படமும் கற்றலும் : 013
#படமும்கற்றலும் ; 013
” நினைவுகளில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. மகிழ்ந்தவை நல்லவை. மற்றவை தேவையற்றவை. அவ்வளவே “



அந்த Tickets களை பார்க்கும்போது .. மனம் பழைய நினைவுகளுக்கு சென்றது. முதன் முதலில் அப்படி சினிமா கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து பார்த்தது நினைவில். 25 காசு என்று ஞாபகம். அப்போதெல்லாம் படம் ஓடுவது தியேட்டருக்கு அருகில் சென்றாலே காதில் கேட்கும். பகலில் வாசலை மூடுவதற்கு பெரும் Screens இரவில் Screens எடுத்து விடப்பட்டு காற்றோட்டமாக இருக்கும். கைதட்டல்கள் வெளியே கேட்கும். அது பலரை கொட்டகை நோக்கி இழுக்கும் விளம்பரமாக அமையும்.



MGR படங்களுக்கு பெரும் வரவேற்பு இந்த கொட்டகையில் இருந்து தான் வர ஆரம்பித்தது. ( இப்போது இருக்கும் Multiplex ல் அவரின் படங்கள் வந்திருந்தால் அவர் நம்மிடம் இருந்து அந்நியப்பட்டு இருந்திருப்பார் ! ). அதே போல சிவாஜி படங்களும் ! நாகேஷ் திரையில் தோன்றும்போது கொட்டகையில் அனைவரும் சிரிப்பதை பார்த்தால் … நாம் ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினராக தோன்றும். ” ஏய். நாகேஷ் வந்தாச்சு ” என்று அருகில் சிரித்து சொல்வது பெரியப்பா சித்தப்பா போல ஒரு உணர்வு இருக்கும்.



சமயத்தில் Power போய்விட்டால் .. மக்கள் வெளியேறி நடக்க வெளியில் அப்படியே நடந்துகொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்கள். ” Generator போட்டுருவாங்க ” என்று ஒரு அழகான புரிதல் இருக்கும். ” நல்லார்க்கீகளா ” என்று அருகாமை உறவுகளை பார்த்து கேள்வி கேட்டு நலம் விசாரிக்கும். அனைத்தும் சரியானவுடன் ” படம் போட்டாச்சு வாங்கப்பா ” என்று யாரோ ஒருவர் அனைவருக்காகவும் குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே செல்வார்.
” இவன் வந்துட்டான். போச்சு .. ” என்று நம்பியாரை பார்த்து சொன்ன கிழவிகளை நான் கவனித்து இருக்கிறேன். ” பொல்லாத பய ” என்னும் வார்த்தையில் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு இருக்கும். ” எதையாவது செய்து குடும்பத்தை பிரிப்பான் ” என்று ஜாக்கிரதை பாடம் நடத்திய கிழவிகள் இன்று இருக்க வாய்ப்பில்லை. ( இருக்கும் சிலரும் Serial களில் முடங்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன் ! )



அப்போதெல்லாம் காளி மார்க் Soda வும், விரலில் சுற்றிக் கொள்ளும் அப்பளமும், Love 0, Live 0 .. போன்ற பானங்களும் தான் Coke Pepsi எல்லாம். அந்த நிறுவனங்கள் என்ன ஆயின என்று எனக்கு கேள்வி உண்டு ! காளி மார்க் அங்கே இங்கே பார்க்கிறேன். மற்றவை அனைத்தும் காணோம் ! கெடுதல் என்றால் கூட Multi National Drinks சாப்பிட்டு கெடுபவர்கள் நாம் !



படம் முடிந்து வெளியேறும்போது .. அந்த படத்தின் நல்லவை கெட்டவை எல்லாம் பேசப்படும். Director இருந்தால் திருத்தி கொள்வார். ” ஒரு 20 நிமிஷம் Waste பண்ணிட்டாங்க. மற்றபடி நல்ல படம் ” என்று சிரித்துக்கொண்டே அருகில் இருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டே சென்றது தான் இன்று Review ஆக உருமாறி இருக்கிறது – ஆள் அற்ற கணினி திரையை பார்த்துக்கொண்டு ! அதுவே நாகரீகம் முன்னேற்றம் என்றெல்லாம் இந்த சமூகம் பெருமைப்படுகிறது.
இந்த Multiplex முன்னேற்றத்தில் நாம் தொலைத்திருப்பது அருகாமை மனிதர்களை ! மனித யதார்த்தங்களை ! சக தோழமை பேச்சுகளை ! படம் பார்த்துவிட்டு எழவு வீட்டில் இருந்து எழுந்து வருவது போல வரும் மக்களை பார்க்கும்போது ” சினிமா கொட்டகை ” ஞாபகங்கள் எனக்குள். மீண்டும் அவை வர வாய்ப்பில்லை. பரவாயில்லை. அவை எனக்குள்ளேயே இருக்கட்டும். நல்ல நினைவுகளாக !





