நான் எனப்படும் நான் : 065
#WhoisJay : 040
💐💐💐
” யாருக்காவது கஷ்டம்னா பக்கத்தில் இருக்கணும். சந்தோஷமா இருக்கும்போது ஆயிரம் பேர் பக்கத்தில இருப்பாங்க. அப்போ நாம தேவை இல்லை அங்கே. ”
இந்த வரிகள் என்னுள் தங்கிப்போனது ஆச்சர்யம் தான். அர்த்தம் புரியாத வயதிலும் அடிக்கடி இந்த வரிகளை அப்பத்தா சொல்ல கேட்டு, அப்படியே பதிந்திருக்ககூடும். இப்போதும் நான் கடக்கும் மக்களில் சந்தோஷமாக இருக்கும் மக்கள் என் கண்ணில் தெரிவதில்லை. அது அவர்களுக்கான நேரம், நமக்கு அங்கே வேலை இல்லை – என்றே என் மனதில் ஓடும். அதே நேரம் கடின நேரம் எனில் .. என் இருப்பை, உதவியை, பங்களிப்பை …நான் பதிவு செய்ய விரும்புவேன். ( சில நேரங்களில் நேரமின்மை மற்றும் திடீர் காரணங்களால் இதுவும் முடியாமல் போகிறது ! ).
” வீம்பு பேசும் மனிதர்களுக்கு வீம்பில் பதில் கொடு. ஆனால் நீ நீயாகவே இரு ”
இதுவும் மிக ஆழமாக பொதிந்த வரி. அப்பத்தா அப்படித்தான். சட்டென திருப்பி கொடுக்கும். அதே நேரம் அடுத்த நொடியே என்னை பார்த்து சிரிக்கும். ஆம். கொடுத்த இயல்பு, இருக்கும் இயல்பை பாதிக்காது.
சமீபத்தில் இறப்பு ஒன்றிற்கு நான் உதவி இருக்கலாமோ என்று எழுதியதற்கு ” அதெல்லாம் கடவுளின் கை. இயற்கை. அதை மாற்ற நினைப்பது மடமை ” என்பது போல ஒருவர் சொல்ல திருப்பி கேட்டேன் … ” அம்மாவுக்கு உடல் சரியில்லை என்று நேற்று மருத்துவமனைக்கு ஏன் அழைத்து சென்றீர்கள் ? இயற்கையாக என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும் என்று இருக்க வேண்டியது தானே ? “. திக்கித்து நட்பு நின்ற போது சொன்னேன் .. ” நம்மால் முடிந்த அனைத்தையும் செய்து, முடியாத போது தான் இயற்கை பக்கம் செல்கிறோம். நம்மால் முடிந்திருக்கலாமோ என்று நினைப்பது மடமை இல்லை. முயற்சி. அதுவும் வேண்டாம் என்றால் .. வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே நாம் ? ஏன் Survival க்கு எதையோ செய்து கொண்டே இருக்கிறோம் ?. நம்மால் முடிந்தவற்றை செய்துவிட்டு, முடியாதவற்றை ஏதோ ஒன்று என்று எண்ணுவதே மனிதம் ! ( Corona வந்தவுடன் .. புனித தலங்கள் வெறுமையாகி நிற்கின்றன. அப்படியே வந்தாலும் முகமூடி அணிந்தே மனிதர்களை பார்க்கிறேன். இரண்டு கேள்விகள் இங்கே .. 1. இயற்கை என்று ஏன் நாம் ஒத்துக்கொள்வது இல்லை. 2. இவ்வளவு பேர் இறக்கும்போது … எங்கே போயிருக்கிறார் அந்த கடவுள் ? )
நாம் செய்ய வேண்டியதை செய்வோம். மற்றவை நம் கையில் இல்லை என்பதே எம் நாடு. இங்கே வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. குடியுரிமையும் இல்லை. நாடோடி யாக வாழ்ந்து மனித உதவிகள் செய்து மறையலாம். அப்படி ஒரு நாடு எனக்குள் உண்டு. உங்களுக்குள்ளும் உண்டு எனில் .. நாம் விரைவில் சந்திப்போம்.
💐💐💐