படமும் கற்றலும் : 001
( May 30 2021 முதல் இந்த தொடர் தொடங்குகிறது. )
தெருவோரங்களில் நாம் கவனித்து இருக்கக்கூடும். கரும்புச் சாறு விற்கும் இயந்திறத்துக்கு பின் ஒரு குழந்தை அமர்ந்து படித்துக்கொண்டு இருக்கும். பூ விற்கும் பெண்ணுக்கு அருகில் ஒரு குழந்தை அமர்ந்து Home Work செய்து கொண்டு இருக்கும். கீரை விற்கும் அம்மாவிற்கு பின் அவரின் 10 வயது பெண் உதவி செய்து கொண்டு இருக்கும். நாம் அவர்களிடம் நமக்கு தேவையானதை வாங்கிவிட்டு ( கொஞ்சம் பேரமும் பேசுவோம் ! ) கடந்துவிடுவோம். ஆனால் அவர்கள் அங்கேயே இருப்பார்கள். அவர்கள் அங்கேயே இருந்துவிடக் கூடாதென்று குழந்தை படித்துக்கொண்டே இருக்கும். அப்படியான ஒரு காட்சியை இங்கே பார்க்கிறோம்.



குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது போல பெரும் உதவி எதுவும் இருக்க முடியாது ! அப்படியான உதவியை நாம் கவனிக்கும் குழந்தைகளிடம் இருந்து, அவர்கள் விரும்பினால் .. நாம் ஆரம்பிக்கலாம். ( சில குடும்பங்கள் என்ன ஒரு ஏழ்மை நிலையில் இருந்தாலும் இவற்றை விரும்புவது இல்லை என்பதும் இங்கே முக்கியமான ஒன்று ). அப்படி எனில் .. நம் உதவியை ஒரு குடும்பம் பெற தயாராக இருக்கிறது எனில் ” நாம் கொடுத்து வைத்தவர்கள் ” என்ற எண்ணம் நமக்குள் எழ வேண்டும். ( இனி எழும் என்று நம்புகிறேன். ) இனி சாலையோரம் நம் கவனம் படிக்கும் குழந்தைகளிடம் செல்லட்டும். அவர்களின் வியாபாரத்தை முடிந்த அளவு support செய்வோம். அது அந்த குழந்தைக்கு நாம் செய்யும் மறைமுக உதவி. அந்த குடும்பம் விரும்பினால் … நேரடி உதவியை நாம் தொடரலாம்.



செருப்பை தைத்து கொண்டு இருக்கும் மனதில், பக்கத்தில் எழுதி படித்து கொண்டு இருக்கும் பையனை பார்த்து என்ன தோன்றும் ? என்னை பொறுத்தவரை ஒன்றே ஒன்று தான் தோன்றும்.
” இது என்னோடு போகட்டும். நீ இங்கே இருந்து முன்னேறி விடு. நன்றாக வாழ்ந்து விடு மகனே ! “



என்னை கவரும் படங்களுடன் இந்த தொடர் இங்கே தொடரும். புகைப்படம் எடுத்தது யார் / புகைப்படத்தில் இருப்பது யார் என்பது எனக்கு தெரிந்தால் … அவற்றை பகிர்கிறேன். இல்லை எனில் புகைப்படம் மட்டும் பகிர்கிறேன். நோக்கம் …அந்த புகைப்படத்திலிருந்து நாம் கற்பது கற்க வேண்டியது என்ன ? என்பது மட்டுமே !



அடுத்த புகைப்படத்தில் சந்திப்போம். புதியது ஒன்றை உணர்வோம்.


