நான் எனப்படும் நான் : 085
#WhoIsJay : 060
💐💐💐
எந்த ஒரு சடங்கும், நம்பிக்கையும், மதமும், குண நலன்களும், வாழ்க்கை முறையும் – திறமைக்கு எதிராய் இருந்தால் …அவற்றை அல்லது அவற்றை வைத்திருக்கும் மனிதரிடம் இருந்து நான் விலகிவிடுவேன். ஆம். அதுவே நான். அதே சமயம் திறமை நோக்கி பயணிக்கும் மனிதம் நீங்கள் எனில் உங்களிடம் இருந்து நான் விலகுவது இல்லை. உடன் பயணிப்பது உயிர் இருக்கும் வரை தொடரும்.
” கல்யாணம் செய்ய வேண்டும் இல்லையா .. அதனால் தான் பெண்ணை தேசிய விளையாட்டு போட்டிக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டேன் ” என்று சொல்லும் மனிதரிடம் நான் சிரித்தேன். ஆம். என் மனதில் இருந்து அவர் விலகுகிறார்.
” உறவு சரியில்லை. யோசித்தேன். ஒரு நல்ல தகப்பனாக என் பெண்ணை வளர்க்க வேண்டும். அவளிடம் இருக்கும் திறமைக்கு பெரும் Artist ஆக வருவாள். எனவே அதை நோக்கி பயணிக்கிறேன். உறவுக்கு Bye சொல்லி இருக்கிறேன். ” என்று சொல்லும் தகப்பனை பார்த்தும் நான் சிரிக்கிறேன். ஆம். இவருடன் நான் பயணிப்பது தொடரும்.
” நல்ல வருமானம். ஆனாலும் Bye சொல்லிவிட்டு தனித்தொழில் தொடங்கி இருக்கிறேன். கொஞ்சம் கடினம் தான். முயற்சி செய்து முன்னேறி விடுவேன். இதை தான் நான் விரும்பினேன். ஆகவே வெற்றி உறுதி ” என்று சொல்லும் மனிதனை நான் நேசிக்கிறேன். திறமையை நம்பி தன் பயணத்தை ஆரம்பிக்கும் அவன் மனித வாழ்வின் எதிர்கால முன்னோடி.
” எனக்கு அவள் Doctor ஆகணும் னு விருப்பம். சும்மா அதையும் இதையும் Video வா பண்ணிட்டு இருந்தாள். இப்போ தான் கொஞ்சம் புத்திமதி சொல்லி Doctor சீட்டு ” வாங்கி ” இருக்கேன். இப்போ நிம்மதி. ” என்று சிரிக்கும் தகப்பனிடம் இருந்து விலகுகிறேன். ஒரு நல்ல Videographer ஐ உலகம் இழக்கிறது. அதே நேரம் வேண்டா வெறுப்பாக ஒரு மருத்துவர் உருவாகிறார்.
திக்கற்றவர்களுக்கு திறமையே துணை. ஆனால் .. அனைத்தும் வரமாய் பெற்றவர்களுக்கு ? அவர்களின் திறமை தான் முதல் Victim.
யோசிக்க வேண்டிய பார்வை இது என்று நீங்கள் நினைத்தால் உங்களின் கணவன், மனைவி, அப்பா, அம்மா, தங்கை, அண்ணன், மைத்துனர், மகள், மகன் .. அனைவரும் இன்னொரு திறமையை அடையக்கூடும்.
யோசிப்போம். பயணிப்போம். குறிப்பாக கடின காலங்களில் ஒன்றாக.
💐💐💐