Jerspective : 026



சாலை ஒன்று வாகனம் அற்று அமைதியான கருந்தொடர்ச்சியாய் நிற்கிறது. கண்ணுக்கெட்டிய வரை யாரும் இல்லை. எந்த வாகனமும் இல்லை. இரு பக்கமும் பச்சை வயல்கள். அதற்கு அரணாய் மலைகள். மலைகளை சூழ்ந்து கொண்டு நகர மறுக்கும் மேக கூட்டங்கள். அதற்கு மேல் எல்லையற்ற வானம். ஸ்ரீநகருக்கு சில கிலோமீட்டர் முன்னால் உள்ள சாலையோர காட்சி இது !
ஏன் இமயமலை ரசிக்கப்படுகிறது எனில் .. இப்படியான காட்சிகளால் தான் ! இந்த மாதிரியான தொடர்க் காட்சிகள் நிரம்பிய பயணம் தான் இமயமலை பயணம். ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு அடுத்த புகைப்படத்திற்கு அங்கே காத்திருக்க தேவை இல்லை. காட்சிகள் இப்படி மாறிக்கொண்டே தொடர்ச்சியாய் தன்னை வேறு வேறு கோணங்களில் கொடுத்துக்கொண்டே இருப்பது தான் அல்லது இருப்பதால் தான் அதை இமயம் என்று சொல்கிறோம் !



இங்கே நின்று அமைதியாய் அந்த மலைகளை பார்த்தால் .. பார்த்துக்கொண்டே தான் இருக்க தோன்றும். நடுங்கும் குளிர் வாகனத்திற்கு உள்ளே வா வா என்று அழைத்த போதிலும் வெளியே கொஞ்சம் இருப்போமே என்றே முரண் பிடிக்க தோன்றும். இந்த மேகங்கள் மட்டும் எப்படித்தான் இப்படி வெண்மையாய் இருக்கின்றனவோ என்று உள்ளே ஒரு கேள்வி எழும்பும் ! மலைக்கு மேலே இருக்கும் மேகமாகவே வாழ்க்கையை வாழ்ந்து விடக்கூடாதா என்ற கேள்வியும் எழும். மேகப்பார்வை என்பது மிக முக்கியம். அடுத்த முறை பயணிக்கும்போது மேகம் எங்கே இருந்தாலும் கவனியுங்கள். அவை உங்களுக்கு என்னவோ சொல்லும் !



சாலைகளில் நல்ல சாலைகள் எவை தெரியுமா ? இயற்கையை அப்படியே வைத்திருப்பவை தான். மற்றவை .. ? சாலைகள் அல்ல. கரும் நரகங்கள். அந்த நரக சாலைகளில் இயற்கை காட்சிகள் மறைந்து ரசிக்கும் தன்மை குறைவதால் தான் .. அங்கே மனிதர்கள் வேகத்தின் அடிமையாகி, விபத்து என்னும் தண்டனையை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் இப்படி ஓர் சாலையில் …உங்களால் .. வேகமாக செல்ல முடியுமா ? செல்ல தோன்றுமா ? அப்படி ஒருவன் சென்றால் அவனை என்னவென்று அழைப்பீர்கள் ? அதே பெயர் தான் உங்களுக்கும் – நீங்களும் வேகமாய் சென்றால் !
சாலை என்பது வேகத்தை குறைத்து ரசனையை கூட்டுவதற்கு !. வேகத்தை உயர்த்தி இயந்திரத்தனத்தை அதிகப்படுத்துவதற்கு அல்ல. !
இமயமலையில் … சாலைகள் தான் புத்த கோவில்கள். பின்னே ? உங்களை ஒரு நிமிடம் நிற்கவைக்கின்றனவே ? நிதானிக்க வைக்கின்றனவே ? ரசிக்க வைக்கின்றனவே ? உங்களை ஒரு நிமிடம் நிற்க வைத்து, நிதானிக்க வைத்து, ரசிக்க வைக்கும் எந்த சாலையும் புத்தனுக்கு சொந்தமானவை ! அங்கே நீங்கள் ஒரு witness மட்டுமே. ஆம். ரசனையின் சாட்சி !
பயணிக்க போகும் அனைவர்க்கும் முன் வாழ்த்துக்கள்.


