Jerspective : 024



வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்கிறது. அதை ரசிக்கிறவர்கள் வாழ்கிறார்கள். மற்றவர்கள் ?. வாழ முயற்சித்து, வாழ முடியாது, வாழ்வை வெறுத்து, வாழ்பவர்களை பார்த்து பொறாமைப்பட்டு, வாழ்பவர்களை வாழ விடாது செய்து … ஆச்சர்யம் தான். இவ்வளவும் செய்வதற்கு பதில்.. ரசித்து வாழ்ந்து விட்டு போகலாம் !



10000 அடிக்கு மேலான மலை வாழ்க்கை, யாருமற்ற வளைவுப் பாதை, எப்போது வேண்டுமானாலும் மாறும் வானிலை, எழுபதுக்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள், பின்னே இருந்து அனைத்தையும் கவனிக்கும் கணவன், முன்னே இருந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனைவி … இந்தக் காட்சியில் இன்னொரு சிறப்பம்சம் உண்டு. புகைப்படத்தில் சொல்ல முடியாத அம்சம் அது. ஆம். பாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் அவர்கள் நடந்த விதமும் .. அதற்கு ஆட்டுக்குட்டிகள் சேர்த்த இசையும் ! வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்கிறது. ரசிப்பவர்கள் வாழ்கிறார்கள்.
ஒரு பெரிய வீடு. பெரிய என்றால் உண்மையிலேயே பெரிய. சாலையில் இருந்து வீட்டை அடையவே .. 2 நிமிடம் ஆகும் – வாகனத்தில். அப்படிப்பட்ட வீடு. புல்வெளி. வாகன நிறுத்தத்திற்கு தனி அறை. 13 வாகனங்கள். வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தால் .. வீட்டின் அனைத்து பொருட்களும் சிங்கப்பூரில் இருந்தோ அல்லது ஸ்விட்சர்லாந்தில் இருந்தோ …வந்த பொருட்களாக இருக்கிறது. எந்த வேலைக்கும் பணியாளர்கள் ஏழு பேர்.
இவ்வளவும் இருந்து நான் அங்கே சென்றது .. ” Counselling ” கிற்கு. ஆம். கணவன் மனைவிக்கு இடையே பெரும் மன பிரச்சினைகள். வாழப் பிடிக்கவில்லை அதனால் வருத்தங்கள். கணவன் மனைவியின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டும் மனைவி கணவனை பற்றி ” பேசவே விரும்பவில்லை சார் ” என்றும் – வார்த்தை அசிங்கங்கள் ! எனக்கு பின்னே இருந்து கவனித்த கணவனும், ஆட்டுக்குட்டிகளும், முன்னே இருந்து வாழ்க்கையை எதிர்கொண்ட மனைவியும், அவர்கள் இருவரின் பாடலும்.. ஆட்டுக்குட்டியின் இசையும் ஞாபகத்தில் !!
” யாரோ ஒருவருக்கு கனவாக இருப்பது நம்மிடம் இருக்கிறது ” என்று ஒரு வாசகம் உண்டு ! ஆம். என்னிடம் இருக்கும் ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்க்கிறேன். யாரோ ஒருவருக்கு இன்னமும் கனவாகவே இருக்கும் அது என்னிடம் இருக்கிறது என்று நான் நினைக்க ஆரம்பித்தால் .. வாழ்க்கை பேரானந்தம் ! இன்னமும் ” இது அது ” வேண்டும் என்று நினைத்தால் … வாழ்க்கை ஒரு பெரும் நரகம். ( இலக்கு நிர்ணயித்து செயல்படுதல் வேறு ! அந்த பயணத்தில் கிடைப்பவை அனைத்தும் தன்னிடம் மாற்றம் வந்து தம்மை அடைவதால் மனமகிழ்ச்சி தருபவை. ஆனால் ” என்னிடம் இது இல்லை ” என்ற வாழ்க்கை ? கொடுமை !! )




இந்த புகைப்படம் மிகவும் Special எனக்கு. போகிற போக்கில் பார்த்தால் புரியாது. கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் .. நன்கு புரியும். ஆம். அவர்கள் பாடும் பாட்டும், ஆட்டுக்குட்டியின் சத்த இசையும் கூட கேட்கும்.
ஆம். ரசித்தல் தான் வாழ்க்கையை அழகாக்குகிறது. மற்றவை ? வாழ்க்கையை என்னவோ செய்தூவிடுகிறது.
எந்த நிலையில் இருந்தாலும் வாழ்வை ரசிக்கிறீர்களா ? இல்லை … குறை சொல்லி, புறம் பேசி, வெறுத்து, பொறாமைப்பட்டு .. ?
என்ன சொல்கிறது உங்களின் மனநிலை – இப்போது ?


