யதார்த்தம்பழகு : 003
” பயங்கர வருத்தமும் கோபமும். ஆனாலும் அமைதியா இருந்தேன். நிறைய பேச தோணுச்சு. பேசல. “
என்று சொன்ன நட்பை கவனித்தேன்.
” என்ன ஆச்சு ? “
மெதுவாக சொன்னது நட்பு.
” அலுவலகத்தில் ஒரு பிரச்சினை. நடந்த உண்மையின் ஒரு பக்கம் என்னிடம் இருக்க .. என்னிடம் எதையும் கேட்காமல் … அவரவர் அவரவரின் இஷ்டத்திற்கு பேசினார்கள். பேசிய பலர் அதில் சம்பந்தப்படாதவர்கள். அப்படி பேசிய பலவற்றில் பல விடயங்கள் .. உண்மையில் இந்த பிரச்சினையில் சம்பந்தமே இல்லாதவை. நான் பேச ஆரம்பிக்கும்போது என்னை பேச விடாது செய்வதும் நடக்க ஆரம்பிக்க .. சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லிவிட்டு வெளியே வந்தேன். ஏன் இப்படி இருக்கிறார்கள் ? “
நான் அவரிடம் கேட்டேன்.
” சொல்ல வேண்டியதை சொல்லி விட்டீர்களா ? “
” சுருக்கமா … சரியா சொல்லிட்டேன். நிறைய கேள்வி கேட்கணும் பேசணும் னு தோணுச்சு. ஆனாலும் ஏதோ ஒண்ணு தடுத்தது. அவர்கள் இஷ்டத்திற்கு பேசும்போது தான் கோபம் வந்தது. அதை தான் ஏன் னு உங்க கிட்ட கேட்டேன். “
” ஒரு Quote சொல்லவா ? “
நட்பு என்னை புதிராக பார்த்து விட்டு …
” சொல்லுங்கள் ” என்றது. இன்னமும் முகத்தில் கோபமும் ஆற்றாமையும்.
” The Difference between Stupidity and Genius is … Genius Has its Limitations ” என்று சிரித்தேன்.
” Relate பண்ண முடியல ” என்று நட்பு சிரிக்க …
” வெட்டாத அட்டைக் கத்தியை வைத்திருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் வீசலாம். ஆனால் … Sharp ஆக இருக்கும், வெட்டினால் சரியாக வெட்டும் உண்மைக் கத்தியை வைத்திருப்பவர்கள் … பார்த்து வீச வேண்டி இருக்கிறது “
நட்பு இப்போது சிரித்தது.
” அது சரி. ஆனாலும் .. ஏன் இப்படி … ? “
என்று சொன்ன நட்பிடம் மீண்டும் சொன்னேன்.
” Genius has its Limitations …. “
இருவரும் சிரித்தோம். அந்த நட்பின் புரிதலுக்கு சுருக்கமாக சில வரிகள் போதும்.


