நான் எனப்படும் நான் : 105
” இப்போது அல்ல. எப்போதுமே வாழ்க்கை அழகு தான். பயணித்தலில் மட்டுமே கவனம் இருந்தால் ! ”
ஒருவர் தன் பயணத்தை ஆரம்பிக்கிறார். பயணத்தை ரசிக்கிறார். பயணத்தை முடிக்கிறார். அவ்வளவே வாழ்க்கை. மிக எளிய Formula.
ஒருவர் தன் பயணத்தை ஆரம்பிக்கிறார். வழியில் கொஞ்சம் திசை மாறுகிறார். வேறு மனிதர்களை கவனிக்கிறார். உறவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார். உறவுகள் பின்ன ஆரம்பிக்கின்றன. இங்கொன்றும் அங்கொன்றுமாக முரண் வருகிறது. கேள்விகள் பதில்கள் காரணங்கள் என்று வார்த்தைகள் வெடிக்கின்றன. பொருளாதாரம் முன்னே பின்னே ஏற்ற இறக்க என்றெல்லாம் தலை விரித்தாடுகிறது. வெற்றி தோல்வி என்றெல்லாம் அவருக்கு Ego வருகிறது. உறவுகள் வளர வளர மேன்மேலும் என்னென்னவோ நடக்கின்றன. என்னடா வாழ்க்கை இது என்று வெறுத்து வெளிவே வரும்போது அவர் ஒரு சாலையை காண்கிறார். தான் ஒரு காலத்தில் நடந்து வந்த சாலைதான் இது என்று அவருக்கு புரிகிறது. ஏன் இங்கே இருந்து திசை மாறினோம் என்கிற கேள்வி வருகிறது !
வாழ்க்கை மிக எளியதான ஒன்று. நாம் தான் அதில் உறவுகள் கடமைகள் பொருளாதாரம் வாழ்தல் வீழ்தல் என்றெல்லாம் குழப்பிக்கொண்டு ரசித்து எளிதாய் வாழ்வதை இழக்கிறோம்.
மழை வரும் வேளையில் சிறிது நேரம் ஒரு மரத்திற்கு கீழ் அமர்ந்து மழையை கவனித்தது உண்டா ?
மழை வரும்போது உருவாகும் சிறு ஓடைகளின் நகர்தலை ரசித்தது உண்டா ?
குடையற்ற நீங்களாய் மழையில் நனைந்து நீர்த்திவலைகள் நெற்றிப்பொட்டில் இருந்து உள்ளங்கால் வரை வழிந்து செல்வதை உணர்ந்தது உண்டா ?
ஆடை நனைந்து உடல் சில்லிட .. தேகத்தின் கேசம் சிலிர்த்து எழுவதை கவனித்தது உண்டா ?
நனைதலுக்கு பின்னான குளியலில் … தலை துவட்டலில் .. முகம் சிலிர்த்தலில் .. சிரித்தது உண்டா ?
” இப்போது அல்ல. எப்போதுமே வாழ்க்கை அழகு தான். பயணித்தலில் மட்டுமே கவனம் இருந்தால் ! ”