படமும் கற்றலும் : 003
#படமும்கற்றலும் : 003



எங்கோ படித்ததில் ஒரு வரி ஞாபகத்தில்.
” இத்தனைக்கும் நடுவே பூக்கள் பூக்கவே
செய்கின்றன ! “



ஒரு நகரின் பகுதிகள் சுத்தமாக இடிந்து கிடக்கின்றது. ஆங்காங்கே துப்பாக்கி சூடு, வெடிகுண்டு வெடித்தல், உயிர் பலி, Ambulance, பதற்றம் … அனைத்தும் கண் முன்னே மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருந்தாலும் இவ்வளவிற்க்கும் நடுவே ஒரு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் கை தட்டுகிறார்கள். மகிழ்கிறார்கள். பிறந்த தின வாழ்த்து பாடல் பாடுகிறார்கள். நம்பிக்கை Cake ஆக அனைவரின் உடலிலும் சுவையாகி கலக்கிறது.
ஆம். இந்த நம்பிக்கை தான் எவ்வளவு முரண் அழகு நிறைந்தது !



வாழ்க்கை நமக்கு சவால்களை மட்டும் கொடுக்கவில்லை. பெரும் கேள்விகளையும் எழுப்பி நம் நம்பிக்கையை சோதித்து கொண்டே இருக்கிறது. ஏதோ இரு நாடுகளுக்கு இடையே எண்ணம் சீராக இல்லை. ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்ரமித்தல் போல வன்முறையின் உச்சம் எதுவும் இல்லை. அப்படியான வன்முறையில் வாழ்க்கை காற்றில் பறக்கும் கிழிந்த காகிதம் போல … இங்கும் அங்கும் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த வன்முறை நம்மை என்ன செய்யும் ?
1. உயிர் பயம்
2. அடிப்படை ஆதாரம் அழியும் பயம்
3. எதிர்காலம் பற்றிய பயம்
இந்த மூன்றையும் நமக்குள் ஏற்படுத்தும்.
ஆனாலும் … நம்பிக்கை மட்டுமே நமக்கு பயத்தை எதிர்த்து வாழும் … வாழ்க்கை முறையை அளிக்கும்.



இந்த புகைப்படத்தில் பின்னே தெரியும் இடிந்து போன கட்டிடத்தில் யாரோ பலர் / ஒருவர் இறந்து போயிருக்கக்கூடும். யாரோ ஒருவரின் / பலரின் கனவு முடிந்திருக்கக்கூடும். யாரோ ஒருவரின் / பலரின் தலைமுறை அழிந்து போயிருக்ககூடும். ஒரு குழந்தையின் / பல குழந்தைகளின் ஓவியம் சுக்கு நூறாக உடைந்து போயிருக்கக்கூடும். ஒரு பதின்ம வயது / பல பதின்ம வயது குழந்தைகளின் புத்தகப் பை மண்ணோடு மண்ணாக அழிந்து போயிருக்க கூடும். ஒரு யுவதியின் / ஒரு யுவனின் காதல் சொல்லாமலே அழிந்து போயிருக்கக்கூடும்.
இவ்வளவிற்க்கும் இடையில் ஒரு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது எனில் … அதற்கு பின் இருக்கும் சிரித்து கடக்கும் நம்பிக்கை மேல் சொன்ன அனைத்தையும் சந்திக்கும்.
அனைத்திற்கும் சவால் விடும். அனைத்தையும் காலத்தின் துணையோடு வலுவிழக்க செய்யும். அனைத்தின் துயர பக்கங்களையும் சரி செய்யும்.
அதுவரை …
அந்த சிரித்து கடக்கும் நம்பிக்கையை சுவாசித்துக்கொண்டே முன்னேறுவோம். வாழ்க்கை சிரித்து கடக்கும் நம்பிக்கை மனிதர்களை எப்போதும் வரவேற்றுக்கொண்டே இருக்கிறது. சிரித்து கடக்கும் நம்பிக்கை மனிதர்கள் புன்னகைத்து முன்னேறுவது ஒரு பெரும் தலைமுறைக்கு, வரப்போகும் நல் எதிர்காலட்த்தின் நேர்மை அறிகுறி.
அப்படியான ” சிரித்து கடக்கும் நம்பிக்கை ‘ நம் முகத்தில் இருக்கிறதா ?
அப்படி இல்லை எனில் … புகைப்படத்தை மீண்டும் பார்ப்போம். அந்த ” சிரித்து கடக்கும் நம்பிக்கை ‘ நமக்குள் வந்தே தீரும்.


