hero. வேகம், கோபம் என்று இருக்கும் மனிதரின் பெயர் ” அன்பு “. நான் விடுமுறைக்கு வரும்போது சைக்கிளின் முன் என்னை அமரவைத்து சினிமாவுக்கும், ஹோட்டலுக்கும் அழைத்து சென்றவர். பொன்னமராவதியில் ஒரு தியேட்டரில் சைக்கிளை எடுக்கும்போது வந்த சிறு சண்டையில் அவரின் வேகம் இன்னும் ஞாபகத்தில். அதெல்லாம் இன்னும் DNA வில் இருக்கக்கூடும்.
கடின வாழ்க்கை குடும்பத்தில் வாக்கப்பட்ட சித்தி இன்று வரை உழைப்பு தான். மூன்று ஆண் குழந்தைகள். மூன்று தம்பிகள்.
💐💐💐
பெரிய சித்தப்பா போல கணக்கு ( கண்ணாடி அணிந்த ஆளுமை ) போட முடியாது. சிறு வயது முதல் ஒவ்வொரு உழைப்பின் வருவாயையும் சேமித்தவர். நிறுவனங்களில் ” கணக்கு ” பார்க்கும்போது .. பெரிய சித்தப்பா எனக்குள் வந்துவிடுவார். இன்று நிறுவனங்களை நான் கேட்கும் கேள்விகளுக்கு பின்புல DNA இவரிடம் இருந்துதான் வந்திருக்க கூடும் !
பெரிய சித்தி யின் உழைப்பு பிரமிக்கத்தக்க ஒன்று. Almost Zero வில் இருந்து ஆரம்பித்த வாழ்க்கை அவர்களுடையது. இவர்கள் இருவருக்கும் நான் மகன். என் தம்பிகள் மகன்கள்.
💐💐💐
அப்பா மேற்சொன்ன இருவரின் கலவை plus சில பெரும் ஆளுமையின் தனித்தன்மை. வார்த்தைகளின் வீச்சு தான் அப்பாவின் பலம். கூர்மிக்க கத்தியாய் விழும் – தவறு செய்யும்போது. பெரும் மாலையாய் விழும் – நல்லது செய்யும்போது.
தன் உழைப்பு / தன் வாழ்க்கை / நம் எதிர்காலம் என்ற வாழ்க்கை அவருடையது.
” நல்லது செய்துகொண்டே இரு. நல்ல சிந்தனை உடையவர்கள் மட்டுமே உடன் வர முடியும். மற்றவர்கள் தானாக விலகுவார்கள் ” என்ற ஒற்றை வரியில் … நான் இன்று வரை வாழ்கிறேன்.
அம்மா பற்றி எழுத யோசித்தால் கண்ணில் நீர் தவிர ஏதுமில்லை. அவள் சொல்லும் – ( ஆம். அவளுக்கு மட்டும் உரிமை அதிகம். ஆதலால் ” அவள் ” ) – ஒற்றை வரி – இன்னும் உள்ளே உழன்று கொண்டே இருக்கிறது.
” உதவி செய். உன்னால் முடிந்ததை செய். உனக்கும் எங்கோ யாரோ வந்து உதவுவார்கள். அவர்கள் தான் உன் சொந்தங்கள். “.
ஆம். விபத்து நடந்த போது எனக்கு உதவியவர்கள் இந்த ” யாரோ மனிதர்கள் ” தான்.
நீங்களும் என்னுடைய ” யாரோ மனிதர்களாகவே ” என் உடன் பயணித்து விடுங்கள். அந்த பந்தம் என் உயிர் உள்ளவரை உடன் இருக்கும்.
💐💐💐