மீள்நினைவுகள் : 005
#மீள்நினைவுகள் ; 005



இரத்தம் கொடுப்பது அவ்வளவு நல்ல விஷயம். திருப்பூரில் இருக்கும்போது கொடுத்த நிகழ்வு இது.



இதுவரை 33 முறை கொடுத்திருக்கிறேன். சில காலங்களுக்கு பின் தானாக நின்றிருக்கிறது. ஏன் என்பது எனக்கு ஆச்சர்யம் தான். மீண்டும் ஆரம்பிக்கிறேன்.
முதல் முறை Vijaya Hospital சென்னையில் ஆரம்பித்த இந்த நிகழ்வு, அங்கே இருந்து இந்தியா முழுக்க .. பயணிக்கும் இடங்களில் எல்லாம் எங்கெங்கு கொடுக்க முடியுமோ .. அங்கெல்லாம் கொடுத்த நினைவுகள் இன்னமும் எனக்குள்.
அகமதாபாத் தில் ஒரு முறை இரத்தம் கொடுத்து வெளியே வந்த போது … அது சம்பந்தப்பட்ட குடும்பத்தில் இருந்து … ஒருவர் வந்து காலை தொட வந்தார். பதறிப்போய் தள்ளி நின்ற போது அவர் சொன்ன வார்த்தை இன்னமும் என் ஞாபகத்தில் ..
” எனக்கு என் இனம் ஜாதி மதம் என்றெல்லாம் பெரும் நம்பிக்கை உண்டு. விபத்தில் என் மகள் உயிருக்காக போராடும் சமயத்தில் … நீங்கள் வந்து உடனே கொடுத்தீர்கள். நீங்கள் யார் எங்கே இருந்து வருகிறீர்கள் .. என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இப்போது மகள் உயிர் பிழைக்க உங்களின் இரத்தமும் ஓர் காரணம் என்று மருத்துவர் சொன்ன போது .. என் இனம், ஜாதி, மத நம்பிக்கையெல்லாம் ” ஒன்றுமில்லை ” என்று ஆகியிருக்கிறது. அதனால் தான் காலை தொட வந்தேன். பொதுவாக நான் கோவிலில் தெய்வத்திற்கு முன் தான் காலில் விழுவேன். வேறெங்கும் விழ மாட்டேன் “



டெல்லியில் இரத்தம் கொடுத்த போது .. ஒரு பணக்கார மனிதர் ( அவரின் தம்பிக்கு நான் கொடுத்திருந்தேன் ) … என்னை வந்து பார்த்துவிட்டு .. ” நன்றி ” என்று சொல்லிவிட்டு .. நகர்ந்தார். அதாவது அந்த ” நன்றி ” யில் ஒரு உயிர் இல்லை. இப்படியும் மனிதர்கள் !



இன்னொரு முறை நான் கொடுத்த இரத்தம் … என் நண்பரின் அப்பாவிற்கு சென்று இருப்பதை … நண்பர் சொல்லி அறிந்த போது ஒன்று புரிந்தது.
” இரத்த தானம் யாருக்கோ மட்டும் நாம் கொடுக்கவில்லை. நம் சார்ந்த மனிதர்களையும் அது அடையக்கூடும் ! “


