படமும் கற்றலும் : 010
#படமும்கற்றலும் ; 010
” அருகில் இருந்து புரிந்தால் சிறப்பு. விலகி இருந்து புரிந்தால் மிகச் சிறப்பு. “



” மார்பு கூட்டின் கதகதப்பு, உடலுக்கு வசமான அரவணைப்பு, மனம் பேசும் வார்த்தைகள், தலை வருடல், கன்னத்தின் மென்மை மேன்மை, எதிர் மூச்சுக்கு மிக அருகில் சுவாசிப்பது, நடு நெற்றியில் சில Vertical Horizontal கோடுகள் ….”
இவையெல்லாம் உறவின் ஒரு பகுதி என்றால் …
” இன்னமும் சந்தித்தது இல்லை, எண்ணங்களை கவனிப்பது , பின்னூட்டங்களால் புரிந்து கொள்ளப்படுவது, புரிந்து கொள்வது, பெரும் களத்தை அறிமுகப்படுத்துவது, திறமையை அடுத்த உயரம் கொண்டு செல்வது ….”
இவையெல்லாம் உறவின் இன்னொரு பகுதி !



” என் கணவருக்கு கோபம் வரும்போது இடது கண் மூன்று முறை துடிக்கும் ” என்று அருகில் இருந்து கவனித்து பெருமையாக சொன்னால் ..
” அவருக்கு கோபம் வரும்போது எல்லாம் புதியதாக ஒன்றை கண்டுபிடிப்பார் ” என்று தொலைவில் இருந்து கவனிப்பதும் பெருமையே !
” நகம் வளர்ந்திருக்கு பாருங்க ” என்று சொல்லும் உறவை போல .. ” இதே வேகத்தில் உங்கள் திறமை இருந்தால் 05 வருடத்தில் சிறப்பான நிலையை அடைவீர்கள் ” என்கிற உறவும் முக்கியமான ஒன்று !



இலையை கூர்ந்து கவனிப்பவர்கள் மரத்தை கவனிக்க தவறுவதும், மரத்தை கவனிப்பவர்கள் இலையை தனித்தனியாக கவனிக்க விட்டுவிடுவதும் வாழ்வின் இரு பக்க கண்ணாடி. இரண்டிலும் காண்பது ஒன்றே ! பரிமாணம் மட்டுமே வித்தியாசம்.
ஆனாலும் ..
தூர இருந்து புரிதலில் …




மிக அழகாக மிளிரும்.
அருகில் இருத்தலில் உடல் சௌகர்யங்கள் நிறைய. மன சவால்களும் நிறைய. ” தள்ளி படு. வியர்க்குது ” என்று சொல்லும்போது நொடிப்பொழுதில் காணாமல் போகிவிடுகிறது நுண் அன்பு.
எப்படியான உறவு என்றாலும் கொஞ்சம் விலகி இருந்து .. அந்த உற்வின் வானவில் உணர்வுகளை ஒவ்வொன்றாய் சுவைக்கலாம். இடைவெளி இப்போது மட்டும் அல்ல… எப்போதும் ஆரோக்கிய சுவாசத்திற்கு நல்லது.
அன்பை இடைவெளிகளால் நிரப்பிவிட்டு … வாழ்வின் பெரும் பக்கங்களை கவனிப்போம்.
கவனிப்போமா ?


