நான் எனப்படும் நான் : 103
பொறுப்புகள் நேரங்களை ஆக்ரமித்துக்கொண்டே இருக்க .. நாட்கள் போவதே தெரியவில்லை என்றே – அடிக்கடி ஒரு குரல் உள்ளே கேட்டுக்கொண்டே இருக்கிறது.



நாம் நம்மை சரி செய்ய சரி செய்ய பொறுப்புகள் நம்மை நோக்கி வந்துகொண்டே தான் இருக்கும். பொறுப்புகளை அங்கீகரிக்க அங்கீகரிக்க மேலும் பொறுப்புகள் வரும். நேரங்கள் இன்னமும் ஆக்கிரமிப்பு செய்யப்படும். ஆக மொத்தம் .. நமக்கான நேரம் என்பது .. செய்ய வேண்டியவற்றை செய்த பின் … என்றே மாறும். அந்த நமக்கான நேரத்தில் இரண்டு விடயங்கள் நடக்கும்.
1. அப்பாடா .. என்று ஓய்வெடுத்து மீண்டும் Fresh ஆக வருவது
2. இன்னமும் இந்த பொறுப்புகளை எப்படி சிறப்பாக செய்யலாம் என்று யோசிப்பது.
நான் பொதுவாக முதல் விடயத்தில் தான் வாழ்கிறேன். இரண்டாவதை .. பொறுப்புகளை செய்யும் போதே சிறப்பாக செய்வது என்பதை யோசித்து விடுகிறேன். அதாவது ஓய்வு எடுக்கும்போது ஓய்வு. செயல்படும் போது சிறப்பாக செயல்படுதல்.



எப்போதுமே எனக்கு ஒன்றை செய்தால் அதில் முழுமையாக செய்தல் – என்பதில் தான் உடன்பாடு அதிகம். இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் ஆள் நான் இல்லை. ஒன்றை முழுமையாக செய்யும்போது பலவற்றை மறத்தல் இயல்பாக நடக்கும். அதற்கு பெயர் மறத்தல் அல்ல. ஒன்றில் மூழ்கிப்போகுதல். மூழ்குதல் மட்டுமே முத்தை எடுக்க வைக்கும். மற்றவை எல்லாம் just நீச்சல் தான் ! முழுமையாக மூழ்குவது .. பெரும் ஆழ் மன பலம். அவ்வப்போது வெளியே வந்து கவனித்து செல்வது பெரும் பயம்.



சட்டென நான் காணாமல் போனது போல இருக்கும். எங்கே அவன் ? என்பது போல தோற்றம் வரும். அதற்கு காரணம் பொறுப்பில் மூழ்குதல். தேடிய முத்தை எடுத்தபின் எனக்குள் வரும் வேகம் கணிக்க முடியாதது.
இதை புரிந்தவர்களுக்கு என் எண்ண ஓட்டம் புரியும். அப்படி புரிந்தவர்கள் என்னுடன் அதாவது என் எண்ண ஓட்டத்துடன் காலத்திற்கும் பயணிப்பார்கள்.
பயணித்தல் நல்லது. பயணிக்க வேண்டும். பயணிப்போம்.


