நான் எனப்படும் நான் : 082
#WhoIsJay ; 057
💐💐💐
அம்மாவிற்கு என்னை அனுப்ப மனதில்லை. ஆனாலும் சூழ்நிலை … நான் செல்ல வேண்டியதை உறுதிசெய்ய .. நான் கிளம்பும் போது அவளின் முகம் சரியில்லை. வழக்கமான சிரிப்பை காணோம். அனைத்து அம்மாக்களுக்கும் அவளின் பிள்ளைகள் வெளியே கிளம்பும்போது மனம் நிறைவாக இருப்பதில்லை. மீண்டும் வரவேண்டும், மீண்டு வர வேண்டும், எல்லாம் நன்றாக இருக்க வேண்டும், பிள்ளைகள் திரும்ப வர வேண்டும் .. என்பதே பெரும் அம்மாக்கள் வேண்டும் வரம். அதை அவர்கள் வெளிவராத கண்களின் நீரில் கரைத்து விட்டு அழகாக சிரிப்பார்கள். இது அம்மாக்களால் மட்டுமே முடியும் விடயம்
” சரி .. எனக்கு திருநீறு இட்டு அனுப்பு. அப்படீன்னா நீ நிம்மதியா இருப்பே ”
வந்து நீறு இட்டாள். ஏதோ வேண்டிக் கொண்டாள். அம்மாக்களின் வேண்டுதல்களில் அவர்களின் Personal விருப்பங்கள் இருப்பதே இல்லை.
வந்து நீறு இட்டுவிட்டு சொன்னாள்.
” தினமும் கூப்பிடு “.
” சரி ”
திருநீறு களில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அம்மா இட்டால் அப்படி ஒரு உடன்பாடு. ஒரு சில முறை தங்கைகள் இட்டிருக்கிறார்கள். ஒரு சில முறை நட்புக்கள். எனக்கு யாராவது திருநீரு கொடுக்க வந்தால் .. அவர்களையே இட சொல்வேன். என்னைவிட அவர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் நன்றாகவே இருக்கும் என்கிற நம்பிக்கை தான் .. வேறென்ன ?. ஆனால் அம்மாவிடம் மட்டும் தான் நான் நானாகவே திருநீறு இட சொல்லி கேட்பேன்.
என்னவோ தெரியவில்லை. இந்த முறை வீட்டை விட்டு கிளம்பும்போது மனதிற்குள் ஒரு இனம்புரியாத உணர்வு. கிட்டத்தட்ட 90 நாட்கள் நான் அம்மா அப்பாவுடன் இருந்ததே இல்லை. சிறுவயதில் அதாவது .. 12 ஆம் வகுப்பிற்கு பின் .. இன்று வரை அப்படி இருந்ததே இல்லை. ஒரே வீட்டில். உணவு, பேச்சு, சிரிப்பு .. எல்லாம் கலந்து !
City யில் அமர்ந்து Window வழி பார்த்தபோது வாசலுக்கு வெளியே நின்று பார்த்துக்கொண்டு இருந்தாள். அனைத்து மகன்களின் வாழ்க்கையிலும் அம்மாக்கள் வாசலில் நின்று பார்த்து வழியனுப்பவது நடந்து கொண்டே இருக்கிறது. கொஞ்சம் கண்ணீருடன். நிறைய வேண்டுதலுடன் !
City நகர்ந்து கொண்டே இருந்தது. நான் வீட்டில் இருந்து இன்னமுமே வெளியே வரவில்லை – இந்த பதிவினை இடும் வரை ! City நகர்வதை போல வாழ்க்கை மென்மையாய் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இருக்கும். இருக்க வேண்டும்.
💐💐💐