மீள்நினைவுகள் : 008
மீள் நினைவுகள்
புகைப்படம் எடுத்தல் என்பது என்னவோ ஏதோ எப்படியோ …என்கிற ஒரு செயல் அல்ல. அது ஒரு தவம். ஆம். கண்கள் -கருவி – காட்சிகள் -காதலித்தல் – அனைத்தும் சேர்ந்த ஒரு சாட்சிக்கு பெயர் தான் புகைப்படம்.
பொதுவாக நான் விரும்பும் படி ஒரு புகைப்படம் எடுத்தால் எனக்கு உள் நாக்கில் எச்சில் ஊறும். எடுத்து முடித்த பின்பும் அந்த காட்சியை கருவியிலும், நேரிலும் பார்த்துக்கொண்டே நிற்பேன். கிட்டத்தட்ட இயற்கை எனக்கு நேரிடையாக வரம் கொடுக்கும் நிகழ்வு அது. வானவில் பார்த்து இருப்பீர்கள் .. தரையில் ஆரம்பித்து தரையில் முடியும் வானவில்லை நீங்கள் பார்த்தது உண்டா ? அதை புகைப்படம் எடுத்தது உண்டா ? அந்த வானவில்லுக்கு நடுவில் நீங்கள் நின்றது உண்டா ? இதெல்லாம் இயற்கையின் வரம் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் ?
பொதுவாக புகைப்படம் எடுப்பது சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் என்றே ஆரம்பிக்கிறது. சிலருக்கு பூக்களில் …சிலருக்கு நீர்நிலைகளில். ( selfi எல்லாம் புகைப்பட கலையில் இல்லவே இல்லை என்றே நான் சொல்லுவேன் ! ). அப்படி ஆரம்பிக்கும் பயணம் .. மெதுவாக மனிதர்களை நோக்கி, பின் காட்சிகளை நோக்கி, பின் அதிசய காட்சிகளை நோக்கி நகர்கிறது. அதற்கு பின் தான் புகைப்பட கலைஞன் வாழ்வில் ஒரு பெரும் மாற்றம் நடைபெறுகிறது. ஆம்.
ஒரு கட்டத்தில் அவன் அவள் யதார்த்த வாழ்வை நோக்கி பயணிக்கிறான். றாள். சாதாரண காட்சிகளில் அவன் அவள் அழகை ரசிக்கிறான். றாள். அந்த காட்சிகளில் இருக்கும் யதார்த்தத்தில் மயங்கி அதை தன் புகைப்படத்தில் கொண்டு வருகிறான். யதார்த்தத்தை கொண்டு வரும் புகைப்படங்கள் தான் உலகப்புகழ் பெற்றவை யாக மாறுகின்றன.
ஒரு நல்ல புகைப்படத்தை எடுத்து முடித்த பின் .. உள்ளே ஒரு அமைதி வரும். ( அப்போது Beats Per Minute check செய்து பாருங்கள். 40 அல்லது 50 தான் இருக்கும் ! ). அந்த அமைதியில் இந்த உலகம் ஒரு சில நொடிகள் நின்று பின் இயங்குவதை உணர முடியும். அந்த ஒரு சில நொடிகள் நிற்கும் உலகத்தை காணத்தான் இவ்வளவு புகைப்படங்கள் முயற்சி செய்கின்றன. கிட்டத்தட்ட ஒரு தவத்தில் இருக்கும் சாதுவின் மனநிலையில் புகைப்படக்காரர்கள் அங்கும் இங்கும் நடந்துகொண்டு அல்லது எங்கோ ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது ..
மீண்டும் எனக்குள் இருக்கும் புகைப்பட கற்றாளனுக்கு ஒரு துடிப்பு வரும். அங்கே அவன் எழுந்து நடக்க ஆரம்பித்து ரசித்து காதலித்து எடுக்கும் புகைப்படங்கள்.. நான் இங்கே வாழ்ந்ததன் சாட்சியங்கள். என் இறப்பிற்கு பின்னும் அவை உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்.
என்னுடைய சில புகைப்படங்களை comment இல் பதிகிறேன்.