அவனும் அவளும் : 015
#அவனும்அவளும் ; 015
கொஞ்சுதலும், சண்டை போடுதலும், பின் கட்டி அணைத்து கொள்ளுதலும் அன்பு என்று யார் ( எவன் எவள் ) சொன்னது ? ஏதோ ஒரு நாள் எவனோ ஒருவன் எவளோ ஒருத்தி .. இது நன்றாக இருக்கிறதே என்று ஆரம்பித்த மென் அடிமைத்தனம் இது. காதல் என்றால் இதுதான் என்று இலக்கணம் வகுத்த அந்த ஜீவியை தேடிக்கொண்டு இருக்கிறேன். காணவில்லை.
அலுவலகம் செல்கிறோம். அங்கே சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்கிறோமா என்றால் இல்லை. ஏன் எனில் அது வியாபாரம் – உறவு அல்ல என்று புது இலக்கணம் வேறு. என் கேள்வி எல்லாம் .. வியாபாரத்திற்கு வரும் பொறுமை உறவில் இன்னும் அதிகமாக இல்லையா வர வேண்டும் ? கூடவே பயணிக்கும் தொழிலை விட .. அதிக நேரம் பயணிக்கும் உறவிற்கு இன்னமும் பொறுமை அதிகம் தானே தேவை .. இல்லையா ?
அப்படி இல்லை .. ஏன் எனில் இது உறவு என்று உங்களுக்குள் தோன்றுகிறதா ? .. அங்கேதான் சில ஆண்களின் அல்லது பெரும்பாலான ஆண்களின் smartness இருக்கிறது.
பொறுமை என்றால் இருவருக்கும் வர வேண்டும். ஆனால் ஆணுக்கு வராது. அதனால் ஆண் மெதுவாக பெண்ணுக்கு பொறுமை வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான். கொஞ்சம் பலன் கிடைத்தது. பின் சமுதாயம் மூலமாக அதை Belief ஆக மாற்றினான். நிறைய பலன் கிடைத்தது. இருந்தாலும் பெரும் கட்டுப்பாட்டில் வைக்க விரும்பியது நடக்கவில்லை. அப்போது அவன் ஆரம்பித்து வைத்தது தான் கொஞ்சலும் / வர்ணித்தலும் / எதையாவது செய்து சரிப்படுத்தும் இலஞ்ச இலாவண்யமும் ! இது புரியாத அல்லது புரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாத பெண் … இதை அன்பு என்று நம்ப ஆரம்பித்தாள். ஆரம்பிக்கிறாள். இன்று வரை.
அப்படி என்றால் ஆண்கள் – கொஞ்சுவது உண்மையில் இல்லையா ?
உண்மையாக இருப்பது உண்மை எனில் .. எங்கே .. கீழ்க்கண்ட நேரங்களில் அவனை கொஞ்ச சொல்லுங்கள் பார்ப்போம்.
💐 தன் மனைவி … அவளின் புது உயரத்தை , அவளின் கனவை அடைய முயற்சிக்கும்போது.
💐 தன் மனைவி புது உயரத்தில் இருக்கும் போது
💐 தன் மனைவியை மற்றவர் பாராட்டும்போது
💐 தன் மனைவியின் கனவை அவள் அடைந்தவுடன்.
💐 தன் மனைவியின் கனவை அவள் தொட்டவுடன் … அடுத்த கனவு என்ன என்று கேட்டுவிட்டு ….. பின் கொஞ்சுவது.
எங்கே செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் ? அப்போது தெரியும் அவனின் அன்பு உண்மையா இல்லையா என்று. ( என் கணவர் அப்படித்தான் என்றால் மகிழுங்கள். ஆனால் பொதுவில் சொல்லும்போது எல்லா ஆண்களும் அப்படித்தான் என்று சொல்லாதீர்கள் ! )
💐💐💐
பெண்ணும் இதை எல்லாம் யோசிப்பது இல்லை. அவளுக்கு அவளை… கொஞ்சி கொண்டே இருக்க வேண்டும். ஒரு வகையில் இது அப்பாக்களின் தவறு என்று கூட சொல்லலாம். தன் மகளை சாதிக்க வைத்து கொஞ்சும் அப்பாக்களை பார்த்த பெண்கள் கணவனிடம் கொஞ்சல்களை எதிர்பார்ப்பது இல்லை.
