நான் எனப்படும் நான் : 095
#WhoIsJay : 070
💐💐💐
மும்பையில் நான் இருந்த போது சந்தித்த ஒரு பெண்மணி அவருக்கும் அவரின் அப்பாவுக்குமான புரிதல் இல்லாததை பற்றி சொன்னார். அப்பாவை miss செய்வதையும் சொன்னார். எப்படியாவது அப்பாவுடன் பழையபடி பேசவேண்டும் என்று சொன்னார். ” சரி அவரை சந்திக்கிறேன் ” என்று சொல்லிவிட்டு அவரை சந்தித்தேன்.
போன தலைமுறை மனிதர் அவர். அவரின் கேள்விகள் எல்லாம் முரட்டுத்தனமாகவே இருந்தது. அமைதியாக பதில் சொல்ல சொல்ல அந்த முரட்டுத்தனம் குறைந்து கொண்டே வந்ததை நான் ரசித்தேன். மகளை பற்றி பேச ஆரம்பித்தேன்.
” என் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்ட அவளை பற்றி பேச வேண்டாம் “என்று கோபம் காட்டினார்.
” திருமணமான உங்களின் மகளை பற்றி நான் பேசவில்லை. உங்களின் மகளை பற்றி பேசுகிறேன் ” என்று நான் சொன்னவுடன் நிமிர்ந்து பார்த்தார். அமைதியாக இருந்தார். பிறகு பேச ஆரம்பித்தார். நான் அமைதியாக கேட்க ஆரம்பித்தேன்.
அனைத்து அப்பாக்களும் மகள்களை ஏதோ ஒரு விதத்தில் மகள்களின் திருமணத்திற்கு பின் இழக்கிறார்கள். அந்த இழப்பை அவர்களால் வெளியே சொல்ல முடியாது அதே சமயத்தில் சொல்ல முயற்சித்து தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். நிறைய அப்பாக்களின் மௌனங்களில் அவர்களின் மகள்களின் கடந்த கால நினைவுகள் புதைந்து இருப்பது பெரும் யதார்த்தம்.
” எனக்காக யார் இங்கே இருக்கிறார் ? ” என்பது தான் அவரின் பெரும் கேள்வி. அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அதை புரிந்துகொண்டு .. அமைதியாக வெளியேறினேன். மகளிடம் பேசினேன். மகளின் கண்ணில் பெரும் நீர்.
மும்பையில் ஒரு service ஒன்று இருந்தது. அதாவது நாம் ஒருவரை surprise செய்ய நினைத்தால் .. அவருக்கு Gift அனுப்பிக்கொண்டே இருக்கலாம் – யார் அனுப்புகிறார்கள் என்று தெரியாமல், அந்த நிறுவனத்தின் ஒரு மனிதர் அந்த Gift ஐ நாம் சொல்லும் மனிதரிடம் கொடுப்பார். மகளிடம் இதை சொன்னேன்.
” அப்பாவுக்கு உங்களின் நினைவுகளை Gifts ஆக அனுப்புங்களேன் ”
அவருக்கு புரியவில்லை.
“நீங்களும் அப்பாவும் இருக்கும் பழைய புகைப்படங்களை Frame செய்து அனுப்பினால் என்ன ? ” என்று கேட்டபோது பெரும் மகிழ்ச்சி அவரின் கண்ணில்.
” கூடவே மனதில் தோன்றுவதையும் எழுதி அனுப்புங்களேன் ”
அனுப்ப ஆரம்பித்த 17 ஆம் நாளில் அப்பா மகளை பார்க்க வந்துவிட்டார். ( நிறைய அப்பாக்களுக்கு பழைய நல்ல நினைவுகள் மட்டுமே போதும் – தேவை அற்றவைகளை நினைவில் இருந்து அழிக்க ! )
30 ஆவது நாள் .. இருவரும் என்னை அழைத்திருந்தார்கள். இரவு உணவு, நல்ல நினைவுகள் பற்றிய பேச்சு .. அனைத்தும் கடந்து .. என்னை பற்றிய பேச்சு வந்தது.
” ஒரு அப்பாவின் உணர்வுகளை உங்களால் எப்படி சரியாக உணர்ந்து .. இந்த புகைப்படங்களை Gift ஆக அனுப்ப சொல்லத் தோணியது ? ”
நான் அமைதியாக சிரித்தேன். பிறகு சொன்னேன்.
” நல்ல நினைவுகளை தவிர வேறு என்ன கொண்டு செல்ல போகிறோம்?. அன்பை பருகுவோம் ”
மூவரும் சிரித்தோம்.
அப்பா மகளின் உறவு தந்தையின் இறப்பு வரை தொடர்ந்தது. இறக்கும் தருவாயில் அவர் நினைவுபடுத்திய பெயர்களில் ஒன்று என்னுடையது என்று மகள் சொன்னபோது மகிழ் நீர் என் கண்களில்.
அவர் சொன்னதை இங்கே அப்படியே சொல்கிறேன்.
” ஏதாவது கஷ்டம் வந்தால் Jai Hanuman சொல்ல சொல்லி சொல்வாங்க. நான் Jai ன்றது ஒரு கோஷம் ன்னு நினைச்சிட்டு இருந்தேன் – Jay யை பார்க்கும் வரை ! ”
எனக்கான நிறைய பின்னூட்டங்கள் பெரும் பொக்கிஷங்கள். அப்படி ஒன்றை உங்களிடம் பகிர்வதில் மகிழ்கிறேன்.
💐💐💐