நான் எனப்படும் நான் : 098
#WhoIsJay : 073
💐💐💐
நாடு, சுதந்திரம், முன்னேற்றம், இத்தனை வருடங்கள் …அனைத்தும் பற்றி பேச காலையிலேயே .. ஆரம்பித்தாயிற்று – ஒன்றே ஒன்றை தவிர. அது என்ன ?
நாம் சுதந்திரமாக இருக்கிறோமா ? அதாவது .. ” இதுதான் நான் ” என்று சொல்லும் அளவிற்கு, இதுவே என் உணர்வுகள் என்று சொல்லும் அளவிற்கு, இதுவே என் பார்வை என்று சொல்லும் அளவிற்கு, இது தவறு இது சரி என்று ஒரு முடிவில் நான் சொல்லும் அளவிற்கு … நாம் சுதந்திரமாக இருக்கிறோமா ?
நம் தவறுகளை நாம் சொல்லி அதற்கு பின்னும் நாம் சரியாகப் பார்க்கப்படும் அளவுக்கான சுதந்திரம் நமக்கு இருக்கிறதா ? கிடைக்கிறதா ? கொடுக்கிறோமா ?
என்னை பொறுத்தவரை ” இதுதான் நான் ” என்று சொல்லி என்னால் வாழ முடிவது மட்டுமே என் சுதந்திரம் என்று தோன்றுகிறது. மண்ணில் எதையாவது மறைக்க வேண்டும் எனில் தடுப்பு தேவை. மனதில் மறைத்தால் ? முகமூடி தேவை ! முகமூடியற்ற வாழ்வே தனி மனித சுதந்திரம். தனி மனித சுதந்திரம் கிடைக்காமல் .. நாடு சுதந்திரம் என்று announce செய்து என்ன மகிழ்ச்சி இருக்க போகிறது ?
💐💐💐
என்னை தவறாக நினைப்பார்களோ ? – இது தான் சுதந்திரத்தின் முதல் எதிரி. நினைக்கட்டும். அவரவர் வாழ்வுக்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள். அவரவர் வாழ்வுக்கு ஆயிரமாயிரம் நியாயங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். வழி. நியாயம். தர்மம்.
எல்லோருக்கும் நல்லவனாக நல்லவளாக இருக்க நினைப்பது தான் சுதந்திரத்தின் இரண்டாம் எதிரி. உண்மை பேசும் ஒருவனை எப்படி பொய் பேசும் ஒருவனுக்கு பிடிக்கும் ? நடிக்கா ஒருவனை எப்படி நடிப்பவனுக்கு பிடிக்கும் ?
எனக்கு இது தெரியும். உனக்கு தெரியுமா ? – என்று சொல்ல முனைவது Ego வின் அறிகுறி மட்டும் அல்ல. இன்னொருவரின் சுதந்திரத்தின் முதல் தலையீடு. இது மூன்றாம் எதிரி. இதுவாவது பரவாயில்லை. ஆனால் … உனக்கு இதெல்லாம் தெரியாது – என்பது பெரும் வன்முறை. கற்றல் சமதளத்தில் இருக்க வேண்டும். கற்பவர்கள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்.
” நான் தவறே செய்வதில்லை ” என்பது நான்காம் எதிரி. இதைவிட ஒரு பெரும் அடிமைத்தனம் இருக்க வாய்ப்பே இல்லை. அனைத்தும் மாறும் உலகில் ஒருவன் ஒருத்தி தவறே செய்யாமல் எப்படி இருக்க முடியும் ?
நேரம் வரும்போது எல்லாம் மாறுகிறது எனில் …இங்கே எல்லோருமே சரியே. அப்படி ஒரு மனநிலை வரும்போது .. உண்மையான தனிமனித சுதந்திரம் வரும். அப்போது கொண்டாடுவோம் நாட்டின் சுதந்திரத்தை. பேருக்கு நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
💐💐💐
யோசிப்போம்.
💐💐💐