நான் எனப்படும் நான் : 066
#WhoisJay ; 041
💐💐💐
ஒரு இறப்பு. அப்பத்தாவும் நானும் சென்றோம். அப்பத்தா அழுது வெளியே வந்தார். நான் அப்படியே இருந்தேன்.
” அது எப்படி அப்பத்தா சட்டுன்னு அங்க அழுதீங்க ”
அப்பத்தா சிரித்தார். அட,.இப்போ அழுத அப்பத்தாவா இது ?.
” நமக்கு அந்த இறப்பு பெரிய விஷயம் இல்லை. ஆனால் அவங்களுக்கு பெரும் இறப்பு. அங்கே நாம் அவர்களின் துக்கத்தை பகிர்கிறோம். நாம் அழும்போது அது அவர்களுக்கு தெரியப்படுத்தும். அவ்வளவு தான் ”
” ஆனா இப்போ சிரிக்கிறோமே ? ”
அப்பத்தா மீண்டும் சிரித்தார். ” அதுவும் நிஜம் இதுவும் நிஜம் ” என்றார். எனக்கு அப்போது புரியவில்லை. பின்னர் புரிந்தது.
இன்று இறப்பு பற்றி கேள்விப்பட்டால் நமக்கு தெரிந்த ஆளுக்கு தகுந்தாற்போல் சில நொடிகள், நிமிடங்கள், மணித்துளிகள், நாட்கள், வாரம், வருடம் …என்று வருத்தப்படுகிறோம். பின்னர் பழைய நாமாக மாறி விடுகிறோம். ” அதுவும் நிஜம் இதுவும் நிஜம் ” அப்போது புரிய ஆரம்பித்தது.
தாத்தாவின் இறப்பிற்கு பின் சில மாதங்களில் அப்பத்தா பழைய படி நின்றார். சிரித்தார். நடந்தார். சமைத்தார். சிரித்தார்.
ஆம்.
” அதுவும் நிஜம். இதுவும் நிஜம் ”
💐💐💐