நான் எனப்படும் நான் : 130
” The best thing about Challenging times is … It uncovers the Useless Masks of Humans. “
உடலின் ஒரு பகுதி செயலிழந்து வலியுடன் முனகிக்கொண்டு இருக்கும்போது … அதே உடலின் இன்னொரு புறம் சிரித்து கொண்டு இருப்பதை நீங்கள் கவனித்தது உண்டா ? அப்படி இருக்கும் உடலை காட்டும் ஒரே கண்ணாடி கண்கள் மட்டுமே ! கண்களை வைத்து உடலை அளக்க முடியும் ! ( கண்களை இழந்தவர்களுக்கு … அவர்களின் உடல் அசைவுகளை வைத்து ! ). நாடு இப்போது அப்படித்தான் சிரிக்கிறது. வடக்கு வேறு தெற்கு வேறு என்று எனக்குள் எப்போதும் தோன்றியது இல்லை. வடக்குக்கு ஏன் நம்மை போல மருத்துவ வசதிகள் கிடைக்காமல் போனது ? என்ற கேள்வி உள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது. ( நம்முடைய கட்டமைப்பே இன்னமும் மாற வேண்டும் என்பதும் பெரும் உண்மை ! ). ஒரு கைக்கு கையுறையும், இன்னொரு கை குளிரில் உறைந்து வெளிறிப் போய் அசையாமல் எரியக் காத்திருப்பதுமாக எப்படி ஒரு நாடு சிரித்த முகமாக இருக்க முடியும் ?
நான் வசித்த இந்தூரில், அகமதாபாத்தில், டெல்லியில், மும்பையில் .. இருந்து வரும் செய்திகள் கவலையாகவே இருக்கின்றன. ” உங்களின் படுக்கையில் நீங்கள் இன்று இரவு படுத்திருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் ” என்ற twitter வரி ஒன்று மிக அதிகமாக யோசிக்க வைக்கிறது ! மிக ஆழமாகவும் ! அடுத்த வாரம் இருந்தால் பார்ப்போம் என்று வட இந்திய நட்பு சொல்லும்போது … கையறு நிலை ஒன்று உள்ளத்துள் உறைகிறது. என்ன வாழ்க்கைடா இது ! என்று கேள்வி கேட்கும்போது .. தென் இந்தியா .. குறிப்பாக தமிழ்நாடு கேரளா மாநில நட்புக்கள் ” இல்லை … எழுந்து வந்து விட முடியும் ” என்று சொல்லும் குரல் மட்டுமே இங்கே நம்பிக்கை ! ( இங்கே வந்து கழகங்கள் இல்லாத தமிழகம் என்று புலம்பும் அறிவு ஜீவிகளுக்கு …ஒரே ஒரு பதில் தான் … அது இப்போதிருக்கும் கழகங்கள் இல்லாத வட இந்தியா ! என்பது தான் ! )
எவ்வளவு கோவில்கள் வேண்டுமானாலும் வரட்டும். எவ்வளவு முறை வேண்டுமானாலும் கோஷங்கள் எழுப்பிக்கொள்ளட்டும். அனைத்து மதங்களையும் சேர்ந்த மனிதர்ளிடம் இங்கே வைக்கப்படும் ஒரு சில கேள்விகளுக்கு மனசாட்சிகளின் பதில்கள் எதிர்காலமாக அமையட்டும்.
நிறைய கேள்விகள். இவற்றை யாரிடம் சேர்ப்பது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு கட்சி இதை முன்னெடுக்கும் என்று நினைத்து நம்பிக்கையுடன் இங்கே வைப்போம். எடுத்தால் சிறப்பான இந்தியாவிற்கும் … எடுக்கவில்லை எனில் நம் நிச்சயம் அற்ற எதிர்காலத்திற்குமாக வாழ்க்கை நல்ல படியாக அமையட்டும்.
தேசப்பற்று என்பது ஒரு Concept அல்ல. அது ஒருவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் Franchising ம் அல்ல. நம் உடலின் இன்னொரு பகுதியில் வலிக்கிறது என்றால் உடல் அதற்கு React செய்யும். வட இந்தியாவில் வலிக்கிறது என்றால் அது தென் இந்திய மக்களிடமும் எதிரொலிக்கும். யார் என்று தெரியாத, முகம் பார்க்காத ஒருவனுக்கு ஒருத்திக்கு .. கண்ணில் நீரும், மனதில் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிற எண்ணமும் தான் என்னை பொறுத்தவரை தேசப்பற்று ! போரும் வெற்றியும் அல்ல. மீண்டும் சொல்கிறேன். போரும் வெற்றியும் இல்லவே இல்லை !
அரசியல்வாதிகளே … இன்னமும் கூட கொஞ்சம் அதிகமாக உங்களின் “பங்குகளை ” எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் … மருத்துவமனைகளை, மருத்துவ கட்டமைப்புகளை குறும் கிராமங்கள் வரை நிறைய ஏற்படுத்துங்கள். ஆம். அந்த மருத்துவ மனையில் நாளை உங்கள் குழந்தைகளும் பேரன் பேத்திகளும் சேர்ந்து சுகம் பெற வேண்டிய நிலை வரலாம்.
அப்படி ஒரு இந்தியாவை எங்களுக்கு அளித்துவிட்டு … கோவில், மசூதி, சர்ச் …அனைத்தையும் கட்டிக்கொள்ளுங்கள். ஏன் எனில் .. அங்கே வழிபட நாங்கள் உயிரோடு இருக்க வேண்டும். ஆம். உயிரோடு !
புகைப்படத்தில் கண்ணில் தெரியும் வலி உனக்கு புரிந்தால் நீயும் எம் சக இந்தியனே !





