நகரும் புல்வெளி : 044
#JustGetOut ; 001
💐💐💐
வாழ்க்கை வழியெங்கும் மலர் தூவி வரவேற்க்குமா ? வாய்ப்பே இல்லை. ஆங்காங்கே மலர் தூவல் இருக்கலாம். ஆனால் Life Is Not Fair என்பதே உண்மை. முட்கள் தான் நிறைய. அது ஏற்படுத்தும் வலிகளும் அதிகம். பிறகு ஏன் Life Is Beautiful என்று யாரோ சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ?
ஒரு முள் அதிகபட்சம் என்ன செய்து விட முடியும் ? கொஞ்சம் வலியை ஏற்படுத்த முடியும். பல முட்கள் ?. இரணத்தை ஏற்படுத்த முடியும். பெரும் கத்தி ? உயிரை எடுக்க முடியும். முட்களும் கத்தியுமான வார்த்தைகள் நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகளும் இப்படியே. கொஞ்சம் கொஞ்சமாக கீறல் ஏற்படுத்தி பின்னர் முழுமையாக ஒழுகும் இரத்தத்தை என்ன செய்வது என்று யோசிப்பதும் வாழ்க்கை தான். ஆனால் .. அந்த நேரத்தில் ஒரே ஒரு வரி – ஆம் நமக்குள் தோன்றும் ஒற்றை வரி தான் அந்த இரணத்திற்கு இதம். அந்த இதம் தான் Life Is Beautiful என்று சொல்ல வைக்கிறது. ஒற்றை இதம் தான் காத்திருப்பு. முட்கள் தான் பெரும் பயணம். ஆங்காங்கே கிடைக்கும் ஒற்றை இதத்திற்காக வழியெங்கும் முட்களை வைத்திருக்கும் வாழ்க்கையை Not Fair என்று சொல்வதும் சரியே.
சில நேரங்களில் சில வரிகள் நம்மை அப்படியே உட்கார வைக்கும். அதே போல சில வரிகள் நம்மை எழ வைக்கும். நம்மை சுற்றி இருப்பவர்கள் பேசுவது இருக்கட்டும். அதை அப்புறம் கவனிப்போம். நமக்குள் பேசுகிறோமே .. அது நம்மை உட்கார வைக்கிறதா ? எழ வைக்கிறதா ? உட்கார வைத்தால் முள். எழ வைத்தால் இதம்.
இதே முட்களுக்கு இடையேயான இடைவெளியில் ஒரு சிறு பட்டாம்பூச்சி தன் இறகுகளை கீறிக்கொள்ளாமல் அழகாக பறந்து கொண்டிருக்கிறது. அதுதான் லாவகம். அதுதான் தேவை. முட்களை குறை சொல்லி பயன் இல்லை. இதம் தேடுவதும் அழகல்ல. லாவகம் தான் தேவை. லாவகம் உடன் கிடைப்பது. தன் அறிவு சார்ந்தது. லாவகம் முட்களை பற்றி கவலைப்படுவது இல்லை. முட்களுக்கு இருக்கும் சிறு இடைவெளி போதும் அதற்கு. அப்படித்தான் அந்த பட்டாம்பூச்சி பறக்கிறது.
நானும் பறக்க வேண்டி இருக்கிறது. முட்கள் இருக்கட்டும். முட்களுக்கு இடையில் தெரியும் இடைவெளியில் லாவக படகை செலுத்த வேண்டிய அழகான சவால் எனக்கு. என் படகின் பயணம் ஆரம்பித்து இருக்கிறது. இப்போது அல்ல. பல வருடங்களுக்கு முன். லாவகம் தான் வழி. அந்த வழியில் நீங்களும் பயணித்தால் .. என்னை உரசாது பயணிக்கும் இறக்கைகளை நீங்கள் பெற்றிருந்தால் .. நாம் இருவரும் சந்திப்போம். ஒரே புள்ளியில். சிரித்த முகத்துடன்.
💐💐💐