Jerspective : 042
” As Falls Touches Your Feet, You Feel The Connectedness with Nature “
பொதுவாக பயணங்களில் நீர் நமக்கான தேடலாக இருக்கும். அருவி, அணைக்கட்டு, ஏரி, குளம், புது மழை நீரின் தேக்கம், ஆறு, கடல் … என்று எதையும் நமக்குள் தொட்டு விட முயற்சிப்பது நடந்துகொண்டே இருக்கும். காரணம் ?
அருவியின் ஓடிக்கொண்டே இருக்கும் நீர் நம் கால்களை வருடுவதை நாம் கவனித்தது உண்டா ? காலணியை விலக்கிய பாதம் சில்லென ஏதோ ஒன்றை உணரும் முன்பே .. பாதங்களை வண்ணமற்ற அந்த ” நகரும் நீர்மம் ” தழுவ ஆரம்பிக்கும். தழுவுதல் தொடங்கியவுடன் நாம் தனியான உயிர்மம் அல்ல என்று உள்ளே ஒரு குரல் ஒலிக்கும். ஆம். நமக்குள் ஒரு ” உடனடி தோழமை ” உருவாகும். அந்த தோழமை ஏற்கெனவே நம்முடன் இருப்பது தான் – ஆனால் இந்த ” நகரும் நீர்மம் ” அதை நமக்கு நினைவுபடுத்தும். புதுப்பிக்கும். ” எங்கே போனாய் ” என்று கேள்வி கேட்கும். ” ஏன் என்னை பார்க்க வரவில்லை ” என்று செல்லமாய் சிணுங்கும். ஆம். குரல் அற்ற அந்த இயற்கையின் குரல் தான் அந்த ” நகரும் நீர்மம் ” ஏற்படுத்தும் நீர் ஓசை !
இந்த அருவியின் பெயர் என்ன ? இதுதான் பொதுவாக நமக்குள் நாம் ஏற்படுத்தும் முதல் கேள்வி. எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எந்த அருவிக்கும் பெயர் இல்லை. அறிவு சார் சமூகம் தான் அருவிக்கு பெயர் வைக்கிறது. இங்கே அங்கே என்றெல்லாம் குறித்துக்கொள்கிறது. ஆனால் அருவிகள் அப்படி பெயர் எல்லாம் வைத்துக்கொள்வது இல்லை. பிறந்தவுடன் தன் ஓட்டத்தை தொடங்கி .. ஏற்ற இறக்கங்களை நிற்காமல் சந்தித்து தன் இலக்கை நோக்கி பயணித்து கடலில் கலந்து கொள்கிறது. ஆம். அனைத்து அருவிகளும் கடைசியில் கடலில் கலப்பதே அவற்றின் எழுதப்பட்ட வாழ்வு. கடல் தான் அனைத்து நீரோட்டங்களின் சொர்க்கம். ஒன்று அனைத்து நீரோட்டங்களும் அங்கே இணையும். அல்லது அங்கே பிறக்கும். நரகம் என்பதை அறியாத ஒரே இயக்கம் நீரோட்டம் மட்டுமே !
எம் பாதங்களை தொட்ட அந்த ” நகரும் நீர்மமும் ” இப்போது அதன் சொர்க்கத்தை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும். அது சொர்க்கத்தை அடையும்போது .. என் பாதங்களின் பிரதிபலிப்பும் அதில் இருக்கும். ஆம். அங்கேதான் ” Connectedness ” உருவாகிறது.ஏதோ ஒரு ” நகரும் நீர்மத்தை ” நம் பாதங்கள் தொட்டதும் நாம் சொர்க்கம் செல்கிறோம். அவ்வளவு தான் எம் சொர்க்க அடைதலின் Definition. ” நகரும் நீர்மம் ” நம் பாதங்கள் தொட்டால் நம் பெயர் சொர்க்கம் அடையும்.
உங்களின் பாதங்கள் சொர்க்கம் தொட முன்
வாழ்த்துக்கள்
.
என்ன ? அருகாமையில் இருக்கும் ” நகரும் நீர்மம் ” உங்களின் மனதில் தோன்றுகிறதா ?