தன் கனவுகளை புதைக்க வேண்டும். கணவன் இஷ்டப்படி நடக்க வேண்டும். ம் என்றால் ஆமாம் என்று நிற்க வேண்டும். அங்கங்கே கொஞ்ச வேண்டும். பின் சில வர்ணனைகள். பின் சில ” என் மனைவி போல உண்டா ? ” என்கிற பொதுவான பொய்கள். இது போதும் … பெண் அமைதியாகி வீட்டிற்குள் சிரித்து காலம் கடப்பாள். ஆண் வெளியே அனைத்து ” தவறுகளையும் ” அழகாக பண்ணிக்கொண்டு வந்து மீண்டும் கொஞ்சுவான்.
இதெல்லாம் கடந்து பெண்ணின் திறமையை வெளியே கொணர ஆண் முயற்சிக்கும் நேரங்களில் …
பெண்ணுக்கும் சில கேள்விகள்.
💐 உங்களின் திறமையை வெளிக்கொணர நினைக்கும் ஆணை எப்படி உங்களால் எதிரியை போல பார்க்க முடிகிறது ? ( கணவன் என்றால் கொஞ்ச வேண்டும் என்று எந்த இலக்கணத்தில் எழுதப்பட்டு இருக்கிறது ? )
💐 உங்களின் திறமையை வெளியே கொணர ஆண் முயற்சி எடுத்தால் .. இதெல்லாம் வேண்டாம் … நீ என்னை கொஞ்சி கொண்டே இரு .. என்று உங்களை சொல்ல சொன்னது யார் ?
💐 ” எனக்கு நீங்கள் கணவனாக மட்டுமே வேண்டும். எனக்குள் எந்த திறமையும் இல்லை அல்லது என் திறமையை வெளிப்படுத்த தேவை இல்லை. அதான் நீங்கள் இருக்கிறீர்களே ” என்ற மடத்தனமான dependant statements ஐ நீங்கள் எங்கே கற்றுக்கொண்டீர்கள் ?
💐 ஒரு ஆண் இறந்த பின் அல்லது ஆணை விட்டு பிரிந்த பின் .. “எனக்கு எதுவும் தெரியாது. நான் ஒரு House Wife மட்டுமே ” என்று சொல்லும்போது உங்களின் கண்களில் … ஒரு அழுகை வருகிறதே .. அது ஏன் ? ( இவ்வளவு நாளாய் எவ்வளவு முட்டாள்தனமாக வாழ்ந்திருக்கிறோம் என்று நினைப்பதாலா ? )
💐💐💐
” சராசரிக் கொஞ்சல் உங்களின் பெரும் எதிரி. சாதித்த பின் கொஞ்சல் தான் அன்பு. ” என்பதை பெண்ணும் ஆணும் உணரும்போது .. சமத்துவம் எல்லாம் அழகாக நடக்கும். பெண்ணீயம் பித்தளை செம்பு எல்லாம் தேவைப்படாது. ஆணை போல பெண்ணுக்கும் திறமை இருப்பது உண்மை எனில், அவள் கொஞ்சப்படுவது அந்த திறமையை அடக்கி வைப்பதற்காக என்பதும் உண்மை எனில் .. அதை முதலில் எதிர்கொண்டு ” எனக்கு இந்த கொஞ்சல் எல்லாம் வேண்டாம். திறமை வளர்க்கும் வழிகள் வேண்டும் ” என்று பிடிவாதம் பிடிப்பதில் இருக்கிறது பெண் விடுதலை !
💐💐💐
இங்கே என்னிடம் கேள்விகள் கேட்கும் முன் உங்களின் மனசாட்சிகளிடம் கேள்வி கேளுங்கள். அங்கே பதில் கிடைக்கட்டும். பிறகு ஊரை பற்றி கவலைப்படுவோம்.
💐💐💐





