படமும் கற்றலும் : 005
#படமும்கற்றலும் ; 005
” ஆனந்த கூத்தாட தயங்கும் நாம் தான் சட்டென அழுது வடிகிறோம். நல்லவற்றிற்கு தயக்கமும், எதிர்மறைக்கு ஒப்புமையும் மனிதனின் சாபக்கேடு ! “



அந்த புகைப்படம் Twitter ன் browser ஐ சட்டென்று நிறுத்தி விட்டது. ஆம். மழை எப்போதும் அழகு. பெரும் மழை நிறைவான உணர்வை கொடுத்து அக அழகை உருவாக்கும். சிறு தூறல் புற நனைவை கொடுத்து, புன்னகை முகத்தை ” நீயே வைத்துக்கொள் ” என்று முணுமுணுத்து கொண்டே நம்மை கடக்கும். எந்த ஒரு ஊரும் மழைக்கு பின் அழகு. ஆம். எந்த ஒரு ஊரும் !
மழையின் இன்னொரு அழகு மொட்டை மாடி ! எல்லையற்ற வான் நோக்கி எல்லைக்குள் இருந்துகொண்டு மனிதன் பார்க்க ஏதுவான ஒரு முகப்பு தான் மொட்டை மாடி. அங்கே இருந்து மழை பார்ப்பது போல மகிழ்வில்லை. பொறுமை இழந்து தரை தரை நோக்கி வரும் மழையை கொஞ்சம் அவசரப்பட்டு சந்திக்கும் இடம் தான் மொட்டை மாடி. மொட்டை மாடியில் தெறிக்கும் தூறல்களுக்கு கவிதைகள் நெருக்கம். Coffee மிக நெருக்கம். கொஞ்சம் தனிமை, கொஞ்சம் coffee, கொஞ்சம் கவிதை, மொட்டை மாடியின் பெரும் மழை … என்பது பெரும் வாழ்வின் சிற்றின்பம். அனைத்தும் அந்த மழை நின்றவுடன் சட்டென தீர்ந்து போகும் !



அதே மொட்டை மாடியில் இன்னொரு எழுதப்படா கவிதை தான் இந்த புகைப்படம். யாரோ மூன்று பெண்கள் கை பிடித்து ( சா பூ த்ரி யாக இருக்குமோ ! ) விளையாடும் அந்த அழகை படம் படித்த கைகளுக்கு எம் வார்த்தைகளின்
வாழ்த்துக்கள்
. சில புகைப்படங்கள் ஓவியங்கள். ஓவியமா கவிதையா என்று கேட்க தோன்றும் அளவுக்கு அழகு அவை. ( Anuthama Radhakrishnan – sahasra வை இந்த புகைப்படத்தை ஓவியமாக வரைய சொல்லுங்கள். அந்த ஓவியத்தை விலைக்கு வாங்க காத்திருக்கிறேன் ! ). யார் அந்த மூன்று பெண்கள் ? அவர்களுக்கு இந்த உலகின் கவலைகள் ஏதும் இல்லையா ? அரசியல், நோய், இறப்பு, இலாபம், வெற்றி, தோல்வி, துக்கம், பிறப்பு, களவு, கனவு, துன்பம், நயவஞ்சகம் .. இவை அனைத்தும் அவர்களின் உலகில் இருக்க வாய்ப்பில்லையா ? இல்லை .. அவை இருந்தும் அவர்கள் இப்படி ஒரு மழைப்பொழுதை மகிழ்வாக கொண்டாடுகிறார்களா ? இதே உலகில் இருந்து கொண்டு, மொத்த ஊரும் மழை வரும் வேளையில் வீட்டிற்கு உள்ளே அடங்கி கிடக்க .. எப்படி இந்த மூவருக்கு மட்டும் ” வெளியே வா ” என்ற குரல் கேட்டது !?.



இந்த புகைப்படத்தில் காட்சியில் இல்லாத ஆனாலும் அந்த மூவரை போல மகிழும் ஒருவன் / ஒருத்தி யும் இருக்கிறார். ஆம். ஒரு புகைப்பட கற்றாலனாக அவனை அவளை எனக்கு மிக பிடிக்கும். ஆறு கரங்கள் / முப்பது விரல்கள் பற்றிக்கொண்ட மகிழ்வு நொடியினை தூர இருந்து கவனித்து ஒரு Frame ல் கொண்டு வர அவனால் அவளால் மட்டுமே முடியும். இல்லாது ஆனால் இருக்கும் அந்த ஆளுமையும் இந்த புகைப்படத்தின் பெரும் அச்சாணி.



வாழ்க்கை பக்கம் பக்கமாக விடிந்து கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் மகிழ்ச்சி முதல் துக்கம் வரை வரிகள் invisible ஆக நகர்ந்து கொண்டே இருக்கும். மகிழ் வரிகளை படிப்பவன் / படிப்பவள் வாழ்க்கையை கொண்டாடுகிறாள். மற்றவர்கள் ? … ஹ்ம்ம். இருக்கவே இருக்கிறது அவர்களுக்கு – எது சரியில்லை என்பதை கண்டுபிடித்து விவாதிக்க நாள் முழுக்க நேரம் !
சரி … அதெல்லாம் இருக்கட்டும். அந்த invisible வரிகளில் நீங்கள் இன்று ( இன்று முதல் ! ) எதை படிக்க போகிறீர்கள் ? மகிழ் வரிகள் என்பது உங்களின் பதில் எனில் … எங்கோ இரு கைகள் சா பூ த்ரி விளையாட காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே இணையலாம். மழை ?. மகிழ் வரிகளை படிப்பவர்களுக்கு மட்டுமே அது கண்ணுக்கு தெரியும் !
மற்ற வரிகளை படிப்பவர்களுக்கு .. ? வாழ்க்கையின் பக்கங்கள் Just an add – on. Simply A Compounded Waste !


