நான் எனப்படும் நான் : 062
#WhoisJay : 037
#அப்பத்தா #கற்றல்வரிகள்
💐💐💐
என் வாழ்வின் பல முக்கிய முடிவுகளை எடுக்க யோசித்த காலங்களில் என்னுடைய அப்பத்தா சொன்ன பல ” கற்றல் வரிகள் ” முன்னே நின்று உதவி இருக்கின்றன. இங்கே அவற்றை பகிர்கிறேன். யாருக்கோ உதவலாம்.
மிக ஏழ்மையான குடும்ப சூழ்நிலை. கூரை வீடு. எருமை மாடுகள். வீட்டு வேலைக்கு செல்லுதல். தூக்கம். விழிப்பு. சமைத்தல். தாத்தா வை கவனித்து கொள்ளுதல். இவ்வளவுதான் அவரின் வாழ்க்கை. தாத்தா நல்ல உயரம். அநேகமாக 5.8 இருந்திருக்க கூடும். அப்பத்தா உயரம் குறைவு. அநேகமாக 5.5 இருக்கலாம். இருவருக்குமான வாழ்க்கையில் நிறைய முனகல்கள் இருந்தாலும் Made For Each Other Couple.
அப்பத்தா அடிக்கடி சொல்லும் ஒரு வரி …” செய்யாதவங்களுக்கு செஞ்சு காட்டுனும் “. கொஞ்சம் வீம்பு மாதிரி தெரிந்தாலும், அவர் சொல்ல வந்தது இதைத்தான் .. ” அவர்களுக்கு செய்ய தெரியவில்லை என்று சொல்ல கூடாது. வருத்தப்பட கூடாது. புறம் பேசக் கூடாது. அவர்களுக்கு முன்னமே எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்து காட்ட வேண்டும் “. பல மனிதர்களுக்கு இதை செய்து காட்டி இருக்கிறேன் என்று சொன்னாலும், மன்னிக்கவே முடியாத ஒன்றை செய்த உறவினருக்கு அவரின் கடுமையான நேரத்தில் உதவியதை தான் மிக பெருமையாக உணர்கிறேன். அப்பத்தாவின் யதார்த்த வரியின் பலம் அது !
” பணம் காட்டி பேசினால் நம்பாதே. அங்கே இருந்து விலகு ” – இது இன்றும் என்னுடன் பயணிக்கும் வரி. பணத்தால் முடியும் என்று யாராவது வீம்பு பேசினால் அல்லது நினைத்தால் அங்கே இருந்து நான் விலகி விடுவேன். அவர் என்ன பெரிய மனிதராக இருந்தாலும், அவரால் எந்த வாய்ப்புகள் வரும் என்றாலும் … bye தான். பணம் மனிதன் கண்டுபிடித்தது. அது தேவை என்பது வேறு. அதுதான் எல்லாம் என்பது வேறு. ” இது எங்கள் வீட்டின் பெரிய விஷயம். தங்கத்தில் செய்யப்பட்ட மினி புத்தகம் ( miniature ) என்றவரை நேர்க்கண்ணில் பார்த்துவிட்டு அவரிடம் ” வீட்டில் Library இருக்கிறதா ? ” என்று கேட்டேன். “இல்லை” என்றார். சிரித்துவிட்டு மனதில் bye சொன்னேன். இன்று வரை அவரின் வீட்டுக்கு செல்லவில்லை.
” முடியுமா என்று கேட்டால் முடியாது என்று சொல். ஆனால் முடிச்சிடு ” இது அப்பத்தா சிரித்து சொல்லும் விஷயம். மாடு மேய்க்கும் போது அடிக்கடி சொல்லும் வார்த்தை இது. எனக்கு அப்போதைக்கு புரியவில்லை என்றாலும் அது எப்படியோ உள்ளே சென்று இருக்கிறது. யாராவது ஏதாவது கேட்டால் ” தெரியவில்லை. ” ” முடியவில்லை ” என்று சொல்லிவிட்டு அதை முடித்து வைக்கும் பழக்கம் எனக்குள் உண்டு. ( அவர்களுக்கு அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த அனுபவ அறிவு வேண்டும். அவ்வளவே ! ). ” நான் ஒரே வாரத்தில் ஒரு புத்தகம் படிப்பேன். உன்னால் முடியுமா ? “. என்று கேட்ட பெரியவரிடம் நான் சொன்ன பதில் ” தெரியவில்லை “. கொஞ்சம் இருமாப்பாக சிரித்த அவரை இன்னும் நான் பார்க்கவில்லை. பார்த்தாலும் தினசரி ஓர் புத்தகம் உண்கிறேன் என்று சொல்லப்போவதில்லை !
( அப்பத்தாவின் கற்றல் வரிகள் தொடரும் … )
💐💐💐