நான் எனப்படும் நான் : 068
#WhoisJay : 043
” திடீர் திடீர் என்று காணாமல் போவோர் பற்றிய பதிவு ” 😊😊
இந்த வாழ்க்கையில் நம்முடன் பயணித்துக்கொண்டே வருபவர்கள் சட்டென காணாமல் போவதும், சில வருடங்களுக்கு பின் மீண்டும் ” நீங்களே எம் குரு / சிறந்த நண்பன் / எப்படி இருக்கீங்க / பேசனும்னு நினைச்சேன் / உங்களைத்தான் அப்பப்போ நினைப்பேன் /….. ” இப்படி ஏக வசனங்களுடன் வருமதுமாய் … . யார் இவர்கள் ? ஏன் சட்டென காணாமல் போய்விட்டு மீண்டும் மீண்டு வருகிறார்கள் ? இவர்களின் பிரச்சினை தான் என்ன ?
மனிதர்கள் பொதுவாக நான்கு விதமாக நம்மை அணுகுவார்கள்.
1. அவர்களின் தேவைக்கு –
இவர்கள் நிச்சயமாக சிறிது காலம் மட்டுமே இருப்பவர்கள். இவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பெற்றுவிட்டு நன்றி சொல்லி செல்வார்கள். வேறு எதுவும் அங்கே பேச்சாக இருக்காது. ” எனக்கு இது வேண்டும் ” என்பதை வேறு வேறு விதங்களில் கேட்டுவிட்டு பெற்று சென்று விடுவார்கள்.
2. நம் தேவைக்கு –
இவர்கள் மிக ஆச்சர்யமானவர்கள். நமக்கு தேவை என்று வரும்போது நம்முடன் பயணித்து தேவையான உதவிகளை செய்துவிட்டு சென்று விடுவார்கள். எந்த எதிர்பார்ப்பும் இங்கே இருப்பது இல்லை. ( இருந்தால் முதல் வகைக்கு வந்துவிடும் )
3. பொது நோக்கத்திற்கு –
ஒரு பொது நோக்கத்தில் அல்லது நோக்கத்திற்காக சந்தித்து அங்கிருந்து இந்த உறவு வலுப்பெறும். அப்படியே முன்னோக்கி நகரும். இதே மூன்றாவது வகையில் இருக்கும் வரை இந்த உறவு காலம் முழுக்க உடன் பயணிக்கும்.
4. எந்த நிபந்தனைகளும் அற்ற தொடர்பு –
இது தான் என்னை கேட்டால் நெருங்கிய உறவு. நம்பத்தகுந்த நட்பு. தோள் சாயலாம் என்று உணரவைக்கும் இருப்பிடம். கனவுகளை பகிர்வதற்கான Platform. தன் பக்க சோக, மகிழ்வுகளை பகிர்வதற்கான பக்கம். மிக சொற்பமான இந்த மனிதர்கள் கடைசி வரை வருவார்கள் என நம்பலாம்.
இப்படி மனிதர்களில் இந்த முதல் வகை தான் சட்டென்று காணாமல் போய் மீண்டும் சட்டென்று தோன்றுபவர்கள். இரண்டாம் வகை மனிதர்களை தான் நாம் எதிர்பார்க்கிறோம். மூன்றாம் வகையை தினசரி சந்திக்கிறோம். நான்காம் வகையை 10 வருடங்களில் ஒருவர் என்று சந்திக்கிறோம். பெறுகிறோம். 40 வருட வாழ்வில் 4 நட்புக்கள் அப்படி இருந்தால் நீங்கள் நான் நாம் பாக்கியம் செய்தவர்கள்.
இந்த புரிதலில் நான் இருப்பதால் சட்டென காணாமல் போகும் மனிதர்களை பார்த்து நான் சிரிப்பது உண்டு. மீண்டும் அவர்கள் வரும்போதும் சிரிப்பதுவே நடக்கும். அவர்கள் மாறிக்கொண்டே இருக்க நான் ஏன் மாற வேண்டும் ?
உங்களின் நட்பு வட்டாரத்தை இப்படி வகைப்படுத்தாமலும் நீங்கள் வைத்து கொள்ளலாம். ஆனால் திடீரென்று ஒருவர் காணாமல் போனால், அல்லது, நமக்கு எந்த தேவையும் இல்லாத போது திடீரென்று ஒருவர் வந்தால் … இந்த வகைப்படுத்துதல் தேவைப்படலாம்.
பயணிப்போம்.
💐💐💐