Jerspective : 019
வாழ்க்கையின் மிகப் பெரும் வெற்றியாளன் யார் ? என்று என்னை கேட்டால் …” பெருவெளி ( Space ) ” என்பதை தான் சொல்வேன். அதை நீங்கள் கவனித்தது உண்டா ? யாருமற்ற அந்த வெளி தான் இந்த உலகின் பெரும்பான்மை. நாம் இருக்கும் இடம், நம் நிலம், கட்டிடங்கள், சமுதாய அமைப்பு .. இதெல்லாம் Negligible !.பெரு வெளியின் பெரும்பான்மையை இந்த உலகில் வெல்ல ஒரு ” பான்மை “யும் இல்லை !
ஏன் இமயம் என்னை மீண்டும் மீண்டும் ஈர்க்கிறது என்றால் காரணம் மிக எளிது ! ஆம். அதன் “பெரு வெளி ” ! காலையில் என் பயணத்தை தொடங்கினால் … இரவு நான் என் இலக்கை அடையும் வரையிலான பயணத்தில் … ஒரு மனிதனை கூட நான் பார்க்க வாய்ப்பில்லாத உலகம் அது ! ஆம். நானும் பெருவெளி யும் மட்டும் என்பதை விட எனக்கான ” பூமி நேரம் ” உண்டா இந்த உலகில் ! ?
Pankong ஏரி – உலகின் அழகியல்களில் ஒன்று. இந்திய சீன எல்லையில் இருக்கும் இந்த ஏரியை நோக்கிய பயணத்தில் …வழி இப்படித்தான் யதார்த்தமாக நமக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல நிற்கும் ! நம்மூர் சாலைகளை போல நொடிக்கொரு தரம் அடிபடும் சாலை அல்ல அது ! ஒரு நாளைக்கே ஒன்று அல்லது இரண்டு வாகனங்கள் நகரும் சாலை அது ! பொதுவாகவே யாரும் அற்ற சாலைகள் அழகு. நீங்கள் கடைசியாக யாருமே அற்ற சாலையை எப்போது கண்டீர்கள் ?
தூரத்தில் தெரியும் பனி மூடிய மலைகள் எதுவும் பேசுவதில்லை. ஆனால் .. நமக்குள் பேச்சை ஆரம்பித்து வைக்கின்றன. மேகங்களை அது இழுத்துக்கொண்டு … மழையை நமக்குள் ஆரம்பித்து வைத்து, குளிரால் நம்மை அணைத்து .. நம் மூச்சுக்காற்று நமக்கே கேட்கும் அழகியலை சொல்லிக்கொடுக்கும் மலைகள் அவை !
இந்த உலகத்தின் அத்துணை பணக்காரர்களுக்குமான என் சவால் இது .. மலைகளுக்கு இடையில் தெரியும் Space இருக்கிறதே .. அதை எங்காவது விலைக்கு வாங்கிவிடுங்களேன் பார்ப்போம் ! முடியவே முடியாது உங்களால் ! அப்படியே வாங்கினாலும் .. உங்களுக்கு அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது ! ஆனால் … இந்த Space ஐ அப்படியே சுவாசித்து, Oxygen ஐ கொள்முதல் செய்யும் நாடோடியான எனக்கு கண்டிப்பாக தெரியும் … இந்த Space ஐ என்ன செய்ய வேண்டுமென்று !
ஒரே ஒரு உதாரணமாக … மனம் உதிர்த்த ஒன்றை இங்கே இருந்து எழுதியதை … இப்போது உங்களுடன் பகிர்கிறேன்.
நிலைத்தல் ;
” பெரு வெளி “
சுதந்திரமாக
வாழ முடிவெடுத்தபோது …
காற்று அரவணைக்கிறது …
காலம் பாதுகாக்கிறது …
நிலைக்கிறது அந்த
” பெருவெளி “
சுதந்திரமாக
வாழ முடிவெடுத்தபோது … !
என்ன ?
நீங்களும் அந்த ” பெருவெளி ” யை சுவாசிக்க ஆரம்பித்தாயிற்றா ?





