நான் எனப்படும் நான் : 069
#WhoIsJay ; 044
” நேரமில்லை என்று சொல்ல வைத்த பரபரப்பை ” வீழ்த்தியதா பயம் ? ;
💐💐💐
இவ்வளவு நாட்களாய் “நேரமில்லை” என்று சொன்ன அதே கூட்டம் தானே நாம் ? தொலைபேசியில் பேச நேரமில்லை, நேரில் பார்க்க வர நேரமில்லை, பதில் எழுத நேரமில்லை, கூட்டத்திற்கு வர நேரமில்லை, மனைவிக்கு உதவ நேரமில்லை, குழந்தையுடன் பேச நேரமில்லை, பள்ளிக்கு வர நேரமில்லை, படம் பார்க்க நேரமில்லை, பாடல் கேட்க நேரமில்லை … என்று எவ்வளவு ‘நேரமில்லை’ கள் ! அத்தனைக்கும் காரணம் ” பரபரப்பு ” என்கிற ஒரு இயக்கம் வேறு !!
எதையோ நோக்கி ஓடிக்கொண்டே இருந்த நாம் சொன்ன எத்தனை விடயங்கள் இப்போது பொய் என்று ஆகி இருக்கிறது ? ” நான் மட்டும் ஒருநாள் இல்லேன்னா ” என்று பேசாத நாம் உண்டா ? இன்று 21 நாட்கள் – அனைத்தும் முடங்கி இருக்கிறது. ஒரு தேசமே முடங்கி ( இன்னும் கூட முடங்க வாய்ப்புண்டு ) மீண்டும் எழ முடியும் என்று நம்பிக்கொண்டு, அதற்கேற்ற காரியங்களை செய்து கொண்டிருக்கும்போது … ஒரு நிறுவனம் நடத்தும், அல்லது நிறுவனத்தில் பணி புரியும் நாம் தான் ” நான் மட்டும் மட்டும் ஒருநாள் இல்லேன்னா “என்று வாய் வரை நீட்டி கொண்டு இருந்தோம்.
” உன்னிடம் பேசத்தான் நினைத்தேன் ஆனால் வேலை … ” என்று மனைவியிடம், அப்பாவிடம், அம்மாவிடம், குழந்தைகளிடம், அண்ணன் தம்பியிடம், அக்கா தங்கையிடம், வேலையாட்களிடம், சக நட்புக்களிடம், உறவினர்களிடம் …என்று இந்த ஒரு வரியை சொல்லாத ஆட்களே இல்லை !
இப்போது யோசித்தால் அனைத்தும் மாயம் என்றே தோன்றுகிறது. அப்படி எல்லாமா நாம் இருந்தோம் என்று தோன்றுகிறது. அனைத்து இயக்கங்களையும் நிறுத்திய பின் ஒரு மூன்று மாதம் சமாளித்து விட முடியும் என்று நம்பும் அதே நாம் தான் ஓடிக்கொண்டு இருக்கும்போது ஒரு நாள், ஆம் ஒரே ஒரு நாள் நமக்கு இல்லை – என்று புலம்பிக்கொண்டு இருந்தோம் ! அதாவது மூன்று மாதம் சமாளிக்க முடியும் என்று நினைக்கும் நம்மால் தான் ஒரு நாள் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருந்திருக்க முடிகிறது ! எவ்வளவு பெரிய முரண் !!
எனக்கென்னவோ .. வாரம் ஒரு முறை இது போன்ற lockdown இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இது போன்று குடும்பத்துடன் முழு ஓய்வில் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த ஒரு நாளில் எந்த பயணமும் இல்லாமல், நாம் இருக்கும் இடத்திலேயே நமக்கான ஒரு நாள் ( Quarantine day) என்று அது மாற வேண்டும் என்றே தோன்றுகிறது. 365 நாட்களில் 12 நாட்களை என்னால் quarantine செய்துகொள்ள முடியவில்லை எனில் .. நான் என்ன வாழ்க்கை வாழ்கிறேன் என்று கேட்க தோன்றுகிறது ! எம் வாழ்க்கை முறையில் இதை நான் சாத்தியப்படுத்தவே விழைகிறேன். நீங்களும் யோசிக்க வேண்டிய நேரம் இதுவோ என்று எனக்கு தோன்றுகிறது. யோசியுங்களேன்.
வீடு என்பது ” தினம் வந்து தூங்கி எழுந்து ” செல்லும் இடம் என்று நினைத்தவர்களுக்கு .. இப்போது அது ஒரு பெரும் இயக்கத்தின் முக்கிய வேர் என்று புரிந்திருக்கும். அப்படி புரிந்தவர்களால் …இனி வீட்டிற்குள் ஒரு நாள் quarantine கண்டிப்பாக செய்து கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.
என்ன ? அப்படி எல்லாம் முடியாதா ? Lockdown முடிந்ததும் மீண்டும் அனைத்தும் “பழையபடி” ஆகும் என்கிறீர்களா ?
உங்களை எல்லாம் ஆயிரம் Corona க்கள் வந்தாலும் ….என்று MR ராதா பேசும் குரல் என் காதில் ஒலிக்கிறது ! வாழ்த்துக்கள்.
பயணிப்போம் Quarantine தினம் ஒன்றுடன் – இனிமேலாவது !!