நான் எனப்படும் நான் : 079
#WhoisJay ; 054
💐💐💐
ஒருவன் மலையேறுவது என்று முடிவு செய்கிறான். அப்படி ஏறிப்போகும்போது எதிர்வரும் மனிதர்களை பார்த்து …
” மேலே ஏறும் பாதை எப்படி இருக்கிறது ? ” என்று கேட்கிறான். அதில் ஒருவர் …
” இன்னும் கொஞ்ச தூரம் ஏறிய பின் நிறைய பசுமை காட்சிகளை காணலாம் ” என்கிறார்.
கொஞ்ச தூரம் ஏறுகிறான். அப்போது அவனால் பசுமையான காட்சிகளை காண முடிகிறது. அங்கே எதிர்ப்பட்ட மனிதரை மீண்டும் கேட்கிறான்.
” மேலே செல்லும் பாதை, காட்சிகள் …எப்படி இருக்கிறது ? ”
” இன்னமும் கொஞ்ச தூரம் தாண்டினால் ஒரு நீரோடை வரும் அதில் நீங்கள் குளிக்கலாம். அவ்வளவு அழகாக இருக்கிறது. ”
கொஞ்ச தூரம் சென்ற பின் நீரோடையில் குளிக்கிறான்.
இப்போது அவனுக்கு மனிதர்கள் மேல் நம்பிக்கை வந்துவிடுகிறது. மனிதர்கள் சொல்வதை நம்பும் நிலைக்கு வந்துவிடுகிறான். குளித்துவிட்டு மீண்டும் ஏற ஆரம்பிக்கிறான். இப்போது எதிர்ப்படும் நபரிடம் கேட்கிறான்..
” மேலேறும் பாதை, காட்சிகள் எப்படி இருக்கிறது ? ”
அந்த மனிதர் விரக்தியாய் .. ” ஒண்ணுமே இல்லை. Waste ” என்கிறார்.
அவர் சென்றவுடன் இவன் அந்த இடத்திலேயே கொஞ்ச நேரம் நின்றுவிட்டு … ஏதோ நினைத்த படி திரும்பி இறங்க ஆரம்பிக்கிறான்.
வேகமாக இறங்க ஆரம்பித்ததால் கொஞ்ச நேரத்தில் கடைசியாக சந்தித்த அந்த மனிதரை சந்திக்கிறான். அவர் இவனை பார்த்ததும் ” மேலே செல்லவில்லையா ? “என்று கேட்கிறார்.
இவன் இல்லை என்று தலையசைத்து சொல்கிறான்.
” அதான் மேலே எதுவும் இல்லை என்று சொன்னீர்களே ? “..
💐💐💐
உண்மையை சொன்னால் அந்த மலையின் மேற்புறம் தான் கொள்ளை அழகு. எப்போது நாம் மனித பார்வைகளை நம் பார்வைகளாக மாற்றுகிறோமோ .. அப்போது பல நல்ல அல்லது கெட்ட விஷயங்களையும் நம்முடையதாக மாற்றிக்கொள்கிறோம் – கொஞ்சமும் யோசிக்காமல் !
மனிதர்கள் பேசும்போது ” இது அவரின் அவளின் பார்வை ” என்று நினைக்கவில்லை எனில் ஆட்டு மந்தை மனநிலை தானே நமக்கு ?
💐💐💐
எனக்கு ” இன்னார் சொன்னார். இவாள் சொன்னாள். இஃது சொல்லியது. என்ற எதிலும் உடன்பாடில்லை. நான் அனைத்தையும் கேட்டுக்கொள்கிறேன். ஆனாலும் என் உள்ளுணர்வை மட்டுமே கேட்கிறேன். அது எனக்கு நல்லதே சொல்லும். அது சொல்லும் வார்த்தையை கூர்ந்து கவனித்தால் அது நம்மை ” இட்டுச்செல்லும் ” அழகு புரியும். என் உள்ளுணர்வு தான் என் பெரும் நண்பன்.
அந்த உள்ளுணர்வு சமீப காலமாக
” இருக்கும் போது சரி. ஆனால் நீ இல்லாத போதும் இது சரியாக நடக்க வேண்டும். அதை யோசி ”
என்று ஆங்காங்கே கோடிட்டுகொண்டே இருக்கிறது. ஆச்சர்யம் தான் இந்த பார்வை. ஆனாலும் உள்ளுணர்வு அசாத்தியமான ஒன்று. அது சொல்வதில் அப்படி ஒரு எதிர்கால பார்வை இருக்கும்.
ஆகவே ” நான் இல்லாத போதும் ” என்கிற வார்த்தை இப்போதெல்லாம் என் செயல்களில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. நாம் இல்லாத போதும் ஒன்று இயங்குமானால் அது நிச்சயம் பெரும் நோக்கம் கொண்டதாகவே இருக்க வேண்டும். இருக்கக்கூடும்.
உள்ளுணர்வு தான் எவ்வளவு அழகு? !
அதை கவனிக்கும் வாழ்க்கை தான் உண்மையான பேரழகு !
💐💐💐