நான் எனப்படும் நான் : 083
#WhoIsJay : 058
90 நாட்களுக்கு பின் முடி திருத்திக்கொள்ளுதலில் இன்று மீண்டும். என் வாழ்நாள் முழுக்க இவ்வளவு முடியை நான் வளர்த்தது இல்லை. சுருள் முடி என்பத்தால் பின்னால் அதிகமாக வரும்போது வேறு ஒரு Image வரும் என்பதால் ஒரு 25 நாட்களில் முடி திருத்தி விடுவதுண்டு.
முதலில் நான் என் கைகளை Sanitize செய்து, பின் எனக்கு முடி திருத்துபவர் அவர் கைகளை Sanitize செய்து, பின் உபகரணங்கள் அனைத்திற்கும் செய்து, முகமூடி அணிந்து … முற்றிலும் வேறு வித அனுபவம். ( இப்படியே வாழ்நாள் முழுக்க சுத்தமாகவே இருந்துவிட்டால் நல்லது தானே என்று உள்ளே ஒரு குரல் ஒலித்தது ).
” நான் தேடும் செவ்வந்திப்பூவிது ” என்ற பாடல் FM இல் ஒலிக்க எனக்கு முடி திருத்துபவர் சிரித்து கொண்டே சொன்னார்
” ராஜா ராஜா தான். அப்படியே உள்ளே ஐஸ் மாதிரி இறங்குது பாருங்க “.
SivaKumar SivaShanmugham ஏனோ நினைவுக்கு வந்தார். ராஜாவின் ரசிகர். கேட்டால் மகிழ்வார் என்று தோன்றியது.
” முடி வெட்டவே இல்லை போல ” சிரித்தார். சிரித்தேன். பிறகு சொன்னார் ..
” நிறைய பேர் Trimmer க்கு போய் விட்டார்கள். தொழில் பாதிக்கிறது ”
எனக்கு என் Trimmer ஞாபகத்திற்கு வந்தது. ஒருவருக்கு வசதி, இன்னொருவருக்கு தொழிலை பாதிப்பது என்பது எவ்வளவு பெரிய முரண் !
” கொஞ்சமா Weight போட்டுட்டீங்க போல ”
என்று சிரித்தார். சிரித்தேன்.
” ஆனா உங்களை நம்ப முடியாது. சட்டுன்னு வேற மாதிரி வருவீங்க ”
முடி திருத்துபவர்கள் தான் நம்மை எவ்வளவு அழகாக புரிந்து வைத்திருக்கிறார்கள் !?
கொஞ்ச நேர மௌனம். பின் சொன்னார்.
” 30 வருஷ தொழில். விட்டுடலாமா ன்னு கூட தோணுச்சு. அவ்வளவு இழப்பு. வேறு வேலைக்கு போக யோசிச்சேன். ”
அதை சிரித்து கொண்டே சொன்னார். நம்மில் எத்தனை பேரால் இழப்பை சிரித்து சொல்ல முடியும் ?. முகம் கொஞ்சம் சோகமாக மாறியது அவருக்கு.
” தொழில் இருக்கும் போகும். ஆனால் திறமை எப்பவும் இருக்கும். அதை விடலாமா ? ” என்று கேட்டேன். பின்னே ? Training எப்போதும் Training Hall லுக்கு உள்ளே மட்டுமா நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
ஏதோ சொல்ல வந்தவர் நிறுத்திவிட்டு என்னை தீர்க்கமாக பார்த்தார்.
” சரிதான். திறமை எப்போதும் நம்மிடம் இருக்கும். ஆமாம். தொழில் வரும் போகும். ஆமாம். அப்போ விடாம செய்யணும். சரி தான். ” என்று அவருக்குள்ளாக பேசினார்.
கிளம்பும்போது கேட்டேன்.
” வேறு எங்கோ வேலைக்கு போறேன்னு சொன்னீங்களே ? ”
சிரித்தார்.
” இனிமேல் எங்க போறது ? அதான் திறமையை தொட்டுடீங்களே. கஷ்டம் என்றாலும் தொடர்ச்சியாக செய்ய வேண்டியது தான் ”
முடியை இழந்து விட்ட நான் வேறு எதையோ பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். அந்த மனிதனின் நம்பிக்கை சிரிப்பு –
” உனக்கு இனி அங்கே வேலை இல்லை ” என்று சொன்னது.
💐💐💐