யதார்த்தம்பழகு : 004
” Daughters Never Ask ” How Are You ? “.
They Ask ” How Is Your Health Appa ? “



” மொத்தமாக ஒரு நாளைக்கு 200 விக்கும் “
” ம் ” நான் கேட்டுக்கொண்டேன்.
” மழை பெய்தால் 250 விக்கும் “
” ஓ “
” ஆமா .. மழை பெய்யும்போது நம்ம மக்கள் சூடா சாப்பிட விரும்புவாங்க “
” ஓ “
எனக்கு மூன்று வாங்கிக்கொண்டேன். 50 ரூபாய் கொடுத்தேன். இருபது ரூபாய் திருப்பி கொடுத்தார்.
” எத்தனை வருஷமா இந்த தொழிலில் ? “
” 30 வருஷமா. 25 காசுக்கு விக்க ஆரம்பிச்சு இப்போ 10 ரூபாய்க்கு வந்திருக்கேன். அப்போவெல்லாம் நிறைய விக்கும் “
இருவரும் சிரித்தோம்.
” கடலை விற்கிறது மட்டும் தான் தெரியும். வேறு எதுவும் தெரியாது. பொண்ணை படிக்க வச்சு கட்டி கொடுத்திட்டேன். அப்பப்போ பேசும். ” நல்லா இருக்கியாப்பா ” ன்னு கேட்கும். அது போதும் எனக்கு. மனைவி 5 வருடத்திற்கு முன் இறந்திட்டா. Cancer. காப்பாற்ற முடியலை. “
கொஞ்சம் Dry ஆக சிரித்தார். எனக்கு சிரிக்க தோணவில்லை.
” கஷ்டம் வந்தா மட்டும் தொடர்ச்சியா வருது..சந்தோஷம் மட்டும் அப்பப்போ வருது. என்ன வாழ்க்கையோ ! ” அலுத்துகொண்டே சிரித்தார். நான் இன்னமும் சிரிக்கவில்லை.
இதற்கிடையில் கடலை வறுக்கும் அந்த இரும்பு வாணலி யில் அவர் தட்டிக்கொண்டே இருந்தது .. போவோரை வருவோரை அவரை நோக்கி இழுத்துகொண்டே இருந்தது.
” மகள் பேசிட்டா ஒரு மாசத்திற்கு ஒரு பெரும் தெம்பு. மக தான் எல்லாம் “
” ஹ்ம்ம் “
” நல்ல மாப்பிள்ளை. வரதட்சிணை எதுவும் கேட்கலை. கட்டிக்கொடுத்திட்டேன். நல்லா வச்சுக்கிறார். எனக்கு பிறகு அவளை நல்லா பார்த்துக்குவார். அது போதும் எனக்கு “
நிறைய அப்பாக்களுக்கு மாப்பிள்ளைகள் நன்கு அமைந்தவுடன் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகிறது.
” கடலை சாப்பிடலையா ? ” அவர் என்னை கண்களில் பார்த்து கேட்டார்.
” இல்லை. வீட்ல போய் சாப்பிடுவேன். “
” சூடு ஆறறதுக்குள்ள சாப்பிடுங்க “
” சரி “
வீடு அடையும்போது வாசலில் இருந்த Watchman க்கு இரு கடலை Pocket கொடுத்தேன்.
” நன்றி சார். “
” சூடு ஆறறதுக்குள்ள சாப்பிடுங்க “
வீட்டை அடையும்போது Apartment ஐ Clean செய்யும் அம்மாவிடம் ஒரு கடலை Pocket கொடுத்தேன்.
” நன்றி சார் “
” சூடு ஆறறதுக்குள்ள சாப்பிடுங்க “
வீட்டிற்குள் நுழையும்போது அந்த கடலை விற்பவரின் குரல் உள்ளே ஒலித்துக்கொண்டே இருந்தது.
” மக தான் எல்லாம் ” !.


