படமும் கற்றலும் : 002
#படமும்கற்றலும் ; 002



சில புகைப்படங்கள் நம்மை சட்டென்று இருவேறு கால நிலைகளுக்கு அழைத்து சென்று விடும். ‘ அட ‘ என்று மனம் துள்ளி குதிக்கும். ” நானா இது ? ” என்று கேள்வி கேட்கும். ” எப்படி எல்லாம் நாம் இருந்திருக்கிறோம் ? ” என்று கணவன் / மனைவி யை கேட்க வைத்து விடும். ” கடின காலங்களில் எவ்வளவு நம்பிக்கையுடன் நாம் பயணித்திருக்கிறோம் ” என்று எண்ண வைக்கும். அப்படி ஒரு புகைப்படம் தான் twitter ல் பார்த்த இந்த புகைப்படம்.



பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, காதல், வேலை, திருமணம், பிறப்பு, சில எதிர்பாரா இறப்பு, பொருளாதார ஏற்ற இறக்கம், நம்பிக்கை மனிதர்கள், நட்பு, துரோகம், மகிழ்ச்சி, சோகம், வீழ்ச்சி, வெற்றி … என்று அனைத்து உணர்வுகளையும் ஒரு புகைப்படம் சட்டென கொண்டு வந்து நம்மை இப்போதிருக்கும் நிகழ்காலத்துடன் இணைக்க வைக்க முடியும் எனில் … அந்த புகைப்படத்தை பெரும் மந்திரம் என்று சொல்லாமல் என்ன சொல்வது !
” ஹ்ம்ம்.. சட்டுன்னு இத்தனை வருடங்கள் போயிடுத்து ” என்று மனதிற்குள் தோன்றுவதும் .. பெரும்பாலும் கருப்பு வெள்ளை புகைப்படத்தின் ஆளுமைத் திறன். !



ஒரு முறை கோவையில் CCD ( Cafe Coffee Day ) நான் பார்த்த வயதான தம்பதியர் ஒருவர் சொன்னது …
” இருவரும் வருவோம். அமர்ந்திருப்போம். அனைத்தையும் கவனிப்போம். சிரித்துக் கொள்வோம். உலகம் எப்படி மாறிக்கொண்டு இருக்கிறது என்று உணர்வோம். பெரும்பாலும் பேசிக்கொள்ள மாட்டோம். அப்படி பேசினாலும் ” ம் ” ” ஆமா ” பதில் வகை பேச்சு தான் “
நான் அவர்களிடம் கேட்டேன்.
” எது உங்களை தினமும் இங்கே வர வைக்கிறது ? “
அவர்கள் சொன்ன பதில்.
” எப்படி எல்லாம் மாறிவிடுகிறது காலம் – என்று கவனிக்க விரும்புவது “



கால மாற்றத்தை நமக்கு உணர்த்துபவை புகைப்படங்கள். அதிலும் பழைய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் தான் நாம் மறந்த, மறக்க கூடாத, மறக்க விரும்பாத … நிகழ்வுகளின் .. சாட்சி. அவை நமக்குள் ஏற்படுத்தும் ” சட்டென காட்சிகள் ” அந்த கால இனிமை பக்கங்கள். அவற்றை அனுபவிக்க நிகழ்காலத்தின் ஓட்டத்தில் இருந்து விடுபட வேண்டும். யாருமற்ற அறையில் பழைய புகைப்படங்களை பார்ப்பவனின் / பார்ப்பவளின் முகத்தில் தெரியும் ஒளி … வார்த்தைகள் அற்ற கவிதை. ஒலி அற்ற பாடல். காற்று அற்ற அமைதி.
அந்த உலகை அவ்வப்போது தரிசிப்பது மிக மிக நல்லது. பின்னே ? வேரை மறந்த மரங்களை நோக்கி பூக்கள், பழங்கள் மட்டும் அல்ல …பறவைகளும் வருவது இல்லை !
நம்முடைய வேர் பழைய கருப்பு வெள்ளை புகைப்படங்கள். அவற்றை அவ்வப்போது சிறிது நேரம் கவனிப்போம். இப்போது இழந்து இருக்கும் கணவன் மனைவி உறவின் வெட்க / மகிழ்வு / சிறு புன்னகை பக்கங்களை அவை மீண்டும் மீட்டு எடுக்கக்கூடும். அழகாய். ஆழமாய் !


