நான் எனப்படும் நான் : 064
#WhoisJay ; 039
💐💐💐
மாடு மேய்க்கும் தருணங்கள் முக்கியமானவை. வாழ்க்கை பாடங்களை நிறைய அங்கே கற்க முடியும். அப்படி சில பாடங்களை இங்கே பகிர்கிறேன். யாருக்கோ ஒருவருக்கு உதவலாம். ( ஆம். மாடு மேய்த்திருக்கிறேன். நாங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு வந்தவான்னு வச்சுக்கோங்க ! ).
💐💐💐
💐 அதிகாலை மாடு மேய்க்க போவதே சாலச்சிறந்தது. இரவு மாடுகள் எதையும் சாப்பிடுவதில்லை ( Intermittent Fasting 😊😊 ). என்பதால் காலையில் அவை பசியோடு காத்திருக்கும். பசி அவற்றின் தேடலை வேகப்படுத்தும். காலை தன் உணவை தேடி செல்லும் மாடுகளுக்கும், மாலை திரும்ப வரும் மாடுகளின் நடை வேகத்திற்கும் வித்தியாசம் உண்டு.
” அதுங்களுக்கு பசிக்கும்போது நீ மேய்க்க வேண்டியது இல்லை ” – அப்பத்தாவின் வரிகள்.
கற்றல் ;
பசியோடு இரு. தேடல் தானாகவே நடக்கும்.
💐💐💐
நான் சொல்வதை கேட்கவில்லை எனில் மாட்டை நான் அடிப்பது உண்டு. ” மாட்டை அடிக்கக்கூடாது ” என்பார் அப்பத்தா. ” நகர மாட்டேங்குதே அப்பத்தா ” என்று நான் சொன்னால் சிரிப்பார். கிட்டே வந்து கைத்தடியை வாங்கி … மாட்டுக்கு வலது பக்கமாக தரையில் அடிப்பார். மாடு நகரும். எனக்கு ” அட ” என்று இருக்கும். ” மாட்டை அடித்தால் அது அதன் எதிர்ப்பை காண்பிக்கும் ! ” என்று என்னை அதட்டுவார்.
கற்றல் ;
அடிக்கும் தோரணை காட்டினால் போதும். அடிக்க வேண்டியதில்லை. ( சில மாடுகளுக்கு அடித்தால் தான் நகரும் என்றும் பின்னாளில் புரிந்து கொண்டேன் 😊😊 )
💐💐💐
மாடுகள் கம்மாய்க்குள் ( அந்த பக்கம் ஏரியை அப்படித்தான் அழைப்பார்கள் ) விட்டுவிட்டால் … அவைகள் தானாக குளிர்ந்து எழுப்பும் வரை எழுப்ப வேண்டியதில்லை. வெறும் நீர் குடிக்க மட்டும் அவை செல்லவில்லை. நான் இது புரியாமல் அவைகளை அடித்து கரைக்கு இழுக்க முயற்சிப்பேன்.
” அவைகளுக்கு பசித்தால் அங்கே போகாது. பசி ஆறியதால் தான் அப்படி கிடக்கின்றன. அவற்றை தொந்தரவு செய்யாதே ” அப்பத்தாவின் குரல்.
” வீட்டுக்கு போகணுமில்ல அப்பத்தா ”
” இல்லை. நம்ம அவசரத்துக்கு அல்ல மாடுகள். அவை குளிர்ந்து வந்தால் தான் இரவு நிம்மதியாக உறங்கும். அசை போடும். செமிக்கும். இல்லை என்றால் அரட்டி கொண்டே இருக்கும் “அப்பத்தாவின் அநுபவம் பேசியது.
கற்றல் ;
” அவர்களை விடு. அவர்களாக தெரிந்து வரும் வரை விட்டு விலகு. அப்போதுதான் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும் ”
💐💐💐
கற்றல் தொடரும்.
பயணிப்போம்.
💐💐💐