Jerspective : 023



கொஞ்சம் தனிமையாக உணர்கிறீர்களா ? நிச்சயமாக உங்களுக்கான சாலையை நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் !!



ஏற்காடு எப்போதுமே அழகான பரப்புகளை கொண்டது. ஆனால் செல்லும் மக்கள் .. முன்னே இருக்கும் ஏரி, ஆங்காங்கே சில இடங்கள், சேர்வராயன் கோவில்.என்று வந்துவிடுவதை பார்த்தால் சிரிப்பாக இருக்கும். யாருமற்ற சாலைகளை நிறைய வைத்திருக்கும் ஏற்காட்டிற்கு உள்ளே பயணிக்க வேண்டும். பயணித்தால் … இப்படியான சாலைகளையும் காணமுடியும் !
பெரும் மரங்கள், வளையும் சாலை, பச்சை பசேல் புற்கள், மர நிழல்களை தாங்கிக்கொள்ளும் சாலைகள்… ஒரே காட்சியில் இத்தனையும் கிடைக்கும் ஆச்சர்யம் !
இந்த சாலையில் இறங்கி நடந்தால் .. அழகான தென்றலின் மூலிகை நறுமணம் முதலில் மனதை வருடுகிறது. இலைகள் அசையும் போது அதற்கேற்ற படி காற்றில் ஏற்படும் மாற்றம் காதால் உணரமுடிகிறது. இலேசான மழைத்தூறல் ….. நேற்று இரவு பெய்த மழையின் சாலையோர ஈரம்… என்று அந்த உலகம் வித்தியாசமாய் இருக்கிறது.
யாருமில்லை என்பது தண்டனை அல்ல. யாருமில்லை என்பது ஏக்கம் அல்ல. யாருமில்லை என்பது தோல்வி அல்ல.
யாருமில்லை என்பது அந்த சாலையை போல இயல்பான ஒன்று. யதார்த்தத்தை ” யாருமில்லாத போது ” அழகாக புரிந்துகொள்ள முடியும். யாருமற்ற சாலையில் நடப்பது சுதந்திரத்தின் உச்சம். நிற்பது நடப்பது அமர்வது ரசிப்பது பாடுவது .. அனைத்தும் சுதந்திரத்தின் பிரதிநிதிகள்.
திரும்ப வாகனத்தை நோக்கி நடக்கும்போது கவனித்தேன். பறவை ஒன்று வாகனத்தின் மேல் .. அமர்ந்து .. வானம் பார்த்துக்கொண்டு இருந்தது. நான் அருகில் வந்தும் அதனிடம் எந்த மாற்றமும் இல்லை. எனக்கு ஆச்சர்யம். வாகனத்தின் கதவை திறந்தபோதும் அதனிடம் … மாற்றமே இல்லை ! வாகனத்தை Start செய்த பின்னும் … அது அப்படியே இருந்தது. வாகனத்தின் மேல் அமர்ந்து இருந்தது. ( இறக்கையை பார்க்க முடிந்தது ).
சில நிமிடங்களுக்கு பின் தான் அது பறந்தது. ஆம். அதுதான் சுதந்திரம் ! அதுதான் யாருமில்லை என்கிற உலகத்தின் அச்சாணி !
அடுத்த முறை ஏற்காடு செல்லும்போது இந்த சாலையை கண்டுபிடியுங்களேன். கண்டுபிடித்தால் .. அநேகமாக நானும் அங்கே இருக்கக்கூடும்.


