நான் எனப்படும் நான் : 119
” அப்பா அம்மாவுடன் பயணிக்கும் நேரங்கள் முக்கியமானவை. அதுவும் திறமை சார் நேரங்கள் எனில் அவை பொக்கிஷங்கள் ! “
இலஞ்சியில் இருக்கும் கோவிலில் தான் அந்த இருவரையும் கவனித்தேன். அப்பா மகனாகவே இருக்க வேண்டும் என்று பார்த்தவுடனே தோன்றியது. அப்பா இறையை நோக்கி அமர்ந்து பாட ஆரம்பிக்க அதே Position ல் மகனும் அமர்ந்து கிட்டத்தட்ட ஒரே குரலில், ஒரே அலைவரிசையில் .. பாடும் அந்த காட்சி தான் இன்றைய திறமை inspiration ! இருவரின் …. மூடியிருக்கும் கண்கள், மந்திரங்கள் சொல்லும் குரல், ஜதிக்கேற்ப ஆடும் விரல்கள் … ஒருங்கே ஏறும் இறங்கும் ஒலி ஓசை … காணக் கண்கோடி வேண்டும்.
அப்பாவுடன் இருந்து கற்பது என்பது ஒரு தனி உயரம் ! என் அப்பாவுடன் அருகில் அமர்ந்து நான் கற்ற Trial Balance / Accounting இன்றும் என்னுடன் பயணிக்கிறது. தவறு செய்யும்போது அதை எவ்வாறு கண்டறிவது முதல், தேவை அற்றவை எங்கே எண்களாக இருக்கிறது என்று கண்டுபிடிப்பது வரை அவர் சொல்லிக்கொடுத்தவை. இன்றும் Corporate Training ல் Accounts சம்பந்தமாக கேள்வி கேட்கும்போது அப்பா என்னிடம் கேட்ட கேள்விகள் ஞாபகத்தில் நிற்கும். அப்பாக்களிடம் அருகில் அமர்ந்து திறமை பயின்றவர்கள் அந்த திறமையை வாழ்நாள் முழுக்க அகத்தில் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த திறமைகளை சொல்லிக்கொடுத்த அப்பாக்கள், அவர்கள் சொன்னால் அன்றி … வெளியே தெரிவது இல்லை.
பொதுவாகவே அப்பாக்களுடன் பயணிக்கும் நாட்கள் முக்கியமானவை. மிதிவண்டியில் பின்னே அமர்ந்து பயணித்த நான், ஒரு கட்டத்தில் அப்பாவை பின்னே இருக்க வைத்து அதே மிதிவண்டியில் ஓட்டிய ஞாபகங்கள் உண்டு ! அந்த மிதிவண்டி ஓட்டும் திறமையும் அப்பா சொல்லிக்கொடுத்தது தான். அப்பாக்கள் சொல்லிக்கொடுக்கும் திறமைகள் என்று ஒரு பட்டியல் போடலாம். நீச்சல், எழுத்து, புத்தக அட்டை போடுதல், Dictionary பார்க்க கற்றல், ஆங்கிலம் பேசும் விதம் கற்றல் … இந்த அப்பாக்கள் தான் எவ்வளவு திறமைகளை தங்களுக்குள் வைத்துக்கொண்டு, அவற்றை கற்றும் கொடுத்து, அதை வெளியே சொல்லாது ஆனால் அதை Follow செய்யும் மகன் மகளை பார்த்து மகிழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் ? என்ன பெயரிடலாம் அப்பாக்களுக்கு ? மௌன வாத்தியார்கள் ? திறமை பயிற்சியாளர்கள் ? தூர நின்று கவனிக்கும் நம்பிக்கை தத்துவங்கள் ? அல்லது அவ்வளவுக்கும் சேர்த்து …ஒரே வார்த்தை அப்பா ! ?
அப்பா உங்களுக்கு கற்றுக்கொடுத்த திறமைகள் என்ன ? இன்றும் அது உங்களுடன் பயணிக்கிறதா ? அல்லது மறந்தாயிற்றா ? அந்த திறமைகளை பயன்படுத்தும்போது ஞாபகத்தில் வந்து சிரிக்கும் அப்பாவிற்கு இப்போது என்ன சொல்ல தோன்றுகிறது ?என்ன ? அவற்றை பகிர்வோமா ?
யாருக்கு தெரியும். உங்களின் பகிர்வு யாரோ ஒருவருக்கு அவரின் தந்தை சொல்லிக்கொடுத்த திறமையை மீண்டும் வெளிக்கொணரும் ஊக்கியாக இருக்க கூடும் ! பகிர்வோம். நினைவுகளை திறமையாய் மீட்போம்.





