படமும் கற்றலும் : 006
#படமும்கற்றலும் ; 006
” வாழ்வியல் மாறும்போதும் உடன் நின்றால் அது காதல் ! “



Twitter ல் சட்டென முன்னோக்கி நகர்ந்த அந்த புகைப்படம் அதை விட வேகமாக என்னை பின்னோக்கி இழுத்தது. பதின்ம வயதுகளில் அப்படி ஒரு படம் பார்த்தவர்களுக்கு உணர்வுகள் எப்படியெல்லாம் இருந்திருக்ககூடும் ! ?
மணிரத்னம் இளையராஜா PCஸ்ரீராம் நாகார்ஜுனா கிரிஜா … என்று ஒரு பெரும் திறமை சார் ஆளுமைகள் ஒரே களத்தில் இயங்கினால் …. அதுவும் காதல் என்கிற பக்கத்தை கையில் எடுத்துக்கொண்டு இயங்கினால் … என்ன கிடைக்கும் என்று கேட்டால் .. தாராளமாக இதயத்தை திருடாதே வை சொல்லலாம். ” ரோஜா ” வை பார்த்து வியக்கும் வட்டம் இதயத்தை திருடாதே வை பார்க்க வேண்டும். வேர் அங்கிருந்து வருகிறது !



ஓ பிரியா ப்ரியா அப்போதெல்லாம் கிட்டத்தட்ட தேசிய கீதம். Musicals என்ற பெயர் பலகையை வைத்திருந்த அத்துணை கடைகளிலும் இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். எனக்கு பக்கத்தில் அமர்ந்து படம் பார்த்த ஒரு அன்றைய கால இளைஞன் கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டு இந்த பாடலை பார்த்தது எனக்கு இன்னமும் நினைவில் ! ” ஏக்கம் என்ன பைங்கிளி ….என்னை வந்து சேரடி .. ” என்ற வரியில் அந்த இளைஞன் உடைந்து அழுது வெளியேறியதை கொஞ்சம் பார்த்து அதிர்ந்த போது … சில நொடிகளுக்குள் அந்த பாடலின் அதிர்வுமீண்டும் என்னை படத்திற்குள் இழுத்துக்கொள்வது எல்லாம் இளையராஜா என்கிற பண்ணைபுர மேய்ப்பரால் மட்டுமே சாத்தியம் !



முத்தக் காட்சி எல்லாம் அப்போது A வகை. முத்த காட்சி வந்தால் என்ன செய்வது என்று குடும்பம் தடுமாறுவதை அப்போதெல்லாம் பார்க்க முடியும். ( பின்னாளில் தாவணி கனவுகளில் பாக்யராஜ் இதை ஒரு காட்சியாகவே வைத்திருப்பார் ! ). அப்படி ஒரு காலகட்டத்தில் ஓம் நமஹ பாடல் எவ்வித உணர்வு வன்முறையும் இன்றி நமக்குள் இறங்கும். நிறைய பதின்ம வயதுகளுக்கு ” ஓ இதுதான் முத்தமோ ? சரி .. அதனால் என்ன ? ” என்பது போன்ற காட்சி அமைப்பு அது. காதலில் மரணம் வரப்போகிறது என்று தெரிந்து விட்டால் .. முத்தங்கள் புனிதமாகி போகும். மரணம் என்றில்லை … காதலில் கடின தருணங்கள் வந்தால் முத்தம் ஒரு வாழ்வியல் ஆறுதல் என்பது அப்படி வந்தவர்களுக்கு புரியும்.



PC ஸ்ரீராம் க்கு “குறை வெளிச்சங்களின் காதலன் ” என்று ஒரு பட்டமே வழங்கலாம் அப்படி ஒரு special lighting படம் முழுக்க. ஸ்ரீராம் வந்த பின் பேசாதே …காட்சிப்படுத்து என்பது அதிகமாகி போன ஒன்று !
ஒரு வருத்தம் எனக்கு பின்னாளில் உண்டு. SPB க்கு இந்த படத்தின் பாடல்கள் கிடைத்திருக்க வேண்டும். மனிதர் வேறு உயரத்திற்கு கொண்டு சென்றிருப்பார்.



கண் அசைவுகளால் / சிறு பாவனைகளால் பேசும் கதாநாயகிகள் மிக மிக அரிது. கிரிஜா அப்படியான ஓர் நடிகை. அப்படி அரிது நடிகைகள் ஒரு சில படங்களுடன் முடித்து கொள்வது ஏன் ? என்ற கேள்வி எனக்கு எப்போதும் உண்டு !



இன்று நிச்சயம் பதின்ம வயது ஞாபகங்கள் உள்ளே புகைந்து வெளியே நெருப்பாக வரும். மறக்க முடியா நாட்கள் அவை !
என்ன உங்களுக்கும் அந்த பசும் நாட்கள் ஞாபகத்தில் வருகிறதா ?