நான் எனப்படும் நான் : 128
” If You read books, You Pre-Live Your Life ! “



என் வாழ்க்கை முழுக்க என்னுடன் மௌனமாக பயணிப்பவை புத்தகங்களே. அவை என்னிடம் எதையும் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் அவை வைத்திருக்கும் அனைத்தையும் என்னிடம் கொடுத்திருக்கின்றன.
மனிதர்களுக்கும் புத்தகங்களுக்கும் என்ன வித்தியாசம் ? மனிதன் தான் புத்தகத்தை எழுதுகிறான் என்றாலும் … ஒரு புத்தகத்தில் அனுபவம் என்று ஒன்று எழுதப்பட்டவுடன் அது காலத்திற்கும் நம்முடன் பயணிக்கும். எந்த மாற்றமும் இல்லாமல். ஆனால் மனிதன் அப்படி இல்லை. அனுபவம் சரி என்றாலும் .. மனிதன் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள தயங்குவான். உள்ளொன்றும் புறம் ஒன்றுமாய் பேசி காலத்தை கடந்து வாழ்ந்து மடிவான். ஆனால் புத்தகங்கள் ?. ஒருமுறை சொல்லிவிட்டால் காலம் முழுக்க மாறுவதே இல்லை. Editing option இல்லாத வரை புத்தகம் என்பது ஒரு வாழ்வின் நிரந்தர சுவாசப்பை.



என்னுடன் என் car ல் அதிகம் பயணிப்பவை புத்தகங்கள். Service க்கு கொடுக்கும் போது அப்படியே கொடுப்பேன்.
” சார் இதெல்லாம் எடுத்துடுங்க சார் “
என்று சொல்லும் mechanic நட்பிடம் …
” வேண்டும் என்றால் யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். படிக்கட்டும். ” என்று நான் சொல்வது இயல்பு. கேட்டு எடுத்துக்கொண்ட Mechanics ம் உண்டு. ஓரே ஒரு புத்தகம், ஒரே ஒரு வரி ஒருவரின் வாழ்வை சத்தியமாக மாற்றக்கூடும். அவ்வளவு வலிமை.



எனக்கு வாழ்வை சொல்லி கொடுத்த புத்தகங்கள் வீரம் நேர்மை துணிச்சல் கோபம் கண் பார்த்து பேசுதலையும் சொல்லிக் கொடுத்து இருக்கின்றன. சமீபத்தில் என் வாகனத்தை நிறுத்தி
” ஒண்ணும் இல்லை சார். குடிச்சிட்டு வராங்களான்னு ஒரு Checking ” என்று சொன்ன ( கிட்டத்தட்ட வழிந்த அல்லது எதையோ எதிர்பார்த்த காவல் அதிகாரியிடம் ) வரிடம் நான் சொன்ன பதில் ..
” என் இறப்பு வரை அப்படி ஒன்று நடக்க வாய்ப்பில்லை. சோதித்து கொள்ளுங்கள் “
என்று சொன்ன போது … சோதித்த பின் அவர் உடனே சொன்னது.
” Sorry sir “.
யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் ….. உள்ளதை உள்ளபடி சொல்ல என்னை பழக்கியவை புத்தகங்கள்.



சமீப காலமாய் உங்களின் பதிவுகளில் கோபம் தெரிகிறதே .. என்று கேட்பவர்களுக்கு ஒரு பதில்.
” மனதில் நினைப்பதை நீ சொல்ல முடியவில்லை எனில் … முகமூடி அணிந்து வாழத் தயாராகி கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம். அப்படி வாழ ஆரம்பிக்கும்போது உள்ளே இறந்து …. வெளியே நடிக்கிறாய் என்பதை ஒப்புக்கொள்கிறாய். அப்படி வாழ வேண்டுமா என்று யோசி ! ” என்று எனக்கு சொல்லிக்கொடுத்தவையும் புத்தகங்களே !



இப்போது படிக்கும் புத்தகம் ?
நிர்வாகத்திற்கு ( அதுவும் இப்போதைய Covid சூழலில் ! ) மிக தேவையான ஒரு புத்தகம். கூடிய விரைவில்
READ DOT REVIEW
வில் Review எழுதுவேன். படிக்க காத்திருக்கலாம்.


