நான் எனப்படும் நான் : 072
#WhoIsJay ; 47
என்னவோ தெரியவில்லை குழந்தைகளை எனக்கு அப்படி பிடித்துப் போகிறது ! அவர்களின் உலகில் எப்போதுமே ஒரு வித ஆர்வமும் மகிழ்வும் தேடலும் நிரந்தரமான ஒன்றாக இருக்கிறது. அந்த உலகின் வாயிற்காப்பானாக இருந்துவிட மனம் இலயிக்கிறது.
சமீபத்திய என்னுடைய TIK ( Trainer In a Kid ) பயிற்சி வகுப்பில், குழந்தைகளை பார்த்து அசந்து போகிறேன். அவர்களின் எண்ண உயரம் பெரும் ஆச்சர்யம் ! அவர்களிடம் “பள்ளியில் இன்னும் என்னென்ன இருக்கலாம் ” என்று கேட்ட போது …
” என் பள்ளிக்கு உலகின் பெரும் Champions வர வேண்டும். அவர்களுடன் நான் உரையாட வேண்டும். நான் என்னை எப்படி தயார் செய்து கொள்வது என்று எனக்கு அவர்கள் சொல்ல வேண்டும் ” என்று ஒரு 08 வயது மாணவன் சொன்ன போது மகிழ்வில் அதிர்ந்து போனேன். பள்ளி கல்வி துறை இப்படி யோசித்திருக்குமா என்று எனக்கு தெரியவில்லை ! ( Thangam Thenarasu சார் அவர்கள் நிச்சயம் இதுகுறித்து யோசிப்பார் என்று நினைக்கிறேன். ) அந்த 08 வயது மானவனிடம் இன்னமும் பேசிய போது
” அவர்களை கேள்வி கேட்க வேண்டும் சார். அவர்கள் அவர்களை எப்படி தயார் செய்து கொண்டார்கள் என்று எனக்கு தெரிய வேண்டும் ” என்ற அந்த மாணவனின் வரி இன்னமும் நெஞ்சுக்குள் தைக்கிறது. நாம் இப்படி யோசித்திருக்கிறோமா ? என்று என் பள்ளி வாழ்நாட்களை நான் நினைத்து பார்த்தேன். 08 வயதில் நிச்சயமாக இல்லை.
இன்னொரு மாணவன் ” Photography க்கென்று ஒரு வகுப்பு பள்ளியில் இருக்க வேண்டும். புகைப்படம் எடுப்பதை பள்ளியிலேயே கற்க வேண்டும் ” என்று சொன்னபோது .. மாணவர்களிடம் நாம் Feedback கேட்டு பழகி இருக்கிறோமா ? பள்ளி கல்வி துறை இந்த முக்கியமான கேள்வியை மாணவர்களிடம் வைத்திருக்கிறதா என்று யோசிக்க தோன்றுகிறது. ( நம் பள்ளியில் இன்னும் என்னென்ன சேர்க்க வேண்டும் ? ) வரும் பதில்களின் உயரம் இன்னும் என்னென்னவாகவோ இருக்கக்கூடும் !
” கதை சொல்லலுக்கு ஒரு வகுப்பு இருக்க வேண்டும். நிறைய கதைகள் கேட்க வேண்டும் ” என்று சொன்ன இன்னொரு மாணவனை பார்த்து வியக்கிறேன்.
ஆம்.
” அவர்களின் உலகில் எப்போதுமே ஒரு வித ஆர்வமும் மகிழ்வும் தேடலும் நிரந்தரமான ஒன்றாக இருக்கிறது. அந்த உலகின் வாயிற்காப்பானாக இருந்துவிட மனம் இலயிக்கிறது. ”
( சொன்ன மாணவர்களின் பெயர் – துருவன், வைபவ், நிதேஷ். )
💐💐💐