Jerspective : 039
” Peace Rules. Silence Drives. Beings Becoming Witnesses “



அந்த உலகில் சமாதானம் ஆட்சி செய்யும். அமைதி வழிநடத்தும். மிக குறைவாக வாழும் மிருகங்கள் அங்கே தன் நிலப்பரப்பை பெரும் அளவில் வைத்திருக்கும். மிக குறைவாக வாழும் மக்கள் அங்கே சாட்சிகளாக வாழ்ந்து மௌனமாக மறைவார்கள். அது ஒரு இந்திய ஆனால் வித்தியாச தேசம் !
பொதுவாக நான் இந்த பகுதிக்கு வரும்போது நான் இந்தியாவில் தான் இருக்கிறேனா என்று ஒரு கேள்வி மனதிற்குள் வளரும். ஆம். மும்பையின் மக்கள் நெரிசல், சென்னையின் வெய்யில், கொல்கத்தாவின் சத்தம், டெல்லியின் வேகம் .. பெங்களூருவின் பல தரப்பட்ட மக்கள் பேசும் பேச்சு .. அனைத்தும் ஒரு கணம் காட்சியாய் வந்து அதே மனதில் ஒருவித சிரிப்பை ஏற்படுத்தி விட்டு போகும். அந்த ஊர்களும் இப்படித்தானே இருந்திருக்கும் ஒரு கட்டத்தில் ! நாம் தானே கெடுத்திருக்கிறோம் ? என்று எனக்குள் கேள்வி எழும்.
இந்த ஏரிக்கு அருகே ஒரு தொழிற்சாலை, பிறகு பல தொழிற்சாலைகள், தொழிலாளிகள், மனித இருப்பிடங்கள், கட்டிடங்கள், மனித வியாபார முயற்சிகள், பண வரவு, உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் … அனைத்தையும் இங்கே யோசிக்க முடிந்தால் .. பகுதி காணாமல் போய்விடும். இந்த காட்சிக்கு வாய்ப்பே இல்லை. ஆம். வளர்ச்சிக்கு நாம் பலியிடும் முதல் சொத்து கண் கொள்ளா காட்சிகள் தான் ! காட்சிகளை இழந்தே வளர்ச்சியை பெறுகிறோம். மேற்சொன்ன அனைத்தையும் இந்த காட்சிக்கு அருகில் என்று நினைத்தாலே … நெஞ்சு ஒரு கணம் தடுமாறுகிறது. வலிக்கிறது.
லடாக்கின் பல பகுதிகள் நம்முடன் இல்லை என்று சொல்லப்படுபோதெல்லாம் … எனக்குள் தோன்றும் ஒரு சில கேள்விகளில் ஒன்று .. Pankong Tso எனும் இந்த அழகியல் ஏரி நம்முடன் இப்போதும் இருக்கிறதா ? என்று ! இந்த ஏரியை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் – இந்தியாவில் நீங்கள் பிறந்திருந்தால் !
என்ன ? பார்க்க செல்வோமா ?


