Jerspectives : 025



புகைப்படத்தின் வலது கீழ் புறம் பார்த்தால் தெரிகிறது அல்லவா …. ? அதுதான் சாலை. இவ்வளவு தான் அகலம். இதில் தான் வாகனம் ஓட்ட வேண்டும். ( சமயத்தில் எதிரே வாகனம் வரக்கூடும் – அதை மனதில் வைத்து ஓட்ட வேண்டும் ! ). அந்த சாலையின் இடது புறம் கவனித்தால் … 10000 plus அடிகளில் பள்ளம். நேர்கீழாக தெரியும் ஏதோ ஒரு ஆறு ! கண்ணுக்கு எதிரே பிரம்மாண்டமாக … திருப்பி வைத்த முக்கோணமாக மலைகள் ! எங்கும் மேகம் சூழ் வான். ஏதோ ஒரு மூலையில் வெளிச்ச புள்ளியாய் .. சூரிய வரவு ! ஆம். இதுதான் இமயமலை பயணத்தின் அதிகாலை நேர சூழல் ! இதில் பயணம் செய்யும் வாகன ஓட்டி .. சிரித்துக்கொண்டே இயற்கையை ரசித்து பயணம் செய்கிறான்.
நான்கு வழி வழு வழுக்கும் தேசிய நெடுஞ்சாலை. கண்ணுக்கெட்டிய வரை வெறும் சாலை மட்டும். இடது பக்கம் உணவு உண்ண கடைகள். ஆங்காங்கே நிறுத்திக்கொண்டு இளைப்பாறும் அளவிற்கு அகலம் நிறைந்த பெரும் சாலைகள். எதிரே யாரும் வரவே போறது இல்லை என்கிற தையிரிய மனநிலை. இதில் பயணம் செய்யும் ஒரு வாகன ஓட்டி .. சில மீட்டர் தூரங்களுக்கு சாலை சரியில்லை எனில் .. ” இந்தியா போல worst நாடு இல்லை ” குறை சொல்லி வேகத்தை இன்னமும் அதிகப்படுத்துகிறான். அவனுக்கு கோபத்தை எங்காவது காட்ட வேண்டும் !



பயணம் சாலைகளில் அல்ல – மனங்களில் இருக்கிறது என்று நான் ஒருமுறை சொன்னேன். ஆம். சாலையால் பயணம் இல்லவே இல்லை. பயணத்தில் சாலை ஒரு பகுதி மட்டுமே ! இந்தியா முழுக்க பயனிததில் .. இமயமலை சாலைகளில் எதுவும் இருக்காது. ஆனாலும் என்னவோ இருக்கிறது அதில் ! 50 கிலோமீட்டர் பயணிக்க அரை நாள் ஆகும். அதற்கு பின் ஒரு சிறிய தேநீர்க் கடை வரலாம். அநேகமாக அங்கே தேநீர் 05 ரூபாயில் கிடைக்கலாம் ! ஆனால் பெரும் அமிர்தமாக அது இருக்கும். அந்த தேநீர்க் கடை மனிதனின் பேச்சு அதைவிடவும் அமிர்தமாக இருக்கும்.
” பார்த்து போங்க. நேற்று தான் பெரும் மழையில் பாதி சாலை இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் போகலாம். ஒன்றும் ஆகாது ” என்று சிரிக்கும் அந்த தேநீர்க் கடை காரனின் நேசம் நிறை சிரிப்பை இன்னமும் நான் நகரத்து கடைகளில் பார்க்கவில்லை. ( நிறைய கடைகளில் தேநீர் போடுபவன் ஏதோ ஒரு கூண்டுக்குள்ளேயே நின்று கொண்டு இருக்கிறான். அவனுக்கு சிறையா அல்லது நமக்கு சிறையா என்று புரியவே இல்லை 
! )


பயணம் என்றால் இமயமலை பயணம் தான். ” இருந்தால் உயிர். இல்லை எனில் கடந்த காலம். ” என்று பயணிக்க தையிரியம் இருக்கும் எவரும் .. என்னுடன் பயணிக்க முன் வரலாம். ஏன் அப்படி ஒரு risk எடுக்க வேண்டும் ? ஏன் எனில் ..
பயணம் என்றால் அது இமயமலைப் பயணம் தான் !
எங்கே இப்போது எழுதுங்கள் யாரெல்லாம் உடன் வருகிறீர்கள் என்று ?


