நகரும் புல்வெளி : 045
justgetout ; 002
💐💐💐
பெரும் இலை அது. பசுமையாய் உயிர்ப்புடன் தன்னை இயன்ற அளவு விரித்து காம்புகளின் உதவியால் horizontal ஆக அட்டகாசமாய் நிற்கிறது. ஈரம் இருக்கும் எதற்கும் இருக்கும் அழகு அதற்கும். ஆங்காங்கே காலை மழை துளியின் பனித்துளிகள்.
மரத்தில் இருந்து பிரியும் வேளை வந்த இலையொன்று இந்த பெரும் இலையில் விழுந்து தன்னை தேடிக்கொண்டு இருந்தது. அடிக்கும் காற்றில் அது பறக்காமல் இருக்க எங்கிருந்தோ வந்த சருகு ஒன்று அதனுடன் பின்னி பிணைந்து .. அதை காப்பாற்றி பிடித்துக்கொண்டே நின்றது. கரணம் தப்பினால் மண்ணில் விழுந்து மரிந்து மரணம் என்னும் நிலையில் … இருந்த அந்த இலைக்கு.. பெரு இலையின் ஈரமும் தன்னை கட்டிபிடித்துக்கொண்டிருக்கும் சருகும் தான் தற்போதைய வாழ்க்கையின் கலங்கரை விளக்கம்.
வாழ்க்கையில் நம்மை ஏதோ ஒரு பெரு இலையின் ஈரமும், தாங்கலும், உயிர்ப்பும் தான் மண்ணில் விழுந்து விடாமல் காப்பாற்றி கொண்டே இருக்கிறது. சருகு தானே என்று நாம் கடக்கும் அதே சருகு தான் அப்போதைய கணத்தில் நம்மை ” இறுக்கிப்பிடித்து ” பறந்து விடாது காப்பாற்றுகிறது. இந்த பெரு இலையும், சருகும் … வாழ்க்கையின் கலங்கரை விளக்கங்கள்.
கடைசியாக நம்மை காப்பாற்றிய பெரு இலையும் சருகும் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா ? அந்த பெரு இலைக்கும் சருகுக்கும் நாளை முதலில் நன்றி சொல்லுங்களேன். யாருக்கு தெரியும் ? அந்தப் பெரு இலை இன்னும் சில பக்கங்களை தனக்குள் ஒளித்து வைத்து உங்களுக்கு மீண்டும் உதவக்கூடும். அந்த சருகு உங்களை மீண்டும் அணைத்துக்கொள்ள தயாராக காத்திருக்கக்கூடும்.
வாழ்க்கையின் பக்கங்களை இயற்கை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. கவனிப்பவன் கவனிப்பவள் … பெரும் அதிர்ஷ்டசாலி. கவனிக்காது பயணிப்பவன் பயணிப்பவள் ?. மீண்டும் இந்த காட்சிக்கு வந்தே தீர வேண்டும். இதை பார்த்து பாடம் கற்றே ஆக வேண்டும். அது இயற்கையின் கட்டளை.
💐💐💐