நான் எனப்படும் நான் : 076
💐💐💐
” இவ்வளவு நாள் நான் எப்படி உங்களை Miss பண்ணினேன் ? ”
இந்த கேள்வி எனக்கு கிடைக்கும் பல feedback ன் ஒரு கேள்வியாக கிடைக்கும் Feedback. இதைப்பற்றி கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது.
நான் முதல் முறை இமயமலை சென்ற போது … ” இவ்வளவு நாள் எப்படி இதை நான் miss செய்தேன் ? ” என்று எனக்குள் கேட்டேன். அவ்வளவு அழகான நிறைவான தேசம் அது. இந்தியாவில் தான் இருக்கிறது என்று என்னால் நம்பவே முடியவில்லை. கொஞ்சம் கோபம் கூட வந்தது. பள்ளியில், கல்லூரியில் ஏன் என்னை இங்கே கூட்டி வரவில்லை ? பாடம் இங்கே படித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றெல்லாம் தோன்றியது.
அன்று அங்கே சரியான மழை. வெளியே போக வேண்டாம் என்று மற்றவர்கள் சொன்னபோது போய் ஆகவேண்டும் என்று எனக்குள் தோன்றியது. மழைக்கான ஆடைகளை நான் அணிந்து நடக்க ஆரம்பித்த போது சிறிது தூரத்தில் ஒரு Monk ஐ சந்திக்க நேர்ந்தது.
” மழை இனியது. மழையில் நடப்பது மிக இனியது ” என்று நான் சொன்னவுடன் சட்டென திரும்பி பார்த்தார். சதை எலும்பு எல்லாவற்றையும் கடந்து செல்லும் ஊடுருவும் நொடிப்பார்வை அது. கொஞ்சம் சில் லென்று உள்ளே பயமோ அல்லது வேறு ஏதோ உணர்வோ எனக்கு வந்தது. சில நொடிகளில் அதே Monk சிரித்தார். ( Monk குகள் நம்மை பார்க்கும் சில நொடிப்பார்வைகள் மிக முக்கியமானவை. நம்முடன் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று அந்த நொடிப்பொழுதில் அவர்களால் முடிவு செய்ய முடியும் ! )
” மழையை பார்த்ததும் ஓடும் கூட்டத்தில் மழையில் ரசித்து நடக்கும் ஒரு உயிரை பார்க்கிறேன் ” என்று மீண்டும் சிரித்தார்.
பேச ஆரம்பித்தோம். நிறைய பேசினோம்.
” ஒரு கதை சொல்லவா “என்று கேட்டார். புன்னகைத்தேன். புன்னகைகள் பதிலாக மாறும் உறவுகள் பெரும் பாக்கியம் நிறைந்தவை.
” மழையை பார்த்து பூமி கேட்டதாம். உனக்கு ஏன் ஒரு ஒழுங்கே இல்லை ? நீ ஏன் திடீர் திடீர் என்று வருகிறாய் ? ”
மழை சொல்லியது.
” நான் வருவது என் ஒழுங்கு சார் விஷயம் அல்ல. உம் தன்மை சார் விஷயம். நீ விளையும் தன்மைக்கு தயாராகிவிட்டால் நான் வந்துவிடுகிறேன் ”
பூமி கேட்டதாம் … ” என்னின் சில பகுதிகளுக்கு நீ வருவதே இல்லையே ஏன் ? ”
மழை மீண்டும் சொன்னது.
” வராமல் இருக்க மாட்டேன். கண்டிப்பாக வருவேன். ஆனால் குறைவாக வருவேன். அங்கே இருக்கும் உயிர்கள் அந்த குறைவான வருகையிலேயே வாழ தயாராவதால் .. அவர்களை கொஞ்சம் தூர நின்று கவனிக்கிறேன் ”
அவ்வளவு தான் கதை. எனக்குள் எழும் நிறைய கேள்விகளுக்கு பதில் சொன்ன கதை இது.
” நாம் இருவரும் இன்று பார்த்ததற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். இந்த கதையை நான் ஏன் சொல்ல வேண்டும் – நீங்கள் ஏன் கேட்க வேண்டும் – என்பதும் மழை பூமி கதை சார்ந்த செய்கை தான். மீண்டும் சந்திப்போம் ” என்று சொல்லிவிட்டு நடந்த அந்த Monk ன் கதை உங்களுக்கும் பதில் சொல்லும் என நம்புகிறேன்.
பூமியின் தன்மைக்கு தக்க மழை வரும். பூமி தன் தன்மையை மாற்றட்டும். அதற்கான மழை அதன் மேல் பெய்யட்டும்.
( #5pmLive ன் பலரின் கேள்விகளுக்கும் இங்கே பதில் கிடைத்திருக்ககூடும். )
பயணிப்போம். குறிப்பாக கடின காலங்களில் ஒன்றாக.